சில அபூர்வ வகையான மூலிகைகள் வேகமாக அழிந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் இமயமலை, நேபாளம், சீனா போன்ற மலைப்பகுதிகளில் அரிதாக கிடைக்கும் இந்த ஜடா மாஞ்சில் மூலிகையும் ஒன்று! ஆயுர்வேத மருத்துவத்தில் ஜடா மாஞ்சில் மூலிகையை “தபஸ்வாணி” என்று கூறுவார்கள். இதன் தண்டு மற்றும் கிழங்கு பகுதி தலை முடி ஜடை போல காட்சி தருவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இம்மூலிகை பற்றிய ரகசியங்கள் அறிய அறிய பல ஆச்சரியங்களும், வியப்புகளுக்கு உள்ளாகிறது. மகத்துவம் நிறைந்த இந்த மருத்துவ மூலிகை ஜடா மாஞ்சில் பற்றிய ரகசியத்தை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தொடர்ந்து அறிந்து கொள்ள போகிறோம்.
இதயத்துடிப்பு சீராக இருக்கவும், நரம்பு மண்டலங்கள் சீராக இயங்கவும், அபரிமிதமான முடி வளர்ச்சிக்கும், நினைவாற்றலுக்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவக் கூடிய இந்த ஜடா மாஞ்சில் ஆயுர்வேதத்தில் பெருமளவு பயன்படுகிறது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. நரம்பு தளர்ச்சி, வலிப்பு, மனநோய் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வல்லது. தோல் சார்ந்த பிரச்சினைகளையும் குணமாக்கும் அற்புத மூலிகை இது.
சிறிதளவு நல்லெண்ணெயுடன், ஜடா மாஞ்சில் மூலிகை எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வந்தால், நரம்பு தளர்ச்சி கட்டுப்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். ஜடாமாஞ்சில் மூலிகை பொடியை தோலில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி வந்தால் பூஞ்சை தொற்றுகள், மற்ற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை தீரும்.
மூலிகை ஆயுர்வேதத்தில் மாத்திரைகளாகவும் மற்றும் எண்ணெய், பொடி போன்ற வடிவங்களிலும் கிடைக்கப் பெறுகிறது. பித்தத்தை தணிக்கும், உடல் சூட்டை குறைக்கும், மாதவிடாய் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழித்து, மலச்சிக்கலை தடுக்கிறது. அஸ்வகந்தா மூலிகை உடன் ஜடா மாஞ்சில் மூலிகையும் சேர்த்து ஆயுர்வேத முறைப்படி பயன்படுத்தினால் உடல் மற்றும் மனதளவில் ஏற்படக்கூடிய விளைவுகளால் வரக்கூடிய தூக்கமின்மை பிரச்சனையை முற்றிலும் குணமாக்கி நல்ல ஒரு தூக்கத்தை கொடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணெயை ஓரிரு சொட்டுக்கள் தலையில் தேய்த்து தடவினாலும் நரம்பு மண்டலம் அமைதியாகி நிம்மதியான தூக்கம் வரும்.
ஜடா மாஞ்சில் மூலிகையை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து லேசான சூடேற்றி அல்லது வெயிலில் நன்கு காய வைத்து அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் முடி உதிர்தல் முற்றிலுமாக தடுக்கப்பட்டு, நீண்டு இரண்டு மடங்காக அபரிமிதமான முடி வளர்ச்சியை பெறலாம். மேலும் பொடுகு தொந்தரவுகள் அகலும். இரட்டை பிளவுகளாக இருக்கும் நுனி மூடி பிளவுகள் மறையும். தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து நல்ல பலன் தரும். ஆரம்பத்தில் வலுவில்லாத முடிகள் உதிர ஆரம்பிக்கும். அதன் பிறகு புதிய முடி முளைக்கும். தொடர்ந்து ஒரு வருடம் பயன்படுத்தினால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். முடி இல்லாத இடங்களில் கூட புதிய முடிகள் வளர செய்யக்கூடிய அற்புதமான மூலிகை இதுவாகும்.
இதையும் படிக்கலாமே:
தடைகளை தகர்க்கும் அதிசக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்
தினமும் ஒரு ஸ்பூன் தேனுடன் சேர்த்து மருத்துவர் ஆலோசனையின் படி கலந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும், நிம்மதியான தூக்கம் வரும், இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து, ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு அற்புதமான பலன்களை தரக்கூடிய இந்த அபூர்வ வகை மூலிகை செடியானது அழிந்து வருவது தான் வேதனைக்குரியது.