
உக்கிர தெய்வங்களில் ஒருவராகவும், அதிசக்தி வாய்ந்த தெய்வங்களுள் ஒருவராகவும், சப்த கன்னிகளில் ஒருவராகவும் திகழக்கூடியவர் வாராகி அம்மன் என்று நம் அனைவருக்குமே தெரியும். இன்றைய காலத்தில் பலரது இஷ்ட தெய்வமாக திகழக்கூடியவள் வாராகி அம்மன். அப்படிப்பட்ட வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த தினமாக திகழ்வதுதான் பஞ்சமி. பஞ்சமி தினத்தன்று வாராகி அம்மனுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய கடன் பிரச்சினையும் எதிரிகள் தொல்லையும் நீங்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
உக்கிர தெய்வங்களை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய எதிரிகளால் நமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும். மேலும் எதிரிகள் தொல்லையே இல்லாத நிலை கூட உண்டாகும். நமக்கு எதிரியாக இருந்தவர் நம்மை விட்டு விலகிச் செல்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் நம்மை அதிகளவில் பாதிக்கக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய தெய்வமாக தான் உக்கிர தெய்வங்கள் திகழ்கின்றன. அந்த உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடிய வாராகி அம்மனை பங்குனி மாத தேய்பிறை பஞ்சமி நாளன்று தீபமேற்றி வழிபாடு செய்ய அனைத்து விதமான கடன் பிரச்சனைகளும் எதிரிகள் தொல்லையும் நீங்கும்.
இந்த வழிபாட்டை நாம் மார்ச் மாதம் 19ஆம் தேதி பங்குனி மாதத்தின் ஐந்தாம் நாள் மாலை 5 30 மணியிலிருந்து 10 மணிக்குள் செய்துவிட வேண்டும். பூஜை அறை சற்று பெரியதாக இருக்கும் பட்சத்தில் பூஜை அறையில் இந்த வழிபாட்டை செய்யலாம். சிறிய பூஜை அறையாக இருக்கிறது அல்லது செல்ஃபில்தான் சாமி போட்டோவை வைத்து வழிபாடு செய்கிறோம் என்னும் பட்சத்தில் வீட்டின் மையப் பகுதி என்று கருதக்கூடிய ஹாலில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக வீட்டை சுத்தமாக துடைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் வாராஹி அம்மனின் படமோ சிலையோ இருக்கும் பட்சத்தில் அதையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். எந்த இடத்தில் நாம் இந்த வழிபாட்டை செய்யப் போகிறோமோ அந்த இடத்தில் ஒரு முக்காலியை போட வேண்டும். வீட்டில் முக்காலி இல்லாத பட்சத்தில் ஒரு நாற்காலியை கூட போட்டு நாம் இந்த வழிபாட்டை செய்யலாம். இந்த முக்காலிக்கு மேல் ஒரு தாம்பாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்தின் மேல் வாசனை மிகுந்த மலர்களை பரப்ப வேண்டும். மல்லிகை, முல்லை, மரிக்கொழுந்து போன்றவற்றில் எதை வேண்டுமானாலும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிறகு ஒரு அகல் விளக்கை எடுத்து அதில் ஐந்து இடங்களில் மஞ்சள் குங்குமம் வைத்து அந்த அகல் விளக்கை வாசனை மிகுந்த மலர்களுக்கு நடுவே வைத்து விடுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய பிறகு அந்த தீபத்தில் இரண்டு ஏலக்காய் ஒரு கிராம்பு இவற்றை போட வேண்டும். பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து அந்த தீபச்சுடர் ஒளியை பார்த்தவாறு வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு அதே மந்திரத்தை கூறிக்கொண்டு அந்த தீபத்தை மூன்று முறை வலம் இருந்து இடமாக சுற்றிவர வேண்டும்.
இப்படி நாம் செய்வதன் மூலம் வாராஹி அம்மனின் அருளால் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனை தீரும். மேலும் நமக்கு ஏற்படக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் விலகும். வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்துவிட்டு தீபத்தை எடுத்து எப்பொழுதும் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். அதில் போட்டிருக்கக் கூடிய ஏலக்காய் மற்றும் கிராம்பை பொடி செய்து சாம்பிராணி தூளுடன் சேர்த்து தூபம் போட வேண்டும்.
“ஓம் வராகி தாயே போற்றி ஓம்”
இதையும் படிக்கலாமே:நல்ல வேலை கிடைக்க கூற வேண்டிய பதிகம்
எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு வாராகி அம்மனை நினைத்து தேய்பிறை பஞ்சமி நாளன்று செய்பவர்களுக்கு வாராகி அம்மன் அந்த தீபத்தில் எழுந்தருளி நம்முடைய வேண்டுதலை பூர்த்தி செய்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.