- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

150 வருடங்களாக கதவே இல்லாத கிராமத்தின் வீடுகள்.. காவல் தெய்வமாய் சனி பகவான்

மற்ற கோயில்களில் பார்ப்பது மாதிரி விஸ்தாரமான கருவறை என்ற ஒன்று இல்லாத கோயில்; கோயிலுக்கு விமானம் இல்லை; பூட்டும் இல்லை. என்ன, அதிசயமாக இருக்கிறதா? இப்படிப்பட்ட இடம்தான் ‘சனி சிங்கனாப்பூர்’ எனப்படும் சனீஸ்வரரது கோயில்.

இந்தத் திருத்தலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்- அகமத் நகர் நெடுஞ்சாலையில் கோடேகான் எனும் இடத்தில் பிரியும் சாலை வழியாகச் சென்றால், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது (ஷீர்டி சாய்பாபா கோயில் கொண்டிருக்கும் ஷீர்டியிலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவு!)

- Advertisement -

நாம், சாதாரணமாக சனீஸ்வரன் என்போம். ஆனால் இங்கு அவர், ‘சனி மகராஜ்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் சனி சிங்கனாப்பூரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். இவரது ஆணைப்படி இங்குள்ள எந்த வீட்டுக்கும் வாசல் மற்றும் அறைகளுக்குக் கதவுகள் இல்லை.

இங்குள்ள கடைகளில் எவ்வளவு விலை உயர்ந்த பொருட்கள் இருந்தாலும், இரவில் திரைச் சீலை அல்லது கித்தான் துணி போட்டுத்தான் மூடுகிறார்கள். அதே போல் வீடுகளிலும் துணித் திரைதான். பணம் மற்றும் ஆபரணங்களைத் துணிப்பை அல்லது பானையில் போட்டு வைத்திருக்கிறார்கள். இதில் நம்பிக்கை இல்லாத சிலர், பணத்தைப் பத்திரமாகப் பூட்டி வைத்த தங்களது பெட்டிகளுக்குள் பாம்புகளைப் பார்த்திருக்கிறார்கள். இங்கு திருட்டு, கொள்ளை என்பதற்கே இடம் இல்லை!

- Advertisement -

இங்குள்ள மக்கள், ‘எங்களை சனி மகராஜ் பார்த்துக் கொள்வார்!’ என்ற அசாத்திய நம்பிக்கையுடன் உள்ளனர். அது வீண் போக வில்லை. இந்த ஊரில் யாராவது திருட முயன்றால், அவர்கள் பார்வையிழந்தோ மனநலம் பாதிக்கப்பட்டோ அலைவராம். மட்டுமின்றி, இங்கு வசிக்கும் ஜனங்களை எப்படிப்பட்ட விஷப் பாம்புகள் தீண்டினாலும் அவர்களுக்கு விஷம் ஏறாதாம்.

இந்த ஊர் மக்கள் சனி மகராஜாக நினைத்து வழிபடும் இந்தக் கல், இவர்களது ஊருக்கு எப்படி வந்தது என்பதற்கான ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் 300 வருடங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் ஒரு கல்லானது அடித்து வரப்பட்டு சிங்கனாப்பூரில் கரை ஒதுங்கியது.

கரை ஒதுங்கிய அந்த பொருள் என்ன என்று அறியாத அந்த ஊர் மக்கள் அதனை ஒரு ஆயுதத்தின் மூலம் நகர்த்திய போது அந்தக் கல்லிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இதனை கண்ட அந்த ஊர் மக்களுக்கு ஆச்சரியம் கலந்த பயமானது வந்துவிட்டது. அன்று இரவு அந்த ஊர் கிராமத் தலைவரின் கனவில், காட்சி தந்த சனி மகராஜ் இந்த கிராமத்திலேயே காவல் தெய்வமாக குடியிருக்க போவதாகவும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட இந்த கல்லை அந்த ஊரிலேயே வைத்து வழிபட வேண்டும் என்றும், தன்னை வெட்டவெளியில் வைக்கும்படியும், தனக்கு மேல் எந்த விதமான கூரையும் அமைக்க வேண்டாம் என்றும், சொன்னதாக ஒரு செவிவழி வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக இந்த ஊர் மக்கள் சனி மகராஜை வெட்ட வெளியிலேயே வைத்து வழிபடுகிறார்கள்.

சனி மகராஜ், உருவம் இல்லாத தட்டையான ஒரு கல்லாக விளங்குகிறார். சுமார் ஐந்தேமுக்கால் அடி உயரம். ஒண்ணரை அடி அகலம் கொண்டு இங்கு வீற்றிருக்கார் சனி பகவான். சனிக் கிழமையன்று அமாவாசை திதியும் சேர்ந்து வந்தால், இங்கு திரு விழாதான்! அன்று லட்சக் கணக்கில் பக்தர்கள் சனி மகராஜின் ஆசி பெற வருகிறார்கள்.

- Advertisement -