பழி தீர்க்க துடித்த பிள்ளை – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

vikramathithan-kathai-1
- Advertisement -

தன் முயற்சியில் சற்றும் தளராத “உஜ்ஜைன்” நாட்டு மன்னன் “விக்ரமாதித்யன்”, முருங்கை மரத்திலிருந்த வேதாளத்தை இறக்கி, தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதையைக் கூறப் போவதாகவும், அதற்கான சரியான விடையை விக்ரமாதித்யன் கூறவேண்டும் என்று கூறி கதை சொல்ல ஆரம்பித்தது.

vikramathithanஒரு ஊரில் சரண்யன் என்ற மிகப்பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். நீண்ட நாட்களாக பிள்ளைப்பேரில்லாமல் தவித்து வந்த அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தைக்கு நம்பி என்று பெயர் சூட்டி போற்றி வளர்த்தார். பிறப்பிலிருந்தே சற்று மந்தப் புத்திக் கொண்ட நம்பியை கல்வி கற்க அவ்வூரிலுள்ள ஒருக் குருகுலத்தில் சேர்த்தார். அங்கு சேர்ந்து கல்வி பயின்றும் அவன் சிந்தனைத்திறனில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதனால் கவலையடைந்த சரண்யன் தன் மகன் நம்பியை ஒரு ஜோதிடரிடம் அழைத்துச் சென்றார்.

நம்பியின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர் ஒருவர் “நம்பிக்கு கிரக நிலைகள் எதுவும் சரியில்லை, எனவே அவன் வித்யாவனம் எனும் ஊருக்குச் சென்று, அங்கு ஞானேந்திரர் என்பவர் குருகுலத்தில் சேர்ந்து கல்வி பயின்றால், இவன் சில காலத்திற்குப் பின் அறிவிற் சிறந்த மாணவனாக மாறுவான்” எனக் கூறினார். இதைக் கேட்ட சரண்யன், வித்யாவனம் சென்று அங்கு ஞானேந்திரரின் குருகுலத்தில் தன் மகனைச் சேர்த்தார். நம்பியின் கல்வி முனேற்றத்தைப் பற்றி அவ்வப்போது தன்னிடம் வந்து ஆலோசித்து செல்லுமாறு ஞானேந்திரர் நம்பியின் தந்தை சரண்யனிடம் கூறினார்.

- Advertisement -

இக்குருகுலத்தில் சேர்ந்த பின்பும் நம்பியின் மந்தப் புத்தி மாறவில்லை. அப்போது அக்குருகுலத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்த “சுகுமாரன்” என்ற விவசாயியின் மகன் கல்வி கற்க சேர்ந்தான். அவனின் சிறந்த கல்வியாற்றலால் அக்குருகுலத்தின் சிறந்த மாணவன் என அனைவராலும் பாராட்டப்பட்டான். இதைக் கண்ட நம்பி சுகுமாரனுடன் நட்புக் கொள்ள எண்ணினான். ஆனால் சுகுமாரன் அவனிடமிருந்து விலகிச் சென்றான்.

Guru Shishyan

அப்போது சுகுமாரனுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. தன் தந்தைக்கு கடன் சுமை அதிகமாகிவிட்டதாகவும், அவர் கடனடைக்க அவருக்கு உதவுவதற்காக தன் கல்வியை நிறுத்திவிட இருப்பதாக தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு தன் மகன் நம்பியைக் காண வந்த சரண்யனிடம், நம்பி இவ்விஷயத்தைப் பற்றிக் கூறினான், இதை கேட்ட சரண்யன், சுகுமாரனைத் தன் மகன் போல் எண்ணுவதாகவும், அவன் கடன் பிரச்னையை தாம் தீர்ப்பதாகவும் கூறினார்.

- Advertisement -

இதைக் கேட்டு மகிழ்ந்த சுகுமாரன், நம்பிக்கும் அவன் தந்தைக்கும் நன்றி கூறினான். மேலும் இனி நம்பி அறிவாற்றலிலும், கல்வியிலும் சிறந்து விளங்க தான் உதவுவதாக நம்பிக்கு உறுதியளித்தான். சுகுமாரன் கூறிய படியே நம்பிக்கு கல்வியில் உதவியதால், நம்பியும் சில காலத்திலேயே அறிவிற்ச் சிறந்த மாணவனாக மாறினான். இதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த குரு ஞானேந்திரர் “என்னால் செய்ய முடியாததை உன்னால் மட்டும் எப்படி சாதிக்க முடிந்தது”? என்று சுகுமாரனிடம் கேட்டார்.

