
காவல் தெய்வமாக திகழக்கூடியவர் கால பைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்துமே தீரும் என்று கூறப்படுகிறது. காலபைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுவது அவருக்குரிய அஷ்டமி திதிதான். பௌர்ணமி, அமாவாசையிலிருந்து எட்டாவது திதியாக வரக்கூடிய இந்த அஷ்டமி திதி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாகவே கருதப்படுகிறது. அந்த வகையில் தை மாதத்தின் எட்டாம் நாள் ஜனவரி மாதத்தின் 21ஆம் நாள் அன்று பகல் 12: 44 இருந்து மறுநாள் பகல் 2:51 வரை தேய்பிறை அஷ்டமி என்பதே இருக்கிறது. அந்த நாளில் வீட்டிலேயே தீபம் ஏற்றும் முறையைப் பற்றிதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நம்முடைய கஷ்டகாலத்தில் நமக்கு துணையாக வந்து நம்முடைய கஷ்டங்களை தீர்த்து மன தைரியத்தையும் வலிமையையும் தரக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் கால பைரவர். அப்படிப்பட்ட காலபைரவரின் அருளை பெறுவதற்கு செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி போன்ற தினங்களில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் தை செவ்வாய்க்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமி வருகிறது. இந்த நாளில் வீட்டிலேயே பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காலபைரவர் வழிபாடு என்பது நள்ளிரவு வழிப்பாடாகவே திகழ்கிறது. அதனால் அஷ்டமி திதி இரவு இருக்கும் நாளில் இந்த வழிபாட்டை செய்வது என்பது சிறப்பு. அந்த வகையில் இன்று ஜனவரி மாதத்தின் 21ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு மேல் வீட்டில் இந்த ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வழிபட காலபைரவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரு இலை வேண்டும்.
காலபைரவருக்கு உகந்த நிறமாக கருதப்படுவது சிவப்பு நிறம். அதனால் தான் காலபைரவர் வழிபாட்டில் செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை வைத்து வழிபாடு செய்கிறோம். அதே போல் தீபம் ஏற்றும் பொழுதும் சிவப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்றுகிறோம். அந்த வகையில் செம்பருத்தி செடியின் இலையை பறித்து சுத்தம் செய்து ஒரு தாம்பாளத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலைக்கு சந்தனம் குங்குமம் வைத்து அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த அகல் விளக்கில் வேப்ப எண்ணையை ஊற்றி சிவப்பு நிற திரியை போட்டு மேலும் அதில் வைரவருக்கு உகந்த மிளகை எட்டு என்ற எண்ணிக்கையில் போட வேண்டும். இவ்வாறு போட்டு முடித்துப் பிறகு வீட்டில் காலபைரவரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். அப்படி இல்லாத பட்சத்தில் சிவபெருமானின் படத்திற்கு முன்பாக இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த தீபத்தை ஏற்றி தீபத்தை முழுமனதோடு பார்த்து “ஓம் ஸ்ரீம் கால பைரவாய நமஹ” என்னும் மந்திரத்தை எட்டு முறை உச்சரிக்க வேண்டும்.
இந்த முறையில் நாம் கால பைரவரை அஷ்டமி தின இரவில் வழிபாடு செய்தோம் என்றால் காலபைரவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அவரின் அருள் கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய கஷ்டத்தில் இருந்து படிப்படியாக விலகி வருவார்கள்.
இதையும் படிக்கலாமே:அழிந்து வரும் ஜடாமாஞ்சில் பயன்கள்
எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முழு மனதோடு செய்தால் தான் அதன் பலனை பெற முடியும். அந்த வகையில் இன்றைய தினம் இந்த ஒரு தீபத்தை முழுமனதோடு காலபைரவரை நினைத்து ஏற்றி வழிபாடு செய்து காலபைரவரின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.