
கடவுளுக்கு ஏற்றும் விளக்குகளில் ஊற்றும் எண்ணெய்க்கு பலன்களும் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. ஒவ்வொரு எண்ணைக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை கொடுக்கும் பஞ்சலோக எண்ணெய்களை சேர்த்து ஊற்றி தீபம் ஏற்றினால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்பார்கள். அந்த வகையில் வேப்ப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றலாமா? வேப்ப எண்ணெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
இறைவனுக்கு ஏற்றப்படும் தீபங்களில் ரொம்ப முக்கியமானது நல்லெண்ணெய் தீபம்! நல்லெண்ணெய் அல்லது நெய் கொண்டு ஏற்றப்படும் தீபம் ரொம்பவே உயர்ந்த தீபமாக கருதப்படுகிறது. நேர்மறையான அதிர்வலைகளை உண்டாக்கக்கூடிய இந்த நல்லெண்ணெய் மற்றும் நெய் தீபம் கோவில்களில் ஏற்றப்படுவது வழக்கம். வீட்டிலும் இந்த எண்ணெய்களை பயன்படுத்தி தீபம் ஏற்றினால் நிறைவான பக்தி பலன் கிட்டும்.
குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய் ஏற்றுவார்கள். சிறு குறு தெய்வங்களுக்கு தேங்காய் எண்ணெயிலும் தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த வகையில் வேப்ப எண்ணையை கொண்டு தீபம் ஏற்றினால் குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்புகள் அகலும், தீராத கசப்பான பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் தீராத வியாதிகளை கூட குணப்படுத்தக்கூடிய சக்தி, இந்த வேப்பிலை தீபத்திற்கு உண்டு.
அம்மனுக்கு ரொம்பவும் பிடித்தது வேப்பிலை. இந்த வேப்பிலையில் இருந்து கிடைக்கக்கூடிய எண்ணெயை கொண்டு அகல் விளக்குகளில் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும் என்பது நியதி. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு போன்றவற்றில் வேப்ப எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றக்கூடாது. இயற்கையாக செய்யப்பட்ட மண் விளக்குகளில், இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த கசப்பான வேப்ப எண்ணெயை கொண்டு தீபம் ஏற்றினால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனக்கசப்புகள் இருந்தால் வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு மண் அகல் விளக்குகளில் வேப்ப எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி மனதார பிரார்த்தித்துக் கொண்டால், சீக்கிரமே ஒன்று சேருவார்கள். அது போல 21 வெள்ளிக்கிழமைகளில் வேப்ப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வர தீராத வியாதிகளும் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை உண்டு. வேப்ப எண்ணெய் நமக்கு கசப்பான பிரச்சனைகளை கூட எளிதாக விரட்டி அடிக்கும். கசப்பு தரும் கடன் தொல்லைகள், கசப்பு தரும் சண்டை சச்சரவுகள், கசப்பு தரும் நிம்மதி இன்மை போன்ற அனைத்தையும் நம்மை விட்டு விரட்டி அடிக்க கூடிய சக்தி உள்ள தீபம் ஆகும்.
இதையும் படிக்கலாமே:
8-5-2025 பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்
வேப்ப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் பொழுது ஒற்றை திரி போட்டு தீபம் ஏற்றக்கூடாது. இரண்டு திரிகளை ஒன்றாக திரித்து போட்டு தீபம் ஏற்ற வேண்டும். வேப்பிலை தீபம் ஏற்றும் பொழுது தீபம் ஆனது அணைய கூடாது. அப்படி நீங்கள் பிரார்த்தனை செய்து முடிக்கும் வரை அணையாத தீபம் இருந்தால், நீங்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கிரக தோஷங்கள் நீங்கவும், வேப்ப எண்ணையைக் கொண்டு தீபம் ஏற்றி வழிபடலாம். நவகிரகங்களும் இந்த வேப்ப எண்ணெய் தீபத்திற்கு அடிபணிவதாக சாஸ்திரங்கள் சொல்லுகிறது. கிரக பிரச்சனைகள் இருப்பவர்கள், கசப்பான மனப் பிரச்சனைகள் இருப்பவர்கள் அனைவரும் வேப்ப எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி, பிரார்த்தியுங்கள் நல்லதே நடக்கும்.