
மங்கலப் பொருட்களான வெற்றிலை அனைத்து சாஸ்திர, சம்பிரதாயங்களில் முதலிடம் பெறுகின்றன. வெற்றிலையில் அனைத்து பகுதிகளிலும் தெய்வங்கள் வசிக்கின்றன. நுனிப்பகுதியில் மூதேவியும், வெற்றிலையின் காம்பு பகுதியில் மகாலட்சுமியும், நரம்பு பகுதியில் பிரம்மதேவரும், வெற்றிலையின் முன் பக்கத்தில் ஈசனும், பின் பக்கத்தில் சக்தியும் வசிப்பதாக ஐதீகம் உண்டு. இதனால் நுனி பகுதியை நீக்கிவிட்டு வெற்றிலையை போடுவது வழக்கம். இத்தகு வெற்றிலையை வைத்து செய்யப்படும் வழிபாடுகள் அனைத்தும் நம் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுவதாக ஐதீகம் உண்டு. வெற்றிலை பற்றிய மகத்துவங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
வெற்றிலை இல்லாமல் பாக்கை மட்டும் முதலில் போட்டால் அதன் துவர்ப்பு கழுத்து குழலை சுருக்கி நெஞ்சை அடைக்க செய்யும், அதனால் மயக்கம் உண்டாகும். மேலும் சாஸ்திர ரீதியாக வெற்றிலை இல்லாமல் பாக்கை உண்டால் உறவினர்களுக்குள் பகை உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது. எனவே முதலில் வெற்றிலையை போட்டுவிட்டு பாக்கை மெல்ல வேண்டும். இவ்வாறு செய்ய மகா விஷ்ணுவின் மார்பில் வீற்றிருக்கும் மகாலட்சுமியின் அருள் கிடைப்பதாக ஐதீகம் உண்டு. கீழ் வரும் இப்பாடல் இதற்கு சான்றாக அமைந்துள்ளது.
வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்: வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது!!!
வெற்றிலை போடுவதை இன்று தவறாக பார்க்கப்படுகிறது வருத்தப்பட கூடிய ஒன்று. வெற்றிலையை புகையிலையுடன் சேர்த்து போட்டால் தான் தவறு. வெற்றிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. வெற்றிலையால் கபம், சளி போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும். இதனால் தொடர்ந்து வெற்றிலையை அளவோடு போடுபவர்களுக்கு ஆரோக்கியம் பலம் பெறும். நம் முன்னோர்கள் அடிக்கடி வெற்றிலையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று இதன் பழக்கம் குறைந்து வருகிறது.
வெற்றிலையில் ஆண் வெற்றிலை, பெண் வெற்றிலை, மத்திம வெற்றிலை என்று மூன்று வெற்றிலைகள் உண்டு. வலது புறத்தில் இலை அதிகமாகவும், இடது புறத்தில் குறைவாகவும் இருக்கும் வெற்றிலை, ஆண் வெற்றிலை என்றும், இடது புறத்தில் இலை அதிகமாகவும், வலது புறத்தில் குறைவாகவும் இருக்கும் வெற்றிலை, பெண் வெற்றிலை என்றும், இரண்டு பக்கமும் ஒரே அளவிலான இலைகள் நேர்த்தியாக இருக்கும் பொழுது அது மத்திம வெற்றிலை என்றும் பிரிக்கப்படுகிறது. இதில் மூன்று ரகங்களிலும் இருக்கும் வெற்றிலைகளை எடுத்துக் வைத்து மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் வேண்டிய வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை. உங்களுடைய எத்தகைய வேண்டுதல்களையும் நிறைவேற்றக்கூடிய அதீத சக்தி இந்த வெற்றிலைகளுக்கு உண்டு. எனவே இந்த வெற்றிலைகளை வைத்து உங்கள் வேண்டுதல்களை நீங்களும் எளிதாக நிறைவேற்றிக் கொள்ளலாமே!
மத்திம வெற்றிலையில் ஐந்து வெற்றிலைகளை எடுத்து அதில் மஞ்சள் தடவிய அட்சதை அரிசியையும், 11 ஏலக்காய்களையும் வைத்து நுனி பகுதியில் இருந்து மடித்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் பொட்டலமாக கட்டி வைத்தால் பணக்கஷ்டம் நீங்கும். இதனை வைத்து விட்டு பணப்பெட்டியை மூடுவதற்கு முன்னர் கீழ்வரும் இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரியுங்கள்!
மந்திரம்:
ஓம் ஸ்ரீம் யக்ஷாய குபேராய வைஷ்ரவைாய தன தான்யாதிபதியே தன தான்ய சம்ரித்திம்மே தேஹி தாபய ஸ்வாகா!!!