- Advertisement -

பருவ காலத்திற்கு ஏற்றார் போல் உணவு பொருட்களை நாம் சாப்பிடுவதன் மூலம் பருவ காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நம்மால் தப்பித்துக் கொள்ள முடியும். அந்த வகையில் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல் உஷ்ணத்தையும் நா வறட்சியையும் நீக்குவதற்கு உதவக்கூடிய காயாக திகழ்வதுதான் சுரைக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட இந்த சுரைக்காயை பலரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. அப்படி விரும்பி சாப்பிடாத நபர்களுக்கு எப்படி வடை செய்து கொடுக்க வேண்டும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

சுரைக்காயில் விட்டமின் பி மற்றும் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. அதைவிட அதிகமான அளவு நீர்ச்சத்து இருக்கிறது. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு குறைகிறது. உடல் எடை குறையும். உடல் குளிர்ச்சி ஏற்படும். நாவறச்சி என்று சொல்லக்கூடிய தாகம் தணியும். குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கும். சிறுநீரக எரிச்சல் ஏற்படுத்துவதை தடுக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • சுரைக்காய் – 1
  • அரிசி மாவு – 1 கப்
  • கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 5
  • கருவேப்பிலை, கொத்தமல்லி – 1 கப்
  • சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு சுரைக்காயை எடுத்து அதன் தோலை நன்றாக சீவிக்கொள்ள வேண்டும். பிஞ்சாக இருக்கும் பட்சத்தில் அதை அப்படியே கேரட் துருவுவது போல் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். முற்றிய சுரைக்காயாக இருக்கும் பட்சத்தில் அதை இரண்டாக நறுக்கி நடுவில் இருக்கக்கூடிய விதை பகுதியை நீக்கிவிட்டு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் துருவி எடுக்கும் இந்த சுரைக்காய் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கப் துருவிய சுரைக்காய்க்கு ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே அளவிற்கு அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, சோம்பு மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு இவற்றை சேர்த்து விட்டு நன்றாக தண்ணீர் ஊற்றாமல் பினைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வடை மாவு பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து வடையை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி கொள்ள வேண்டும். ஒருவேளை வடை மாவு பதத்திற்கு வரவில்லை அதிக அளவில் தண்ணீர் இருக்கிறது என்று தோன்றினால் சிறிதளவு அரிசி மாவை சேர்த்து பிணைந்து வடை மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் தண்ணீர் தேவைப்படுகிறது என்றால் லேசாக தண்ணீரை தெளித்து பிணைந்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் நன்றாக சூடான பிறகு மாவை எடுத்து வடையாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். ஒரு புறம் சிவக்க ஆரம்பித்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு மறுபுறமும் சிவக்க விட வேண்டும். இப்படி இரண்டு புறமும் சிவந்த பிறகு இதை அப்படியே எடுத்து எண்ணெயை வடிய வைத்து விட வேண்டும். பிறகு பரிமாறி விடலாம். மிகவும் சுவையான அதே சமயம் சத்து மிகுந்த சுரைக்காய் வடை தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: முருங்கைக்காய் பருப்பு பொடி செய்முறை

சுரைக்காயில் கூட்டு, பொரியல், சாம்பார் என்று செய்வதற்கு பதிலாக இப்படி வித்தியாசமாக சுரைக்காய் வடையை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் செய்து தருவதன் மூலம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -