- Advertisement -
குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – ரிஷபம்

ரிஷபம்: (கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதம், மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதம்.)
சுப கிரகமாக விளங்கும் குரு பகவான் பெயர்ச்சியாகும் பொழுது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தங்களுடைய ராசிக்கு அவர் என்ன செய்யப் போகிறார்? என்கிற ஆர்வம் இருக்கும். அவ்வகையில் வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை மாதம் 5ஆம் நாள் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி ஆகிறார். அவரால் கிடைக்கப் போகும் சாதக, பாதகங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும்? என்பதைத் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சனியின் ஆட்சி வீடான மகரத்தில் சேர்ந்து இருப்பதால் நீசம் அடைகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு குருபகவான் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் இருந்து கொண்டு 1, 3, 5 ஆகிய இடங்களில் அவருடைய பார்வை விழுகிறது. ஆகவே ரிஷப ராசியை பொறுத்தவரை இந்த குரு பெயர்ச்சியானது அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பாகவே இருக்கும். குடும்ப உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைத்து வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள்.

- Advertisement -

உத்தியோகம் மற்றும் தொழில்:
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டிகள் மற்றும் பொறாமைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. அதனை எதிர்கொள்ளும் யுக்திகளையும் நீங்கள் சிறப்பாக கையாள வேண்டும். சக பணியாளர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எதிலும் துணிச்சலுடன் போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கா விட்டாலும் இந்த குரு பெயர்ச்சியில் நிச்சயம் அனைவரும் பாராட்டும் விதமாக உங்களுடைய திறமைகள் வெளிப்படும்.

Guru peyarchi palangal Rishabam

பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் சிரமமின்றி குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண முடியும். பணவரவு தாராளமாக இருக்காது. ஆனால் உங்களுடைய தேவைக்கு ஏற்றபடி நிச்சயம் தனவரவு திருப்தி தரும் வகையில் அமையும். தேவையற்ற கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

- Advertisement -

குடும்ப வாழ்க்கை:
குடும்பத்தில் எப்போதும் போல் சாதாரணமான சூழ்நிலை நிலவினாலும் சிறு சிறு சண்டைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனினும் அவைகள் பெரிதாக தெரியப் போவதில்லை. கணவன் மனைவிக்கு இடையே இருந்த ஒற்றுமை இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருந்தாலும் போதுமான ஒத்துழைப்பு தர மாட்டார்கள். பிள்ளைகள் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள் எனவே எச்சரிக்கை தேவை.

Guru peyarchi palangal Rishabam

ஆரோக்கியம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் இல்லை என்றாலும் கவனமுடன் இருப்பது அவசியம். அவ்வப்போது வயிறு தொடர்பான பிரச்சினைகளும், அஜீரணக் கோளாறுகளும் வந்து போக வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறிது செலவுகள் செய்ய நேரலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மேல் கூடுதல் அக்கறை செலுத்துங்கள்.

- Advertisement -

செய்ய வேண்டிய பரிகாரம்:
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை வரும் குரு பெயர்ச்சியானது ஓஹோ என்ற பலன்களை தராவிட்டாலும் அவ்வளவாக கெடுதலும் நேர போவதில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. உங்கள் ராசிக்கு குரு பகவானை வேண்டி மஞ்சள் கயிறு காப்பாக கட்டிக் கொள்வதும், கோவில்களுக்கு விளக்கிற்கு எண்ணெய் தானம் செய்வதும் சிறப்பான பலன்களை நல்கும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மேஷம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -