- Advertisement -
தமிழ் கதைகள் | Tamil stories for reading

பாறை மனதையும் கலங்கடிக்கும் ஒரு மாணவனின் கதை

காலாண்டு விடுமுறை முடிந்து ஒரு பள்ளி ஆசிரியை தன் வகுப்பிற்கு வருகிறார். அவரை கண்டதும் மாணவ மாணவிகள் வணக்கம் சொல்கின்றனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று அந்த ஆசிரியை கூறுகிறார். ஆனால் உண்மையில் அந்த ஆசிரியை அனைத்து மாணவர்களையும் நேசிக்கிறாரா என்றால் இல்லை.

ஒரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. அவன் பெயர் முகிலன். முகிலனை அவர் நேசிக்காததற்கு காரணம் அவன் எதிலும் ஒழுக்கமில்லாதவனாக இருக்கிறான். அவன் எதிலும் சிறந்தவனாக இருக்கவில்லை. அந்த வகுப்பில் ஏதாவது ஒரு கெட்ட உதாரணம் சொல்ல வேண்டுமானால் அதற்கு முகிலனின் பெயர் பயன்படுத்தப்பட்டது.

- Advertisement -

அந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு முடிந்து. மாணவர்களின் மதிப்பெண் மற்றும் அவர்கள் எதில் முன்னேறவேண்டும் என்பது குறித்த முன்னேற்ற அறிக்கை தயாரானது. அந்த அறிக்கை தலைமை ஆசிரியையின் கையெழுத்திற்காக அவர் டேபிளிற்கு சென்றது. ஒவ்வொரு மாணவர்களின் ரேங்க் கார்டுகளையும் கவனமாக பார்த்து கையெழுத்திட்ட தலைமை ஆசிரியை, முகிலன் ரேங்க் கார்டை பார்த்து நொந்து போனார். அவர் உடனே அந்த வகுப்பிற்குரிய ஆசிரியையை அழைத்தார்.

கலைவாணி டீச்சர், என்ன இது ? முகிலனை பற்றி ஏன் இவளவு மோசமாக எழுதி இருக்கிறீர்கள். ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளை நம்மிடம் நம்பி ஒப்படைக்க காரணம் அவர்களை நாம் நல்வழி படுத்துவோம், அவர்களின் தனித்துவம் வெளிப்பட நாம் ஊக்குவிப்போம் என்பதற்காக தானே. ஆனால் நீங்கள் ஏன் முகிலன் விஷயத்தில் இப்படி எழுதி உள்ளீர்கள். இதை கண்டால் அவனது பெற்றோர் மனம் எப்படி புண்படும் என்றார்.

- Advertisement -

கலைவாணி டீச்சருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை ஆனாலும் அவரால் எதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அவர் முகிலனை பற்றி பல குறைகளை சொல்லத் துவங்கினார். அவன் எதற்கும் லாயக்கு இல்லை என்பது போல இருந்தது அவரின் பேச்சு. இதை கேட்ட தலைமை ஆசிரியை, முகிலனின் கடந்த சில ஆண்டுகளுக்கான முன்னேற்ற அறிக்கையை எடுத்து கலைவாணி டீச்சரிடம் காண்பித்தார். கலைவாணி டீச்சர் அவற்றை படிக்க துவங்கினார்.

முகிலன் மூன்றாம் வகுப்பு படிக்கையில் அவன் வகுப்பில் மிக சிறந்த மாணவனாக விளங்கி இருக்கிறான். அவன் அறிவு திறனை கண்டு அந்த வகுப்பு ஆசிரியை அவனை புகழ்ந்து எழுதி இருக்கிறார். நான்காம் வகுப்பிற்கான முன்னேற்ற அறிக்கையில், முகிலனின் தாயாருக்கு புற்று நோய் தீவிரம் அடைந்துள்ளதால் அவனால் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த இயலவில்லை. அவன் மதிப்பெண்கள் குறைந்ததற்கு இதுவே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தது.

- Advertisement -

 

ஐந்தாம் வகுப்பிற்கான முன்னேற்ற அறிக்கையில், முகிலனின் தாயார் இறந்துவிட்டதால் அவன் தன் தாயையே எப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறான். அவன் எதிலும் ஆர்வம் காட்டுவதில்லை மேலும் வீட்டில் அவனுக்கு பாடம் சொல்லித்தர சரியான ஆள் இல்லாததால் அவன் அனைத்து பாடங்களிலும் பின்தங்கியுள்ளான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதை கண்டு கலைவாணி டீச்சரின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. அவர் உடனே தன் வகுப்பறைக்கு விரைந்து சென்றார். மாணவர்கள் எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர். நான் நேசிக்கும் எனதருமை மாணவச்செல்வங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கம் என்று அந்த ஆசிரியை கூறுகிறார். இந்த முறையும் அந்த ஆசிரியை கூறியதில் ஒரு சிறு பொய் இருக்கத்தான் செய்தது. காரணம் மற்ற மாணவர்களை காட்டிலும் அவர் முகிலனை அதிகம் நேசித்தார்.

