
இந்த மாதம் முழுவதுமே அசைவம் சாப்பிடாமல் பல பேரும் விரதத்தில் இருப்பார்கள். பெரியவர்களுக்கு இந்த விரதம் எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் வீட்டில் உள்ள குழந்தைகள் கொஞ்சம் அலுத்து தான் போவார்கள். இது போன்ற சமயங்களில் இப்படி அசைவம் சேர்க்காமல் ஆனால் அதே போன்று சுவையில் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். நமக்கும் என்ன செய்வது என்று குழப்பம் இல்லாமல் ஏதோ குழந்தைகளுக்கு பிடித்த சமையலை செய்து கொடுத்த திருப்தியும் இருக்கும். வாங்க இந்த சைவக் கறி குழம்பை எப்படி செய்யலாம் தெரிஞ்சுக்கலாம்.
தேவையான பொருட்கள்: முழு தனியா -1 ஸ்பூன், சீரகம் – 2 ஸ்பூன், கடலை பருப்பு -1 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 5,சோம்பு – 1 ஸ்பூன், பட்டை – 1,நட்சத்திர பூ – 1, பூண்டு தோல் உரித்தது – 5 பல், பெரிய சைஸ் வெங்காயம் – 1 தனியா தூள் – 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் -1 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு – ஸ்பூன், எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1கொத்து.
முதலில் இந்த குழம்பிற்கு தேவையான மசாலா அரைத்துக் கொள்வோம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் சீரகம், சோம்பு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் துருவிய தேங்காய் அனைத்தையும் லேசாக வறுத்து எடுத்து தனியே ஒரு தட்டில் எடுத்து ஆற வைத்து விடுங்கள்.
அடுத்து இத்துடன் இன்னொரு மசாலா அரைக்க வேண்டும். அதற்கு அதே பேனை மறுபடியும் அடுப்பில் வைத்து இன்னும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் போட்டு வதக்கிய பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வதங்கிய பிறகு இதையும் தனியே எடுத்து ஆறவைத்து விடுங்கள்.
இப்போது முதலில் வறுத்த மசாலாவையும், அடுத்து வறுத்த வெங்காயம், தக்காளி விழுதையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக நைசான பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது குழம்பை தாளித்து விடுவோம். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள் இல்லை ஏதாவது ஒரு அடி கனமான பாத்திரம் இருந்தாலும் வைத்துக் கொள்ளுங்கள்.அதில் எண்ணெய் ஊற்றி பட்டை நட்சத்திர பூ, சோம்பு, சீரகம் கறிவேப்பிலை சேர்த்து அறிந்து வைத்த பெரிய சைஸ் வெங்காயத்தையும் சேர்த்து பூண்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு இவைகளை சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு அரைத்து வைத்த மசாலா விழுது இதில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மூடி வைத்து குழம்பை கொதிக்க விடுங்கள்.
இந்த குழம்பு சற்று கெட்டியாக தான் இருக்க வேண்டும் எனவே தண்ணீரின் அளவை பார்த்து ஊற்றிக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடத்தில் குழம்பு நன்றாக கொதித்து விடும். இவை அனைத்தையும் ஏற்கனவே நாம் வதக்கி அரைத்து இருப்பதால், அதிக நேரம் கொதிக்க வேண்டிய அவசியம் இல்லை பத்து நிமிடத்தில் கொதித்து எண்ணெய் நன்றாக பிரிந்து வந்தவுடன் குழம்பு அடுப்பிலிருந்து இறக்கி விடலாம்.
இதையும் படிக்கலாமே: புதிதாக சமையல் பழகுறவங்க கூட இந்த டிப்ஸ் பாலோ பண்ணா ஈசியா புல்கா செஞ்சிடலாம்.
ஒரு சுவையான சூப்பரான சைவ குழம்பு உங்கள் பிள்ளைகளுக்கு செய்து கொடுத்து அசத்துக்கள். இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற ஒரு சூப்பர்னா சைவ கறி குழம்பு.