- Advertisement -

வேதாளத்தை தன் முதுகில் சுமந்துகொண்ட விக்ரமாதித்தனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது. இதோ அந்த கதை. ஒரு ஊரில் ஒரு வயதான பண்டிதர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். சில காலம் கழித்து நோய்வாய்ப்பட்டு, மரணப்படுக்கையில் படுத்த அந்த பண்டிதர், தன் மூன்று மகன்களையும் அழைத்து, தங்கள் குடும்பத்தில் ஏழ்மை நிலை ஏற்பட்டுள்ளதால், அம்மூவரும் வேறு ஏதாவது ஊருக்குச் சென்று பொருளீட்டி வாழுமாறு கூறி இறந்து விட்டார்.

இச்சம்பவத்திற்கு பின் சில நாட்கள் கழித்து ஒன்று கூடி பேசிய அந்த மூன்று மகன்களும், நாம் மூவரும் ஆளுக்கொரு திசையில் சென்று, ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொண்டு, சரியாக ஒரு வருடம் கழித்து இதே இடத்தில் மூவரும் கூட வேண்டும் என்றும், அப்போது மூவரும் தாங்கள் கற்றுக்கொண்ட வித்தையை, மூவரும் செய்து காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து, ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்றனர்.

- Advertisement -

சரியாக ஒரு வருடம் கழித்து அதே இடத்தில் கூறிய அம்மூவரும், தாங்கள் இவ்வொருவருடத்தில் கற்றுகொண்டவைகளை பற்றி கூற ஆரம்பித்தனர். அதில் முதலாமவன் தான் “பிரிந்து கிடங்கும் எவ்வுயிரின் எலும்புகளையும் மீண்டும் சரியான படி இணைத்து, அதற்கு உருவம் தரும் வித்தை” தனக்கு தெரியும் எனக் கூறினான். இரண்டாமவன் முழுமையான “எலும்புக்கூடாக இருக்கும் எந்த ஒரு இறந்த உயிருக்கும், தன்னால் தசை, சதை போன்ற உறுப்புகளை உருவாகும் வித்தை” தெரியும் எனக் கூறினான். மூன்றாமவன் தனக்கு “எந்த ஒரு இறந்த உடலுக்கும் தன்னால் உயிர் கொடுக்க முடியும்” எனக் கூறினான். தங்களின் இந்த வித்தையை சோதித்து பார்க்க எண்ணிய அம்மூவரும், அதற்கேற்ற ஒரு இறந்த உடலைத் தேடி, அவ்வூரின் அருகிலிருந்த காட்டிற்குள் சென்றனர்.

அப்போது ஒரு சிங்கத்தின் எலும்புகள் இவர்கள் கண்ணில் பட்டது. அப்போது முதலாமவன் தன் வித்தையைப் பயன்படுத்தி, அச்சிங்கத்தின் எலும்புகளை இணைத்து அதற்கு உருவம் கொடுத்தான். பின்பு இரண்டாமவன் தன் வித்தையைக் கொண்டு, அந்த எலும்புக்கூட்டிற்கு தசை, சதையாலான உடலை உண்டாக்கினான். இறுதியாக மூன்றாமவன் தன் வித்தையைக் கொண்டு, அச்சிங்கத்தின் உடலுக்கு உயிரைக் கொடுத்தான்.அப்போது உயிர்பெற்ற, காட்டுவிலங்கிற்கே உரிய மூர்க்கத்தனம் கொண்ட அச்சிங்கம், அம்மூவரையும் தாக்கிக் கொன்றது. இங்கு இக்கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமாதித்தியனிடம், “விக்ரமாதித்தியா சிறந்த வித்தைகளைக் கற்ற அம்மூவரும் இறந்துபோன அச்சிங்கத்திற்கு உயிர் கொடுத்தனர். இருந்தும் ஐந்தறிவு கொண்ட அந்த விலங்கு, தனக்கேயுரிய காட்டுவிலங்கின் சுபாவத்தால் அம்மூவரையும் கொன்றுவிட்டது. இவ்விஷயத்தில் அந்த மூவரின் இறப்பிற்கான காரணம் யார்”? எனக் கேட்டது.

- Advertisement -

சற்று நேரம் யோசித்த விக்ரமாதித்தியன் “அந்த மூன்றாவது மகன் தான் காரணம். ஏனெனில் முதலாமவன் மற்றும் இரண்டாமவன் அச்சிங்கத்திற்கு உடலமைப்பை மட்டுமே உண்டாக்கினார். உயிரில்லாத பட்சத்தில் அது வெறும் இறந்த உடலாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால் மூன்றாமவன் அச்சிங்கத்தின் உடலுக்கு உயிர் கொடுத்த காரணமே, அச்சிங்கம் உயிர்பெற்று அவர்களைக் கொன்றது. ஆகவே இத் துயரசம்பவத்திற்கு அந்த மூன்றாவது மகனே காரணம்” என்று பதிலளித்தான் விக்ரமாதித்தியன். விக்ரமாதித்தியனின் இப்பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
பழி தீர்க்க துடித்த பிள்ளை – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

இது போன்ற மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள், சிறுவர் கதைகள், நீதி கதைகள் என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -