
மனிதனாக இருப்பவர்களுக்கு எப்படி தனக்கென்று ஒவ்வொரு விருப்பம் இருக்கிறதோ, அதுபோல இறைவனை பூஜிக்கும் போது அவர்களுக்கு பிடித்த மலர்களை வைத்து பூஜை செய்தால், நாம் நினைத்தது விரைவில் நடைபெறும். இறைவனைப் பூஜிப்பதில் மஞ்சள், குங்குமம், பத்தி, கற்பூரம் இவை அனைத்தும் எவ்வித பங்கு வகிக்கிறதோ, அதுபோல மலர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மலர்களின் தோற்றமும், அவற்றில் இருந்து வரும் வாசனையை இறைவனை பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கின்றன. நாம் கடவுளை வணங்கும் பொழுது அந்த கடவுளுக்கான மலர்களை வைத்து வணங்கினால் நமக்கான பலன்கள் இன்னும் அதிகமாக கிடைக்கும். எனவே எந்தெந்த கடவுள்களுக்கு எந்தெந்த மலரை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
விநாயகர் பூஜைக்கு உகந்த மலர்கள்:
விநாயகருக்கு சிகப்பு நிறத்தில் உள்ள மலர்களை வைத்து பூஜை செய்யலாம். அதிலும் செம்பருத்தி பூவை வைத்து பூஜை செய்யும் போது அதிக பலன் கிடைக்கிறது. மேலும் விநாயகருக்கு மல்லி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, தாமரை, அருகம்புல் போன்ற மலர்களை வைத்து பூஜை செய்யும்பொழுது நற்பலன்கள் விரைவாக கிடைக்கிறது.
முருகப்பெருமான் பூஜைக்கு உகந்த மலர்கள்:
கார்த்திகேயன் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு சிவப்பு நிறத்திலான அல்லி, அரளி, செம்பருத்தி, கனகாம்பரம் மற்றும் சிவப்பு ரோஜா ஆகிய மலர்களை வைத்து பூஜை செய்யலாம். அல்லது வெள்ளை நிறத்திலான அனைத்து மலர்களையும் முருகப்பெருமான் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சிவபெருமான் பூஜைக்கான மலர்கள்:
முழுமுதற்கடவுளான சிவபெருமானுக்கு வெள்ளை நிறத்திலான மலர்கள் பூஜைக்கு உகந்ததாக இருக்கிறது. மகிழம்பூ, நீல நிற தாமரை, இளஞ்சிவப்பு நிற தாமரை, வெள்ளைத்தாமரை, செவ்வரளி பூ, ஊமத்தம்பூ, எருக்கம் பூ, பாரிஜாதம் இவற்றை வைத்து பூஜை செய்வதால் இல்லத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல் வில்வ இலை, கம்பு போன்ற தானியங்களையும் சிவபெருமானுக்கு படைக்கலாம். ஆனால் சிவனுக்கு தாழம்பூவை மட்டும் படைக்கக் கூடாது. சிவபெருமானுக்கு பூஜை செய்யும் மலர்கள் அனைத்தும் பார்வதி தேவிக்கும் உரிய மலர்களாகும்.
துர்க்கை அம்மன்:
தாமரை, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் துர்கை அம்மனுக்கு பூஜை செய்ய பயன்படுத்தலாம். வில்வ இலையையும் துர்க்கை அம்மனுக்கு பயன்படுத்துவது மிகவும் விசேஷ நனமையை கொடுக்கிறது. ஆஞ்சநேயருக்கு மல்லிகைப்பூ, துளசி, எருக்கும்பூ இவற்றை வைத்துப் பூஜை செய்யலாம்.
விஷ்ணு, மகாலட்சுமி:
சாமந்திப்பூ, குண்டுமல்லி, தாமரை, சம்பங்கி இவற்றை விஷ்ணுவிற்கு அர்ச்சனை செய்வதற்கு பயன்படுத்தலாம். துளசியை மாலையாகப் பயன்படுத்தி விஷ்ணு பகவானுக்கு போடும் பொழுது அதிகப்படியான பலன் கிடைக்கிறது. நாட்டு ரோஜா, சம்பங்கி, பன்னீர் ரோஜா, போன்ற வாசனை மிக்க மலர்கள் மகாலட்சுமி தேவிக்கு உரியதாக இருக்கிறது. இவற்றை வைத்து மகாலட்சுமி தேவியை பூஜை செய்ய சிறந்த பலன்களை பெற முடியும்.