
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கக்கூடிய சக்தி வெண்டைக்காய்க்கு உண்டு. வெண்டைக்காயில் இருக்கும் அபரிமிதமான சத்துக்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதால் அதை தவிர்த்து விடுகிறார்கள். வெண்டைக்காயில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக கிடைக்க ருசியான வெண்டைக்காய் பொரியல் இப்படி செய்து பாருங்கள்.
வெண்டைக்காய் பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – அரை கிலோ, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், கடலை பருப்பு – அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, வரமிளகாய் – 3,
இடித்த பூண்டு பல் – ரெண்டு, எலுமிச்சை பழச்சாறு – அரை மூடி, வேர்க்கடலை பொடி – ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
வெண்டைக்காய் பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் வெண்டைக்காயை சுத்தம் செய்து மேல் பகுதி மற்றும் அடி பாகத்தை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நறுக்கி வைத்தவற்றை ஒரு தட்டில் பரப்பி ஃபேன் காற்றில் ஆற விட்டு விடுங்கள். இதனால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை சீக்கிரம் நீங்கும். பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். சீரகம் தாளித்து ஒரு கொத்து கருவேப்பிலையை போடுங்கள். ரெண்டு பல் பூண்டை தோலுரித்து இடித்து சேருங்கள். பின் காரத்திற்கு வர மிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்றை உதிர்த்து சேருங்கள். இவற்றை நன்கு பொன்னிறமாக வதக்கி விடுங்கள்.
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கி வரும் பொழுது, நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கி விடுங்கள். ஓரளவுக்கு இதன் பிசுபிசுப்பு தன்மையை எளிதாக நீக்குவதற்கு கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள், சீக்கிரம் வதங்கும். வெண்டைக்காய் ஓரளவுக்கு சுருள வதங்கி வரும் பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து விடுங்கள். வெண்டைக்காயில் அதிக உப்பு சேர்க்கக்கூடாது. சற்று குறைவாகவே சேர்த்துக் கொள்வது நல்லது. பின் அரை மூடி எலுமிச்சை பழ சாற்றை ஊற்றுங்கள்.
பின் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வறுத்து அரைத்து பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை தூளை சேர்க்க வேண்டும். ஒரு பிரட்டு பிரட்டியதும், துருவிய தேங்காய் துருவலை சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சுடச்சுட சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.