- Advertisement -

21-04-2024 மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை என்ற ஊர் பெயரை சொன்னாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோவில் தான். மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பன்னிரண்டு நாட்கள் மிகவும் பிரசித்தியாக நடைபெறும். இந்த வருடத்தின் மதுரை சித்திரை திருவிழாவானது ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக தொடங்கி இருக்கின்றது.

இந்தத் திருவிழாவானது 12 நாட்கள் நடைபெறும். இந்த 12 நாளும் மதுரை மாநகரமே திருவிழா கோலத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மதுரை மாநகர் மக்கள் மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். இந்த திருவிழாவில் மிக மிக முக்கியமான நாள் என்றால் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம்.

- Advertisement -

இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று நடக்கவிருக்கின்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளக் கூடிய வைபவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. குறிப்பாக இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தன்று பெண்கள் தங்களுடைய தாலி கயிறை புதுப்பித்துக் கொள்ளும் வழக்கம் இருக்கும்.

இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தன்று சுமங்கலி பெண்கள் தங்களுடைய தாலி கயிறு எந்த நேரத்தில் மாற்ற வேண்டும். எப்படி மாற்ற வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தாலி சரடு மற்றும் நேரம்:

மதுரையில் ஏப்ரல் 21ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் காலை 8:35 மணி முதல் 8:59 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடைபெறவிருக்கின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள்.

பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த திருக்கல்யாண நேரத்திற்கு முன்கூட்டியே உங்களுடைய தாலி சரடை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். அதாவது சுமங்கலி பெண்கள் தங்களுடைய கழுத்தில் ஒரு மஞ்சள் சரடு கட்டிக் கொள்ளவும். பிறகு உங்கள் தாலியில் இருக்கும் குண்டுகளை, புது கயிறில் கோர்த்து தயார் செய்து, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து அம்பாளின் பாதத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

சரியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கக்கூடிய அந்த குறிப்பிட்ட நேரத்தில், எல்லா சேனல்களிலும், அந்த கல்யாண வைபவம் நேரடியாக ஒளிபரப்பப்படும். அந்த திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு அம்பாளுக்கு திருமணம் நடந்த பிறகு நீங்களும், தாலி சரடை எடுத்து உங்களுடைய கழுத்தில் அணிந்து கொள்ளலாம். உங்களுடைய கணவர் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் அவரது கையாலேயே எடுத்து திருமாங்கல்யத்தை உங்கள் கழுத்தில் கட்டி விட சொல்லுங்கள்.

உங்களுடைய தாலி சரடு முழுக்க முழுக்க தங்கத்தால் இருக்கிறது என்பவர்கள் என்ன செய்யலாம். நீங்களும் உங்களுடைய கழுத்தில் ஒரு மஞ்சள் சரடு கட்டிக் கொள்ளுங்கள்.‌ தங்கத்தில் இருக்கும் தாலியை கழட்டி சுத்தம் செய்து பின்பு அம்பாளின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்து விட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடக்கும் அந்த சமயத்தில் அந்த தாலி சரடை நீங்கள் மீண்டும் உங்களுடைய கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

உங்களுடைய தாலியை கழுத்தில் கட்டிக் கொண்டவுடன், கழுத்தில் இருக்கும் மஞ்சள் சரடை கழட்டி பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். மீனாட்சிக்கு, சுந்தரேஸ்வரர் மீது அளவு கடந்த அன்பு இருக்கிறது. ஒவ்வொரு கணவன் மனைவியும் இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் போல வாழ வேண்டும் என்று நினைத்து, இந்த மீனாட்சி திருக்கல்யாணம் சமயத்தில் தாலியை தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டால், அந்த அம்பாளின் ஆசிர்வாதத்தால் நம்முடைய குடும்பமும் ஒற்றுமையாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு இன்னும் வளம்பெறும் என்பதற்காகத் தான் இந்த வழிபாட்டு முறையை நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். இப்போதுதான் உங்களுக்கு புதுசாக திருமணம் ஆகி இருக்கிறது என்னும் பட்சத்தில் நீங்கள் சரடை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

சரடை மாற்ற வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் இந்த வழிபாட்டை பின்பற்றலாம், அல்லது சில குடும்பங்களில் இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தின் போது தான் தாலி சரடு மாற்ற வேண்டும் என்ற வழக்கம் இருக்கும் அவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தாலி சரடு மாற்றிக்கொண்டு, அம்பாளுக்கு உங்களால் முடிந்த பிரசாதத்தை நிவேதியம் ஆக வைத்து கணவனும் மனைவியும் தம்பதி சரீரமாக அம்மனிடம் நமஸ்காரம் செய்து உங்கள் குடும்ப ஒற்றுமைக்காக பிரார்த்தனை செய்து கொண்டால், குடும்பத்தில் சந்தோஷம் பல மடங்கு பெருகும்.

இதையும் படிக்கலாமே: சகல செல்வமும் பெற முருகர் வழிபாடு

பிரிந்திருக்கும் கணவன் மனைவி கூட இந்த நாளில் மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் வழிபாடு செய்து அவர்களுடைய திருக்கல்யாணத்தை கண் குளிர பார்த்து, கணவன் மனைவி ஒன்று சேர வேண்டும் என்ற பிரார்த்தனை வையுங்கள். சீக்கிரம் உங்களுடைய குடும்பமும் ஒன்று சேரும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -