- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தல வரலாறு

அவிநாசியப்பர் கோவில்

அவிநாசி என்ற வார்த்தைக்கு ஒரு அற்புதமான பொருள் உண்டு. ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது. ‘அவிநாசி’ என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். அழிவு இல்லாத திருக்கோவில் தான் இந்த அவினாசி. இந்தக் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்தத் திருத்தலத்தில் நாம் வழிபடும் இறைவனின் பெயர் அவிநாசி அப்பர். இந்தக் கோவிலில் தேவி கருணாம்பிகை, அவிநாசியப்பருக்கு வலதுபுறம் இருப்பது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. தேவாரத் திருத்தலங்களுல் அவினாசி அப்பர் கோவிலும் அடங்கும். சுந்தரர் தேவாரப் பாடலை பாடியது இத்தலத்தில்தான். மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச பதவி ஏற்கும் போது, நேராக காசிக்குச் செல்வார்கள். காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு, முதலில் அரண்மனைக்கு செல்ல மாட்டார்கள். அந்த சிவலிங்கத்தை அவிநாசியப்பர் திருக்கோவிலில் வைத்து பூஜை செய்து விட்ட பின்பு தான் அவர்கள் அரண்மனைக்கு எடுத்துச் செல்வார்கள். திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கான அருளை இந்த அவிநாசியப்பர் அருளுகின்றார்.

- Advertisement -

தல வரலாறு

அவிநாசியப்பர் திருக்கோவில் குளத்தங்கரையில் சில அந்தண சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் அந்தக் குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்தச் சிறுவனின் தாய், தந்தை, நண்பர்களின் கண் முன்னே ஒரு முதலையானது அந்த சிறுவனை விழுங்கிவிட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்தது. அந்த சமயத்தில் இறைவனின் நண்பனான சுந்தர மூர்த்தி நாயனார் அந்த ஊருக்கு வருகை தந்தார். இறைவனின் பாடல்களை பாடிக்கொண்டு அங்குள்ள அக்ரகாரம் உள்ளே நுழைந்தார். வேத மந்திரங்கள் முழங்க ஒரு வீட்டில் பூணூல் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டிலேயே ஒரு அழுகைக் குரல் கேட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பு தன் மகனை அந்த முதலைக்கு இறையாக கொடுத்த பெற்றோர்களின் அழுகை சத்தம் தான் அது. தன் மகன் உயிரோடு இருந்திருந்தால் தங்கள் வீட்டிலும் பூணூல் சடங்கு நடந்திருக்கும் என்று எண்ணி அழுது கொண்டிருந்தனர். இவர்களின் வேதனையை அறிந்த நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், அங்கிருந்து நேராக அவிநாசியப்பர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடி அந்த குழந்தையை உயிரோடு மீட்டுத்தர வேண்டும் என்று, அந்த சிவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார். சுந்தரரின் வேண்டுதலுக்கு செவி கொடுத்த இறைவன், அந்த முதலைக்கு ‘ஐந்து வயது உடைய சிறுவன் மூன்று ஆண்டுகள் கழித்து எட்டு வயதில் எப்படி இருப்பானோ அந்த தோற்றத்திலேய அந்தப் பாலகன் முதலை வாயில் இருந்து வெளியில் வர வேண்டும்’ என்று கட்டளையிட்டார். அவிநாசியப்பரின் கட்டளைப்படி அந்த முதலையும் அந்த பாலகனை வெளியே விட்டு விட்டது. அந்த பாலகனை முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்தது இந்த கோவில். எமன் வாயில் சென்றவனை கூட இந்த தலம் மீட்டுத்தரும் என்பது இதன் பொருள். நீண்ட ஆயுளை கொடுக்கக் கூடியவன் அந்த அவிநாசியப்பர். சிவபெருமானுக்கு ‘ஆசுதோஷன்’ என்ற பெயரும் உண்டு. ஆசுதோஷன் என்றால் எளிதில் அருள் புரியக் கூடியவன் என்று பொருளாகும். அப்படிப்பட்ட இறைவன்தான் அவிநாசியப்பர்.

- Advertisement -

பலன்கள்

தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். எல்லாத் தீமைகளும் நீங்கி, நவகிரக தோஷங்களும் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். ராகு காலத்தில் கருணாம்பாளுக்கு விளக்கேற்றி வழிபடும் போது நாம் நினைத்த காரியம் கைகூடும்.

- Advertisement -

செல்லும் வழி

கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசி என்னுமிடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

பெயர்-அவிநாசியப்பர் திருக்கோயில்
ஊர்-அவிநாசி
மாவட்டம்-திருப்பூர்
மாநிலம்-தமிழ்நாடு

இதையும் படிக்கலாமே
கடன் தொல்லையை நீக்கும் மைத்ரேய முகூர்த்தம்.

English Overview:
Here we have Avinashi temple history. Arulmigu avinashi lingeshwarar temple. Avinashi temple history in tamil. Avinashi temple.

- Advertisement -