
விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது சதுர்த்தி திதி ஆகும். இதில் தேய்பிறை சதுர்த்தி என்பதை நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுவோம். இந்த கார்த்திகை மாதம் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி என்பது செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. மேலும் அன்றைய நாளில் திருவாதிரை நட்சத்திரம் இணைந்து வருகிறது. திருவாதிரை நட்சத்திரம் என்பது சிவபெருமானுக்குரிய நட்சத்திரமாகவும், செவ்வாய்க்கிழமை என்பது முருகப்பெருமானுக்குரிய கிழமையாகவும், சதுர்த்தி திதி என்பது விநாயகப் பெருமானுக்குரிய திதியாகவும் கருதப்படுகிறது. இவை மூன்றும் ஒரு சேர இருக்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியை தான் ருண ஹர சதுர்த்தி என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட ருண ஹர சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடும் செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ருணம் என்றால் கடன் என்று அர்த்தம். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய எந்த கடனாக இருந்தாலும் அந்த கடனை தீர்ப்பதற்குரிய சதுர்த்தியாக தான் இந்த கார்த்திகை மாத தேய்பிறை சதுர்த்தி திகழ்கிறது. இந்த நாளில் விநாயகர் பெருமானே சில சூட்சமமான வழிமுறைகளில் வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய பணத்தடை, காரியத்தடை, கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டில் பூஜை அறையில் விநாயகர் பெருமாளுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கையில் ஒரு அருகம்பில்லை வைத்துக்கொண்டு “ஓம் ஸ்ரீம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு அந்த அருகம்புல்லை அன்று முழுவதும் நம்முடனே வைத்துக்கொள்ள வேண்டும். அன்று மாலை வரை உணவு உண்ணாமல் விரதம் இருக்கும் முயற்சி செய்யுங்கள்.
மாலை நேரத்தில் உடன் வைத்திருந்த அருகம்புல்லை வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு மஞ்சளில் பிள்ளையாரை பிடிக்க வேண்டும். அவ்வாறு பிள்ளையாரை பிடிக்கும் போது “ஓம் சௌம் சௌமியாய கணபதையே நம” என்னும் மந்திரத்தை 27 முறை கூறிக் கொண்டே மஞ்சள் பிள்ளையாரை பிடிக்க வேண்டும். பிடித்து வைத்த இந்த பிள்ளையாரை ஒரு தாம்பாள தட்டில் வைத்து அவருக்கு குங்குமம் வைத்துவிட்டு காலையில் இருந்து நாம் ஒரு அருகம்புல்லை வைத்திருந்தோம் அல்லவா அந்த அருகம்புல்லை விநாயகருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
பிறகு விநாயகரை சுற்றி 16 எண்ணிக்கையில் இருக்கக்கூடிய சில்லறை நாணயங்களை பரப்பி வைக்க வேண்டும். பிறகு விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பொரி உருண்டை, பொரி போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அடுத்ததாக நல்ல எலுமிச்சம் பழமாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வைத்து விநாயகப் பெருமானிடம் “உங்களுடைய கடன் பிரச்சனை முற்றிலும் தீர வேண்டும், பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும், காரிய தடைகள் விலக வேண்டும், காரிய வெற்றி உண்டாக வேண்டும், கஷ்டங்களும் துன்பங்களும் துயரங்களும் தீர வேண்டும்” என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு தேங்காய் உடைத்து நெய்வேத்தியம் அனைத்தும் செய்து முடித்துவிட்டு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். தீபம் அனைத்தும் குளிர்ந்த பிறகு மஞ்சளில் பிடித்து வைத்த பிள்ளையாரை எடுத்து வீட்டின் நான்கு மூலைகளிலும் தடவி விட வேண்டும். அந்த 16 நாணயங்களை எடுத்து பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். பொரி உருண்டையை எடுத்து 16 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பிரசாதமாக முதலில் தந்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:கஷ்டங்களையும், கடனையும் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
இந்த முறையில் விநாயகப் பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய அனைத்து விதமான தடைகளும் நீங்குவதோடு, செல்வ செழிப்புடன் சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.