guru sishyan“மற்றவர் நம்பியை முட்டாள் என்று கேலி மட்டுமே செய்ததாகவும், ஆனால் தான் நம்பியிடம் அவன் ஒரு சிறந்த அறிவாளி என்று பாராட்டி ஊக்கப்படுத்தியதால், அவனே உற்சாகத்துடன் கல்வி பயில ஆரம்பித்து சிறந்த மாணவனாக மாறியதாக” சுகுமாரன் கூறினான். இதைக் கேட்டு மகிழ்ந்த ஞானேந்திரர் “இதைப் பற்றி நம்பியின் தந்தை கேள்விப்பட்டால் அவர் மிகவும் மகிழ்ந்து உனக்கு மேலும் பல உதவிகள் செய்வார்” என்று கூறினார். தனக்கு மேற்கொண்டு உதவிகள் எதுவும் தேவையில்லை என்றும், நம்பியின் தந்தை தன் தந்தைக்கு செய்த உதவிக்கு இதைக் கைமாறாக கருதுவதாக கூறினான்.

சில ஆண்டுகள் கல்வி பயின்று முடிந்த பின் குரு ஞானேந்திரரிடம் விடை பெற வந்தான் சுகுமாரன். அவன் தந்தையின் கடனை அவ்வப்போது தீர்த்து வந்த நம்பியின் தந்தை சரண்யன், சுகுமாரன் அங்கிருந்து சென்ற பின் அவனது உறவினர்கள், அவர் தந்தையை ஏமாற்றி கடனாளியாக்கி விட்ட விவரத்தை ஏற்கனவே சுகுமாரனிடம் கூறியிருந்தார். இதை மனதில் கொண்டிருந்த சுகுமாரன் தன் தந்தையை ஏமாற்றிய தன் உறவினர்களை பழித் தீர்க்கப் போவதாகப் குரு ஞானேந்திரரிடம் கூறினான்.

- Advertisement -

guru sishyan

இதைக் கேட்ட ஞானேந்திரர் இப்பழிவாங்கும் செயலை விட்டு விட்டு, அவர்களை மன்னித்து விடுமாறு சுகுமாரனுக்கு அறிவுறுத்தினார். அப்போது அங்கிருந்த நம்பியின் தந்தை சரண்யன், சுகுமாரனும் தன் மகனைப் போன்றவன் என்றும் அவன் எடுக்கும் எத்தைகைய முடிவிற்கும் தான் உதவுவதாகக் கூறினார். சரண்யன் இப்படிக்கு கூறியதைக் கேட்ட ஞானேந்திரர் ” இவ்விஷயத்திற்கான சரியான வழிமுறையைப் பற்றியறிய அறிவில் சிறந்தவனாகிவிட்ட உங்கள் மகன் நம்பியிடம் கேளுங்கள்” எனக் கூறினார்.

சரண்யனும் நம்பியிடம் நடந்த எல்லாவற்றையும் கூறி அதற்கான சரியான தீர்வைக் கேட்டார். சிறிது ஆலோசனைக்குப் பின் “சுகுமாரா, என் தந்தை உனக்கு செய்த உதவிகளெல்லாவற்றையும் மறந்து, அவரைப் பகைவராக எண்ணிப் பழி தீர்த்ததுப், பின் நீ உன் உறவினர்களைப் பழி தீர்க்கலாம்” என்று கூறினான்.

இவ்விடத்தில் கதைக் கூறுவதை நிறுத்தி, விக்ரமாதித்தன் முதுகில் அமர்ந்திருந்த வேதாளம், “நம்பி ஏன் அவ்வாறு கூறினான்”? என்று விக்ரமாதித்தனிடம் கேள்வி கேட்டது.

vikramathithan

சற்று நேரம் யோசித்த விக்ரமாதித்தன் “தனக்கு பல முறை, பல உதவிகள் செய்த நம்பியின் தந்தை சரண்யனை நற்குணங்கள் கொண்ட சுகுமாரனால் ஒரு போதும் பகைவராக கருத முடியாது, மாறாக அவர் தனக்கு செய்த நன்மைகள் மட்டுமே அவன் நினைவிற்கு வரும். அது போல ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து விட்டு, அவர் நமக்குச் செய்த நன்மைகளை நினைத்துக்கொண்டால், நம்மிடம் பழிவாங்கும் உணர்ச்சி மறையும். இந்த மனோதத்துவத்தை நன்கு அறிந்தே, நம்பி இவ்வாறு சுகுமாரனிடம் கூறினான். இது நன்கு சிந்தித்து கூறப்பட்ட ஒரு தீர்வாகும்” என்று விக்ரமாதித்தன் வேதாளத்திடம் கூறினார்.

மன்னர் விக்ரமாதித்தன் அறிவாற்றலைப் பாராட்டிய வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

இதையும் படிக்கலாமே:
சிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை

இது போல மேலும் பல விக்ரமாதித்தன் கதைகள் படிக்க தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -