- Advertisement -
இலக்கியம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் | Tamil thai valthu lyrics in Tamil

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் | Tamil thai valthu song lyrics in Tamil

“நீராரும் கடலுடுத்த” என்கிற இந்த இரண்டு வார்த்தைகளை கேட்டாலே, அது “தமிழ் தாய் வாழ்த்து” பாடல் என நாம் அனைவரும் அறிவோம். தமிழ் தாய் வாழ்த்து பாடல் யாரால் இயற்றப்பட்டது? தமிழ் தாய் வாழ்த்து எந்த இடங்களில் பாடப்பெறும்? என்பன போன்ற பல தகவல்களை இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் தாய் வாழ்த்து எழுதியவர் யார்

தமிழ் தாய் வாழ்த்து பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த தமிழரான திரு. “மனோன்மணியம்” சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது. 1913 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1914ஆம் ஆண்டு முதல் தமிழ் சங்க கூட்டங்களில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தாய் வாழ்த்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பாடல் என அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், “ஆரியம் போல தமிழ் உலக வழக்கழிந்து சிதையவில்லை” என்கிற ஆட்சேபகரமான வரி நீக்கப்பட்ட பிறகே அதிகாரபூர்வ பாடலாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் “நீராரும் கடலுடுத்த” என்கிற தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அனைத்து பள்ளி கல்லூரிகளில் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டாயம் பாட வேண்டும் எனவும். தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து அனைவரும் கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகள் | Tamil thai valthu lyrics in Tamil

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

- Advertisement -

தமிழ் தாய் வாழ்த்து முழு பாடல் விளக்கம்

“உலகம் முழுவதும் நீர் நிறைந்த கடலையே ஆடையாக அணிந்த நிலம் எனும் பெண்ணுக்கு மிகுந்த அழகு மிளிரும் சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்திய கண்ட நிலத்தில் உள்ள தென்னாடும், அந்த தென்னாட்டிலும் மிகச்சிறந்த தமிழர்கள் நிறைந்த நல்ல திருநாடும், பொருத்தமான பிறைபோன்ற நெற்றி யாகவும், அதில் இட்ட மணம் வீசும் திலகமாகவும் திகழ்கின்றன. அந்த திலகத்தில் இருந்து வீசுகின்ற நறுமணத்தை போல உலகம் அனைத்தும் இன்பம் பெறும் வகையில் அனைத்து திசைகளிலும் புகழ் மணக்கும் படி இருக்கின்ற பெருமைமிகு தமிழ் பெண்ணே! என்றும் இளமையாக இருக்கும் உன் சிறப்பு திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உன்னை வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே! வாழ்த்துவோமே!

திருத்தம் செய்யப்படாத முழுமையான தமிழ் தாய் வாழ்த்து பாடல்

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!

இதையும் படிக்கலாமே: கடையெழு வள்ளல்கள் பெயர்கள்

- Advertisement -