- Advertisement -
சமையல் குறிப்புகள்

இன்ஸ்டன்ட் தக்காளி கடையல் செய்வது எப்படி?

- Advertisement -

காலையில் எழுந்ததும் என்னடா சட்னி செய்வது? என்று புலம்ப ஆரம்பிக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த தக்காளி கடையல் ஒரு வரப்பிரசாதமாக அமையும். குக்கர் இருந்தால் போதும் இரண்டு விசிலில் சட்டுன்னு தயார் செய்துவிடலாம். இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தக்காளி கடையல் ருசியாக எப்படி செய்வது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

தக்காளி கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
- Advertisement -

  • சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 25
  • தக்காளி – நான்கு
  • பூண்டு – ஆறு பற்கள்
  • பச்சை மிளகாய் – இரண்டு
  • குழம்புத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • பச்சரிசி மாவு – ஒரு ஸ்பூன்
  • கருவேப்பிலை – தேவையான அளவு
  • மல்லித்தழை – சிறிதளவு

தக்காளி கடையல் செய்முறை விளக்கம்:

தக்காளி கடையல் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முந்தைய நாளே நீங்கள் சின்ன வெங்காயத்தை உரித்து வைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும். சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் பொழுது இந்த கடையல் ரொம்பவே ருசியாக இருக்கும். முதலில் குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்து வந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

கடுகு பொரிந்து வந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தோலுரித்த பூண்டு பற்களை ஒன்றிரண்டாக நசுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வறுபட்டவுடன் தோல் உரித்து வைத்துள்ள வெங்காயத்தை அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை நன்கு சிவக்க வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளையும் சேர்த்து மசிய வதக்க வேண்டும்.

- Advertisement -

இவை மசிய வதங்கி வந்தவுடன் குழம்பு மிளகாய் தூள் அல்லது அதற்கு பதிலாக சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் காரத்திற்கு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒருமுறை நன்கு கலந்து கொள்ளுங்கள். மசாலாவின் பச்சை வாசம் போக வதக்கியவுடன் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வரவேண்டிய பணம் வர பரிகாரம்

குழம்பு நன்கு கொதித்ததும் குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு எடுத்தால் போதும் மணக்க மணக்க தக்காளி கடையல் தயாராக இருக்கும். இதில் மேலும் சுவை கூட்ட மற்றும் திக்கான கிரேவியாக மாற்ற சிறிதளவு பச்சரிசி மாவை அரை கப் தண்ணீரில் கலந்து சேர்த்து ஒரு முறை நன்கு கொதிக்க விடுங்கள். பச்சரிசி மாவிற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவையும் நீங்கள் சேர்க்கலாம். ஒரு கொதி வந்தவுடன் நறுக்கிய மல்லித்தழை மற்றும் கருவேப்பிலை இலைகளை தூவி சுடச்சுட இட்லி, தோசை உடன் பரிமாறி பாருங்கள் எவ்வளவு இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்.

- Advertisement -