
எப்போதும் தோசையுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் இவற்றைத் செய்வது தான் அதிகம். பெரும்பாலான இல்லங்களில் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இவற்றையே அடிக்கடி செய்து கொடுப்பார்கள். இவ்வாறு தினமும் காலை அல்லது மாலை வேளையில் செய்யப்படும் உணவுகளுடன் கொஞ்சம் காரசாரமாக சாப்பிட சற்று வித்தியாசமாக செய்து தான் பாருங்களேன். வீட்டில் உள்ள ஆண்களுக்கு கொஞ்சம் காரம் அதிகமாக செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். அப்படி எப்போதும் இரண்டு தோசை சாப்பிடுவார்கள் கூட இன்னும் இரண்டு தோசை சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த பூண்டு சட்னி ஒரு முறை செய்து கொடுங்கள். இதன் சுவை மிகவும் அற்புதமாக இருக்கும். இதனை செய்வது மிகவும் சுலபமான விஷயம் தான். அதிலும் இதனை செய்ய இரண்டு பொருட்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் அதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பூண்டு – 150 கிராம், வர மிளகாய் – 10, உப்பு – அரை ஸ்பூன், புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் – 10, எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, நெய் – ஒரு ஸ்பூன்.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் 150 கிராம் பூண்டை தோலுரித்து சுத்தமாக அலசி வைக்க வேண்டாம். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து விட வேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் பூண்டை சேர்த்து இரண்டையும் பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் 10 வரமிளகாய் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின்னர் இதனுடன் சிறிய நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் ஒரு தட்டிற்கு மாற்றி நன்றாக ஆற வைக்க வேண்டும். பின்னர் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் இந்த தாளிப்பை சட்னியுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பூண்டு சட்னி தயாராகிவிட்டது. இதனை இட்லி அல்லது தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள். அவ்வளவு அசத்தலாக இருக்கும்.