
ஒவ்வொரு வீட்டிலும் என்ன தான் பார்த்து பார்த்து சமைத்தாலும் கூட தினமுமே ஒரு கப் சாதமாவது கட்டாயம் மீந்து விடும். இது வரைக்கும் பழைய சாதத்தில் எத்தனையோ உணவு வகைகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் மீந்த போன பழைய சாதத்தில் ஒரு அருமையான வத்தல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இதற்கு முதல் நாள் மீந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்து, அடுத்த நாள் அதை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் இருந்தால் மாவு புளித்து விடும்.
அடுத்ததாக 10 சின்ன வெங்காயம் 5 காய்ந்த மிளகாய், 2 டேபிள் ஸ்பூன் சீரகம், 1/4 டேபிள் ஸ்பூன் பெருங்காயம், 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு. இவையெல்லாம் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் காய்ந்த மிளகாய் மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள். அதாவது சில்லி பிளாக்ஸ் என்று சொல்லுவோம் அல்லவா அது போல பொடித்து எடுத்து தனியாக ஒரு பவுலில் வைத்து விடுங்கள். அதன் பிறகு அதே ஜாரில் வெங்காயத்தை சேர்த்து பைன் பேஸ்ட்டாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து அதையும் எடுத்து வைங்க. கடைசியாக பிழிந்து வைத்த சாதத்தை ஜாரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து அதை ஒரு அகலமான கிண்ணத்தில் ஊற்றி விடுங்கள்.
இப்போது ஏற்கனவே அரைத்து வைத்த வெங்காய விழுது, காய்ந்த மிளகாய் பொடி, சீரகம் பெருங்காயம், உப்பு அனைத்தையும் சேர்த்து இந்த மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து விடுங்கள்.
இப்பொழுது நல்ல வெயிலில் ஒரு பேப்பர் போட்டு அதன் மேல் பிளாஸ்டிக் கவரை விரித்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் மாவை நன்றாக ஒரு முறை அடித்து விட்டு ஒரு கரண்டி மாவு எடுத்து தோசை ஊட்டுவது போல் அந்த பாலீத்தின் கவர் மீது ஊற்றி தேய்த்து விடுங்கள். இதே போல அனைத்து மாவையும் ஊற்றி ஒரு நாள் முழுவதும் வெயிலில் வைத்து விடுங்கள்.
இப்போது இருக்கும் வெயிலுக்கு காலை ஊற்றி வைத்தால் மாலையே நன்றாக காய்ந்து விடும். அதை கவரில் இருந்து அப்படியே எடுத்து மறுபுறம் திருப்பிப் போட்டு அடுத்தநாள் இதே போல் வெயிலில் காய வைத்து எடுத்து விட்டால் போதும் அருமையான பழைய சாத வத்தல் தயார். இதை வெயில் இல்லாதவர்கள் வீட்டின் நிழலிலும் காய வைக்கலாம். மேற்கொண்டு ஒன்று இரண்டு நாட்கள் ஆகும் அவ்வளவு தான்.
இதையும் படிக்கலாமே: காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி?
மீந்து போன பழைய சாதத்தில் கூட இவ்வளவு அருமையான ஒரு வத்தல் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். நீங்க ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.