- Advertisement -

குலதெய்வ வழிபாடு என்பதுதான் முதன்மையான வழிப்பாடாக திகழ்கிறது. இந்த குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களுடைய வாழ்க்கையில் எந்தவித தடைகளோ தாமதங்களோ ஏற்படாது என்றும் தீய சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. நம்மையும் நம்முடைய குலத்தையும் காக்கக்கூடிய அற்புதமான தெய்வமாக திகழக்கூடிய இந்த குலதெய்வத்தை என்றென்றும் நம் வீட்டில் நிறைந்திருக்க என்ன செய்யலாம் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொருவருக்கும் கண்டிப்பான முறையில் குலதெய்வம் என்ற ஒன்று இருக்கும். அப்படி குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் பழனி முருகனையோ பெருமாளையோ, குலதெய்வமாக நினைத்து வழிபடலாம். இப்படி நாம் குலதெய்வத்தை மனதார வழிபடும் பொழுது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று முறையான குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி தினங்களிலும் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை தினத்தில் வழிபடுவது சிறப்பு.

- Advertisement -

இவ்வாறு குலதெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபாடை மேற்கொண்டு விட்டு எந்தெந்த பொருட்களை வீட்டிற்கு எடுத்து வந்தால் குலதெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்று பார்ப்போம். குலதெய்வ கோவிலில் இருந்து நாம் எந்த பொருட்களை வேண்டுமானாலும் குலதெய்வத்தின் அனுமதி பெற்று எடுத்து வரலாம். இதில் எந்த வித தவறும் இல்லை. மற்ற கோவில்களுக்கு சென்று எடுத்து வரும் பொழுது அதில் சில நிபந்தனைகள் இருக்கும். ஆனால் குலதெய்வ கோவிலில் இருந்து மட்டும் நாம் எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்து வரலாம். அதிலும் குறிப்பாக சில பொருட்களை நாம் எடுத்து வந்து நம் வீட்டில் வைத்தோம் என்றால் குலதெய்வத்தின் அருள் நம் வீட்டில் நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த பொருட்களில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்வதுதான் குலதெய்வ கோவிலில் இருக்கக்கூடிய புற்றுமண் அல்லது கரையான் புற்றுமண். குலதெய்வ கோவிலில் புற்று மண்ணோ கரையான் மண்ணோ இருந்தால் அதை எடுத்து வந்து நான்கு துணிகளாக மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் இந்த மண்ணை வைத்து மூட்டையாக கட்டி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வீட்டில் இருக்கக்கூடிய நான்கு மூலைகளிலும் ஆணி அடித்து மாட்டி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக வீட்டில் நிறைந்திருக்கும்.

- Advertisement -

அடுத்ததாக பூஜை அறையில் வைக்க வேண்டும் என்றால் குலதெய்வ கோவிலின் மண்ணை எடுத்து வந்து அந்த மண்ணை பிள்ளையார் பிடித்து வைத்து குலதெய்வமாக பாவித்து வழிபடுவதன் மூலம் அந்த வீட்டில் குலதெய்வத்தின் அருள் நிறைந்திருக்கும். குலதெய்வ கோவிலின் எல்லைக்குட்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் மண்ணை எடுக்கலாம்.

அடுத்ததாக குலதெய்வ கோவிலில் இருக்கக்கூடிய தல விருச்சத்தில் இருக்கும் பட்டை அல்லது வேரை எடுத்து வந்து அதை மஞ்சள் துணியில் கட்டி அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நம்முடைய பணம் சேர்த்து வைக்கும் இடத்தில் நாம் வைத்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய செல்வத்திற்கு பாதுகாப்பாக குலதெய்வம் வீற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வீட்டிற்கு அருகிலேயே குலதெய்வ கோவில் இருக்கும் பட்சத்தில் வாரத்திற்கு ஒருமுறை கோவிலுக்கு சென்று எலுமிச்சம் பழத்தை பாதத்தில் வைத்து வாங்கி வந்து வீட்டில் வைப்பது அல்லது தலை வாசலில் வைப்பது என்பது மிகவும் சிறப்பு. பழைய எலுமிச்சம் பழத்தை அடுத்த வாரம் கோவிலுக்கு செல்லும் முன்பே கோவிலிலேயே கொண்டு போய் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நேர்மறை ஆற்றலாக மாற்ற உதவும் தீபம்

இந்த எளிமையான பொருட்களை குலதெய்வ கோவிலில் இருந்து எடுத்து வந்து நம் வீட்டில் வைத்து குலதெய்வத்தின் அருளை வீட்டில் நிறைந்திருக்க செய்வோம்.

- Advertisement -