- Advertisement -

நள்ளிரவில் அடர்ந்த காட்டின் வழியே, வேதாளத்தை சுமந்தவாறு நடந்து வந்துகொண்டிருந்தான் விக்ரமாதித்தன். எப்போதும் போல அவனிடம் ஒரு கதை சொல்ல தவுஙகியது வேதாளம். இதோ அந்த கதை.

ஒரு ஊரில் வண்ணான் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ரத்னா என்ற அழகிய பெண் இருந்தாள். அப்போது அவ்வூருக்கு தொழில் நிமித்தமாக வந்த வண்ணான் இளைஞனான சேகர், ரத்னாவை கண்டு அவள் மீது ஆசைகொண்டான். உடனே அவள் வீட்டை தேடிச்சென்று, அவளின் பெற்றோரிடம் தனக்கு ரத்னாவை திருமணம் செய்து வைக்குமாறு பல வகையில் அவர்களிடம் பேசிப்பார்த்தான். இவனின் பிடிவாதத்தை உணர்ந்த ரத்னாவின் பெற்றோர்கள், ஒருவழியாக திருமணத்திற்கு சம்மதித்து, ரத்னாவிற்கும் சேகருக்கும் திருமணம் செய்வித்தனர். திருமணம் முடிந்ததும் சேகருடன் வாழத்தொடங்கினாள் ரத்னா.

- Advertisement -

ரத்னாவிற்கு குணாளன் என்று ஒரு சகோதரன் இருந்தான். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அவனால் ரத்னாவின் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவே ரத்னாவையும், அவளின் கணவனான சேகரையும், அவர்களின் வீட்டிற்கு சென்று தான் அளிக்கப்போகும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்து, அவர்களை தன்னுடன் தனது வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தான். அப்போது வரும் வழியில் ஒரு காளி கோவிலை கண்ட குணாளன். தான் அக்கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவதாகவும், அதுவரை ரத்னாவும், அவள் கணவனும் இங்கேயே காத்திருக்குமாறு கூறி உள்ளே சென்ற குணாளன் என்ன காரணத்தினாலோ திடீரென்று ஒரு வாளை எடுத்து, காளிக்கு தன் தலையையே காணிக்கையாக வெட்டித்தந்து இறந்தான்.

நீண்ட நேரமாகியும் தன் சகோதரன் திரும்பாததை எண்ணி கவலை கொண்ட ரத்னா, தன் கணவனிடம் கோவிலுக்குள் சென்று குணாளனின் நிலையை கண்டு வருமாறு கூறினாள். அதை கேட்டு கோவிலுக்குள் சென்ற சேகர், அங்கு குணாளன் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்தான். பின்பு சேகரும் என்ன காரணத்தினாலோ தன் தலையை துண்டித்து கொண்டு இறந்து போனான். இப்போது இருவரும் நெடும்நேரம் திரும்பாததை எண்ணி ரத்னா கோவிலுக்குள் சென்று பார்த்த போது, இருவரும் தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து, அழுது புலம்பினாள்.

- Advertisement -

அப்போது அக்கோவிலின் தெய்வமான “காளி”, அந்த இருவரின் மீதும் ரத்னாவிற்கு இருந்த பாசத்தை எண்ணி மகிழ்ந்து, ரத்னாவிடம் அவ்விருவரின் தலைகளையும் தான் சொல்லும் மந்திரத்தை சொல்லி, அவர்களின் உடலில் பொருத்தி, அவர்களை உயிர்ப்பித்து கொள்ளுமாறு கூறினாள். ரத்னாவும் அவ்வாறே செய்து அவர்கள் இருவரையும் உயிர்பித்தாள்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது அவசரத்தில் ரத்னா தன் கணவனின் தலையை தன் சகோதரன் உடலிலும், தன் சகோதரனின் தலையை தன் கணவனின் உடலிலும் பொருத்தி அவர்களை உயிர்ப்பித்து விட்டாள். இப்போது அவர்களில் யாரை தன் கணவனாக ரத்னா ஏற்க வேண்டும்?
என கேட்டது வேதாளம்.

- Advertisement -

இதற்கு சற்று நேரம் யோசித்த விக்ரமாதித்தன் “தன் கணவனின் தலை பொருத்தப்பட்டிருக்கும் நபரை தான் ரத்னா கணவனாக கருத வேண்டும், ஏனெனில் ஒரு உடலுக்கு ஒரு அடையாளத்தை தருவதே “தலை” தான். அது உடலில் இல்லாத பட்சத்தில் அது வெறும் முண்டமே” என விக்ரமாதித்தியனின் பதிலைக் கேட்டு வேதாளம், அவன் முதுகிலிருந்து பறந்து சென்று, முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
பூதத்தின் சாபம் நீக்கிய ஜோதிடன் – விக்ரமாதித்தன் கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள் படிக்க தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -