
இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சாம்பார், சட்னி இவை இரண்டும் எப்படி அருமையாக இருக்குமோ அதுபோல வடைகறி செய்து சாப்பிட்டாலும் அதன் சுவையும் மிகவும் சூப்பராக இருக்கும். ஆனால் சட்னி, சாம்பாரை பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட முடியாது. இந்த வடைகறியை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்துவிதமான டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். ஆனால் இந்த வடகறியை பெரும்பாலும் வீடுகளில் செய்வதில்லை. இதனை செய்வதற்கு சற்று நேரம் அதிகமாகும் என்பதால் இதனை தவிர்த்து விடுகிறார்கள். ஆனால் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். எப்பொழுதும் செய்யும் நேரத்தை விட மிகவும் குறைவான நேரம் தான் செலவாகும். வாருங்கள் இந்த சுவையான வடைகறியை எப்படி எளிமையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
கடலைப் பருப்பு – 200 கிராம், இஞ்சி பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், பட்டை சிறிய துண்டு – ஒன்று, கிராம்பு – 2, பிரியாணி இலை – ஒன்று, எண்ணெய் – 5 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 7, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, புதினா – ஒரு கைப்பிடி, வரமிளகாய் – 2.
செய்முறை:
முதலில் 200 கிராம் கடலைப்பருப்பை சுத்தமாக கழுவி, தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் 2 வரமிளகாய் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
அடுப்பின் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள கடலை மாவை தோசைக் கல்லின் மீது அடை போன்று தட்டிவிட வேண்டும். பிறகு அதன் மீது அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவேண்டும். ஐந்து அல்லது ஏழு நிமிடத்திற்கு பிறகு இதனை திருப்பிப் போட்டு இருபுறமும் சிவந்ததும் தனியாக எடுத்து ஆற வைக்க வேண்டும்.
பின்னர் இந்த அடையை பொடியாக உதிர்த்து வைக்க வேண்டும். பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் சோம்பு, பட்டை, பிரியாணி இலை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றுடன் தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் இவற்றையும் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் 5 அல்லது 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு உடைத்து வைத்த அடையும் சேர்த்து கலந்து விட்டு, குக்கரை மூடி ஒரு விசில் வைத்தால் சுவையான வடைகறி தயாராகிவிடும்.