
வெள்ளை சட்னி என்றாலே கட்டாயமாக அதில் பொட்டுக்கடலை தேங்காய் அல்லது வேர்க்கடலை இந்த மூன்று பொருட்களில் ஏதாவது ஒன்றை சேர்த்து தான் ஆகவேண்டும். ஆனால் இந்த 3 பொருட்களும் சேர்க்காமல் ஒரு புதுவிதமான வெள்ளை சட்டையை தான் இந்த குறிப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இது வித்யாசமான சைடிஷ். இந்த சட்னியை எப்படி அரைப்பது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மீடியம் சைஸ் – 1 பெரிய வெங்காயத்தை நறுக்கி எண்ணெயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்துடன் தோல் உரித்த பூண்டு பல் 4, பச்சை மிளகாய் 5, சிறிய துண்டு இஞ்சி சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, அடுத்தபடியாக 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை வெங்காயத்துடன் சேர்த்து வறுக்க வேண்டும்.
வெங்காயத்துடன் உளுந்தம் பருப்பு சேர்ந்து உளுந்து சிவந்து வரும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும். உளுந்து சரியாக வறு படாமல் இருந்தால் சட்னி கொஞ்சம் கொழகொழப்பாக வரும். உளுந்தை பொன்னிறம் வரும் வரை பார்த்து பக்குவமாக வறுத்துக் கொள்ளுங்கள். இந்த வதக்கல் தயார் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு, கலவையை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். (உளுந்து அதிகப்படியாக வறுபட்டு விட்டால் சட்னியின் நிறம் லேசாக மாறுபடும்.)
அரைத்த இந்தச் சட்னியை தனியாக ஒரு கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். 2 ஸ்பூன் எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை, வர மிளகாய் தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறினால் நிச்சயம் இந்த சட்னி எல்லோருக்கும் பிடிக்கும். வித்தியாசமான வாசனையில், வித்தியாசமான சுவையில் ஒரு வெள்ளை சட்னி தயார்.
ஒரே மாதிரி சட்னியை சுவைப்பதற்கு இப்படி வித்தியாசமாக சட்னியை செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சட்னிக்கு பச்சை மிளகாய் வாசம்தான் சுவையை கொடுக்கும். வரமிளகாய் சேர்த்து செய்ய வேண்டாம்.