
பலருக்கும் சொந்த வீடு கட்டி அதில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் கட்டிய வீடாகவே வாங்குவார்கள். இன்னும் சிலரோ சொந்தமாக இடம் வாங்கி அதில் வீடு கட்ட முயற்சி செய்வார்கள். அப்படி வீடு கட்ட முயற்சி செய்யும் பொழுது ஏதோ சில காரணங்களால் அந்த வீட்டை கட்ட முடியாத சூழ்நிலை உண்டாகும். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தடங்கல்கள் வந்து அந்த வீடு கட்டி முடிக்க முடியாத நிலைக்கு ஆளாவார்கள்.
இது ஒரு மாதம் இரண்டு மாதம் இல்லாமல் ஒரு சிலருக்கு வருட கணக்கில் கூட அந்த வீட்டை கட்டி முடிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும். பணம் இருந்தாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் பண விரயம் ஏற்பட்டு வீட்டை கட்டி முடிக்க முடியாத நிலைக்கு ஆள ஆவார்கள். இப்படி சொந்த வீடு வாங்குவதிலோ கட்டுவதிலோ அல்லது கட்டி முடிப்பதிலோ இருக்கக் கூடிய தடைகள் அனைத்தும் விலகுவதற்கு வீட்டிலேயே எந்த முறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நாம் வணங்கக் கூடிய ஒரு சில தெய்வங்கள் சொந்த வீடு அமைவதற்கு உதவக்கூடிய தெய்வங்களாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சொந்த வீட்டிற்குரிய யோகம் நமக்கு உண்டாகும். அந்த வகையில் சொந்த வீடு அமைவதற்கு உதவக்கூடிய கிரகமான செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதியாக திகழக்கூடியவர் முருகப்பெருமான்.
அதனால் நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர வேண்டும் என்றால் முருகப்பெருமானை வழிபட வேண்டும். இதே போல் சிவபெருமானுக்குரிய மண் சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு போய் வழிபாடு செய்தாலும் மண் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இந்த உலகத்தையே தன்னுடைய மூன்று அடிகளால் அளந்த பெருமாளை நாம் வழிபட்டாலும் நமக்கு சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும்.
பெருமாளுக்கு உரிய நட்சத்திரமாக திகழக் கூடியது தான் திருவோண நட்சத்திரம். திருவோண நட்சத்திரத்தன்று ஒரு சிறிய தட்டிற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் புதிதாக வாங்கிய ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். அந்த அகல் விளக்கிற்கும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சுத்தமான விளக்கெண்ணையை ஊற்றி பஞ்சுத்திரி போட்டு நாம் குடியிருக்கும் வீட்டின் அக்னி மூலை என்று சொல்லக் கூடிய தென்கிழக்கு மூலையில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு தீபம் ஏற்றும் பொழுது உலகளந்த பெருமாளை மனதார நினைத்துக் கொண்டு அவருக்கு பால் பாயாசத்தை நெய்வேத்தியமாக வைத்து இந்த தீபத்தை ஏற்றி சொந்த வீடு அமைய வேண்டும் என்று மனதார வேண்டுதல் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு திருவோண நட்சத்திரம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய விரைவிலேயே சொந்த வீடு அமைவதற்குரிய யோகம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லை விலக மிளகு பரிகாரம்
இந்த எளிமையான தெய்வ வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து சொந்த வீடு கட்டிக் குடியேறும் யோகம் பெறலாம்.