- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

ரஷ்யாவிற்கு கடத்தப்பட்ட பெருமாளின் வைரம் – மர்மமாய் உயிரிழந்த ராஜ வம்சம்

உலகில் ஒரு காலத்தில் எல்லா நாடுகளையும் விட செல்வ செழிப்பு கொண்ட நாடாக இருந்தது பாரதம். தங்களுக்கு கிடைக்கும் அனைத்தையும் தாங்கள் வழிபடும் இறைவனக்கு தருவதற்கு தயாராக இருக்கும் “இந்து” மதத்தினரைப் போல் உலகில் வேறு எங்கும் காண முடியாது. அப்படி ஒரு மன்னன் தனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற வைரத்தை ஒரு தெய்வத்துக்கு அளித்ததையும், அது இன்று ரஷ்ய நாட்டில் இருப்பதை பற்றியும் இங்கு காண்போம்.

1600 ஆம் ஆண்டுகளில் ஆந்திராவின் “கோல்கொண்டா” பகுதியை ஆண்டு வந்த ஒரு அரசனின் ஆட்சிக்காலத்தில் இந்த வைரம் அங்குள்ள ஒரு சுரங்கத்தில் தோண்டியெடுக்கப்பட்டது. கர்நாடகத்தில் உள்ள “ஸ்ரீரங்கப்பட்டினம்” கோவிலின் “ரங்கநாதர்” மீது பக்தி கொண்ட அம்மன்னன், இந்த வைரத்தை அக்கோவில் ரங்கநாதரின் மூலவர் சிலையின் கண்ணாக பதித்தான்.1700 ஆம் ஆண்டுகளில் கர்நாடகத்தில் “மைசூர் அரச வம்சம்” மற்றும் அதன் நட்பு படையான “பிரெஞ்சு படையும்” “பிரிட்டிஷ் படைகளுடன்” போரிட்டுக்கொண்டிருந்தன.

- Advertisement -

அப்போது மைசூரில் இருந்த பிரெஞ்சு படையின் ஒரு வீரன் இந்த வைரத்தைப் பற்றி கேள்விப்பட்டு, அதை திருட உத்தேசித்து, அப்படையிலிருந்து முன்னறிவிக்காமல் விலகி தலைமறைவானான். பிறகு நேரே ஸ்ரீரங்கப்பட்டினம் வந்த அவன், தான் இந்து மதத்தின் மீது மிகுந்த மதிப்புக்கொண்டிருப்பதாகவும் அதனால் இந்து மதத்திற்கு தாம் மாறி தினமும் இந்த ரங்கநாதரை வழிபட விரும்புவதாக கூறினான். இதை உண்மையென்று நம்பிய அந்த கோவில் அர்ச்சகர்களும் அவனை மதம் மாற்றி அவன் ரங்கநாதரை தினமும் வழிபட அனுமதித்தனர். இதை எண்ணி மிகவும் மகிழ்ந்த அவன் தினமும் இக்கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வழிபடுவது போல் நடித்து, அந்த வைரத்தை திருடுவதற்கு சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்படி 1747 ஆம் ஆண்டு, ஒரு நாள் அந்த கோவிலின் அர்ச்சகர்களின் கவனத்தை திசை திருப்பி அந்த ரங்கநாதரின் “கண் வைரத்தை” திருடிக்கொண்டு தப்பியோடினான்.

அப்படி அந்த வைரத்தை எடுத்துக்கொண்டு நேரே அவனது சொந்த “பிரான்சு” நாட்டிற்கு சென்றான். அங்கே யாரோ ஒரு செல்வந்தருக்கு அந்த வைரத்தை விற்றான். அப்படி பலவருடங்கள் பல பேரின் கைகள் மாறி இறுதியாக 1772 ஆம் ஆண்டு அது “நெதர்லாந்து” நாட்டில் “ஆம்ஸ்டெர்டாம்” நகரில் ஏலத்திற்கு வந்தது. அப்போது அந்த வைரத்தை ரஷ்ய நாட்டின் “கிரிகோரி ஆர்லோவ்” பிரபு அதை வாங்கினார். இவர் அப்போதைய “ரஷ்ய நாட்டு பேரரசி” “இரண்டாம் கேத்தரின்” உடன் ரகசிய காதல் உறவில் இருந்தார். இந்த வைரத்தை கேதேரினுக்கு பரிசளித்து அவளை மயக்கி அதன் மூலம் ரஷ்ய நாட்டின் அரசனாக தாம் மாற எண்ணம் கொண்டிருந்தார். இதை எப்படியோ அறிந்து கொண்ட கேத்தரின் அவருக்கு சிறிது பணம் கொடுத்து, அவருடனான தொடர்பை துண்டித்து, அவரை துரத்தி விட்டாள். ஆனால் அந்த ஆர்லோவ் பிரபுவின் பெயரை இந்த வைரத்திற்கு சூட்டி “ஆர்லோவ் வைரம்” என்று அழைத்தாள்.

- Advertisement -

பிறகு அந்த வைரத்தை 1774 ஆம் ஆண்டு தனது செங்கோளில் பதித்துக் கொண்டாள் ரஷ்ய பேரரசி கேத்தரின். இறைவன் ரங்கநாதரிடம் இருந்து திருடப்பட்ட காரணத்தால் ஏற்பட்ட தெய்வ சாபத்தினாலோ என்னவோ, இந்த வைரத்தை செங்கோலில் பதித்த ஆண்டிலிருந்து அந்த ரஷ்ய நாட்டின் “ரோமனோவ்” அரச பரம்பரையின் அரச வாரிசுகள் பலர் இயற்கைக்கு மாறான முறையிலும், சிலர் கொலை செய்யப்பட்டும் இறந்தனர். இறுதியாக 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட “போல்ஷெவிக்” புரட்சியின் போது ஒட்டுமொத்த அரச குடும்பத்தினரும் ஒரு காட்டில் ரகசியமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர்.

பிறகு வந்த ஆட்சியாளர்கள், அந்த வைரத்தை ஒரு தேசிய பொக்கிஷமாக கருதி பாதுகாத்தனர். இன்றும் அந்த வைரம் ரஷ்ய தலைநகர் “மாஸ்க்கோவில்” முற்காலத்தில் ரஷ்ய மன்னர்களின் அரண்மனையாகவும், இன்று ரஷ்ய நாட்டு அதிபரின் மாளிகையாகவும் இருக்கும் “கிரெம்ளின் அரண்மனை” அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த வைரத்திற்கு இந்திய அரசு உரிமை கோரி திரும்ப பெற முடியும் என்றாலும், பல இக்கட்டான சூழலில் இந்தியாவிற்கு துணை நின்ற ரஷ்ய நாட்டுடனான நட்பில் இதன் காரணமாக பங்கம் ஏற்படக்கூடாது என இந்திய அரசு தயங்குகிறது. அதே நேரத்தில் இந்த வைரத்தை நாம் நமது நாட்டிற்கு மீண்டும் கொண்டு வந்தால், அந்த வைரம் என்ன ஆகும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இதையும் படிக்கலாமே:
மனிதர்களை போல பானகம் அருந்தும் நரசிம்மர். ஆச்சர்யத்தில் உறைந்த பக்தர்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம் சார்ந்த பல டஹ்கவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -