
ஒவ்வொருவரும் தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து எப்படி இருக்கும் என்ற பயத்துடன் தான் வாழ்வார்கள். அப்படி வாழக்கூடியவர்களால் துணிந்து எந்தவித செயலையும் செய்ய முடியாமல் இருக்கும். பயம் நீக்கி துணிச்சலுடன் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுகிறார்களோ அந்த காரியத்தில் தான் அவர்களால் வெற்றியை பெற முடியும். அந்த எதிர்கால பயம் நீங்கவும், தேவையற்ற வீண் கவலைகளால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு அந்த கவலைகளை நீக்கவும் கால பைரவரை நினைத்து அஷ்டமி தினத்தில் வீட்டில் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காலபைரவருக்கு உகந்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. இந்த அஷ்டமி திதி என்பது சனிக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது என்பது கூடுதல் விசேஷம். சனிக்கிழமை என்பது சனிபகவானுக்குரிய கிழமையாகும். சனி பகவானுக்குரிய குருவாக கால பைரவர் திகழ்கிறார். மேலும் அஷ்டமி என்பது எட்டாவது திதியாக கருதப்படுகிறது. இது கார்த்திகை மாதத்தில் எட்டாவது நாளில் வருகிறது என்பது கூடுதல் சிறப்பு மிகுந்ததாகவே கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு மிகுந்த இந்த அஷ்டமி தினத்தன்று கால பைரவரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அஷ்டமி தினத்தன்று கால பைரவரை நாம் ஆலயத்திற்கு சென்று வழிபாடும் செய்யலாம். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். வீட்டில் வழிபாடு செய்வதற்கு கால பைரவரின் சிலையோ படமோ வேண்டும் என்ற எந்தவித நிபந்தனையும் கிடையாது. கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி தினத்தன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது காலை 7:45 இல் இருந்து 8:45 வரை அல்லது மதியம் 12:15 இல் இருந்து 1:15 வரை அல்லது மாலை 5 30 விருந்து 8:30 வரை இந்த நேரங்களில் எந்த நேரம் உங்களுக்கு வசதியான நேரமோ அந்த நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
இந்த வழிபாட்டை நாம் பூஜை அறையிலும் செய்யலாம், சமையல் அறையிலும் செய்யலாம், வீட்டின் மையப்பகுதியான வரவேற்பு அறையிலும் செய்யலாம். இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டிற்கு ஐந்து என்று எண்ணிக்கையில் சந்தன குங்குமம் வைத்துக்கொள்ளுங்கள். பிறகு 5 அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கிருக்கும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இதை வடக்கு பார்த்தவாறு அந்த தாம்பாளத்தில் வைக்க வேண்டும். பிறகு இந்த அகல் விளக்கிற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஒரு அகல் விளக்கில் நெய். ஒரு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய், ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய், ஒரு அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஒரு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் என்று ஐந்து வகையான எண்ணெய்களை ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் கால பைரவர் எழுந்தருள்வார் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்திற்கு முன்பாக உப்பு சேர்க்காத தயிர் சாதத்தை கால பைரவருக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு கால பைரவருக்குரிய இந்த மந்திரத்தை முழுமனதோடு காலபைரவரை நினைத்து உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்
ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்
இந்த தீபமானது குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எரிய வேண்டும். இந்த மந்திரத்தை கூறி முடித்த பிறகு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். தயிர் சாதத்தை குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும்.
இதையும் படிக்கலாமே:23-11-2024 பைரவ அஷ்டமி குளிக்கும் முறை
இந்த முறையில் பஞ்ச தீபம் ஏற்றி வைத்து காலபைரவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலம் தொடர்பான அனைத்து பயங்களும் நீங்கி தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.