முருங்கைக்காய் பருப்பு பொடி செய்முறை

murungaikai paruppu podi
- Advertisement -

பொதுவாக வெயில் காலம் என்று வந்துவிட்டாலே அதிகமான பேர் ஊறுகாய், பத்தல், வடகம் என்று பலவற்றை போட்டு வைத்துக் கொள்வார்கள். அதோடு மட்டுமல்லாமல் இன்னும் சிலரோ இந்த வெயில் காலத்தில் காயவைத்து பதப்படுத்தி வைக்கக்கூடிய பொருட்கள் அனைத்தையுமே செய்ய தயாராவார்கள். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு சீசனிலும் அதிக அளவு மிகவும் மலிவாக விளையக்கூடிய பொருட்களை உணவுப்பொருட்களை வைத்து தயார் செய்யும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் இந்த முருங்கைக்காய் சீசனில் நாம் முருங்கைக்காயை வைத்து எப்படி முருங்கைக்காய் பருப்பு பொடி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

முருங்கைக்காயை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படாது. மேலும் வயிற்றுப்புண் பிரச்சினையை தீர்க்க உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இது அருமருந்தாக திகழ்கிறது. முருங்கைக்காய் நம்முடைய உடலுக்கு வலுவை கொடுக்கும். இதை சாப்பிடுவதால் சிறுநீரகம் பலப்படுகிறது. தாது உற்பத்தியும் அதிகரிக்கிறது. ரத்தமும் சிறுநீரகமும் சுத்தம் அடைவதற்கு முருங்கைக்காயை அவ்வப்பொழுது நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • காய்ந்த முருங்கைக்காய் – 1/2 கிலோ
  • துவரம்பருப்பு – 1/4 கிலோ
  • பாசிப்பருப்பு – 1/4 கிலோ
  • மிளகு – 50 கிராம்
  • சீரகம் – 50 கிராம்
  • காய்ந்த கருவேப்பிலை – 15 கிராம்
  • காய்ந்த பூண்டு – 50 கிராம்
  • காய்ந்த மிளகாய் – 25 கிராம்
  • பெருங்காயத்தூள் – 10 கிராம்
  • உப்பு – 60 கிராம்

செய்முறை

முதலில் சதைப்பற்று மிகுந்த முருங்கைக்காய்களாக பார்த்து அதன் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை நன்றாக காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சதைப்பற்று மிகுந்த காய்கள் கிடைக்காத பட்சத்தில் முருங்கைக்காயின் மேல் பகுதியான தோலை மட்டும் நீக்கிவிட்டு முருங்கைக்காயை நான்காக நறுக்கி கூட காய வைத்துக் கொள்ளலாம்.

இதே போல் பூண்டையும் நன்றாக இடித்து வெயிலில் காய வைக்க வேண்டும். கருவேப்பிலையையும் நன்றாக சுத்தம் செய்த பிறகு காய வைத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றும் நன்றாக காய்ந்த பிறகு அடுப்பில் கடாயை வைத்து முதலில் துவரம் பருப்பை போட்டு சிவக்க வருத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக பாசிப்பருப்பையும் போட்டு சிவக்க வருத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக நாம் ஏற்கனவே காய வைத்திருந்தாலும் மறுபடியும் முருங்கை காயை கடாயில் போட்டு நன்றாக வருத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து நன்றாக சிவக்க வருத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை பூண்டு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக சிவக்க வருத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

உப்பை அடுப்பில் போட்டு நன்றாக வருத்தப்பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வருத்து அதையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு இதனுடன் பெருங்காயத்தூளையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து மறுபடியும் அதை தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பொடி நன்றாக ஆறிய பிறகு அதை கண்ணாடி பாட்டிலிலோ அல்லது காற்று புகாத டப்பாவிலோ போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் பருப்பு பொடி தயாராகிவிட்டது. இந்த பருப்பு பொடியை நாம் சூடான சாதத்தில் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு இட்லி பொடியாகவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: மாதுளம் பழ அல்வா செய்முறை

முருங்கைக்காய் சீசனில் மிகவும் மலிவாக கிடைக்கக்கூடிய முருங்கைக்காயை வீணாக்காமல் இந்த முறையில் பருப்பு பொடியாக செய்து வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

- Advertisement -