எந்த ஒரு தவறான உதாரணத்திற்கு முகிலனின் பெயர் தவறிக்கூட அவர் வாயில் இருந்து வரவில்லை. அவர் முகிலனிடம் அன்பு பாராட்டினார், முகிலனும் தன் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்த ஆரமித்தான். முழு ஆண்டு பரீட்சை நெருங்கியது மாணவர்கள் அனைவரும் அடுத்த வகுப்பிற்கு செல்ல தயாரானார்கள். அதோடு அந்த அன்பு ஆசிரியைக்கு அனைத்து மாணவர்களும் ஒரு அன்பு பரிசை ஒரு மேஜைமேல் வைத்திருந்தனர். அதில் ஒரே ஒரு பரிசு மட்டும் செய்தித்தாள் காகிதத்தால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த உடன் அது முகிலன் கொண்டு வந்த பரிசுதான் என்று ஊகித்துக்கொண்ட ஆசிரியை அதை எடுத்து பிரித்தார்.

இதை கண்டு மாணவர்கள் அனைவரும் சிரித்தனர். காகிதம் சூழ்ந்த அந்த சிறிய பெட்டிக்குள் ஒரு அரை பாட்டில் செண்ட்டும் ஒரு பழைய தங்க பிரேஸ்லெட்டும் இருந்தது. இதை பார்த்து என்ன இது என்று அவர் முகிலனிடம் கேட்டார். இந்த சென்ட் பாட்டில் என் தாய் உபயோடப்படுத்தியது. இந்த பிரேஸ்லெட் அவர் கையில் இருந்தது. அவரை புதைக்கும் முன்பு அவர் கையில் இருந்து அவிழ்து வைக்கப்பட்ட பிரேஸ்லெட் இது என்றான். உடனே அந்த ஆசிரியையின் கண்களில் நீர் ததும்பியது. அவர் அந்த செண்டை அடித்துக்கொண்டு அந்த பிரேஸ்லெட்டையும் அணிந்துகொண்டார்.

அடுத்த வருடம் முகிலன் வேறு வகுப்பிற்கு சென்றுவிட்டான். அப்போது ஒரு நாள் கலைவாணி டீச்சரின் மேஜையில் ஒரு கடிதம் இருந்தது. “இன்று வரை நான் எத்தனையோ ஆசிரியர்களை கண்டுவிட்டேன் ஆனால் நீங்கள் தான் சிறந்தவர் ” என்று அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. முகிலன் அடுத்தடுத்த வகுப்பிற்கு தொடர்ந்து சென்றான் அவன் ஒவ்வொரு வகுப்பை கடக்கும் சமயத்திலும் கலைவாணி டீச்சரின் மேஜையில் அதே வரிகளோடு கூடிய ஒரு கடிதம் இருந்தது.

ஒருகட்டத்தில் முகிலன் தன் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேர வெளியூர் சென்றுவிட்டான். டீச்சருக்கும் மாணவனுக்கும் இடையில் இருந்த தொடர்பு அறுந்து போனது. பல வருடங்களாக அவர்கள் இருவரும் சந்திக்கவில்லை. கலைவாணி டீச்சருக்கு இப்போது அதிகம் வயதாகிவிட்டது. அவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அப்போது ஒரு நாள் திடீரென ஒரு கடிதம் வருகிறது. அதில் நான் தான் டாக்டர் முகிலன் எனக்கு இந்த இடத்தில் இந்த தேதியில் கல்யாணம் நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று எழுதி இருந்தது.

முகிலன் கொடுத்த சென்ட் பாட்டிலில் அப்போது சென்ட் இல்லை ஆனால் அவன் கொடுத்த பிரேஸ்லெட்டை அவர் பத்திரமாக வைத்திருந்தார். அதை எடுத்து அணிந்துகொண்டு அவர் தன் மாணவனின் திருமணத்திற்கு சென்றார். கலைவாணி டீச்சர் குறித்த அடையாளங்களை முகிலன் தன் நண்பர்களிடம் முன்பே சொல்லிவைத்திருந்தான். கலைவாணி டீச்சர், திருமண மண்டபத்திற்கு சென்றதும் அவரை அடையாளம் கண்டுகொண்ட முகிலனின் நண்பர்கள் அவரை முதல் வரிசைக்கு அழைத்து சென்றனர். பிறகு அவர் மன மேடைக்கு அழைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தாய் ஸ்தானம் கொடுக்கப்பட்டது.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. பிறகு கலைவாணி டீச்சர் பற்றி முகிலன் தன் மனைவியிடம் கூறுகையில் இவர் மட்டும் இல்லை என்றால் நான் இன்று இந்த நிலையில் இருந்திருக்க முடியாது என்றான். அதற்க்கு கலைவாணி டீச்சர், இவன் மட்டும் இல்லை என்றால் நான் ஒரு நல்ல ஆசிரியையாக இருந்திருக்க முடியாது. அதோடு ஒரு ஆசிரியை தன் மாணவர்களிடம் தாயன்போடு இருக்கவேண்டும் என்பதையும் நான் அறிந்திருக்கமாட்டேன் என்றார்.

இதையும் படிக்கலாமே:
ஸ்ரீராமர் சொன்ன பொய் – இராமாயணத்தில் நடந்த சம்பவம்.

இந்த உலகில் உள்ள அனைத்து குழைந்தைகளிடத்திலும் ஒரு திறமை நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் வீட்டு சூழல், வளரும் சூழல் என பலவற்றால் அந்த திறமை சில நேரங்களில் வெளிப்படாமலே போய்விடுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இந்த கதையில் வரும் கலைவாணி டீச்சர் போல தாய் அன்போடு மாணவர்களை அணுகினால் நிச்சயம் அனைத்து மாணவ செல்வங்களும் ஐயா அப்துல் காலம் போல வளர்வது உறுதி.

மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீக தகவல்களை உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டௌன்லோட் செய்து பயன் பெறுங்கள்.

- Advertisement -