கடையெழு வள்ளல்கள் பெயர்கள் | Kadai elu vallalgal in Tamil

Kadai elu vallalgal
- Advertisement -

கடையெழு வள்ளல்கள் | Kadai ezhu vallalgal

தமிழ்மொழி வழியில் பள்ளி கல்வியை முடித்தவர்கள் “கடையேழு வள்ளல்கள்” யார்? என்கிற இந்த கேள்வியை தங்களின் பரீட்சை வினாத்தாளில் எதிர்கொள்ளாமல் சென்றிருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. இக்கேள்வி சுலபமானதாக இருந்தாலும், பெரும்பாலானோருக்கு இந்த கடையேழு வள்ளல்கள் எனும் சங்ககால வள்ளல் பெருமக்கள் யார் என சரியாக தெரியாத நிலையே உள்ளது. அந்த வகையில் சங்க காலத்தில் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த ஏழு வள்ளல்கள் யார் என்பது குறித்து இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

“கடையேழு வள்ளல்கள்” குறித்து தமிழ் மொழியின் சங்க இலக்கியமான “பத்துப்பாட்டு” எனும் சங்க தமிழ் இலக்கியத்தில் உள்ள மூன்றாம் பாடலான “சிறுபாணாற்றுப்படை” எனும் பாடலை இயற்றிய “நல்லூர் நத்தத்தனார்” என்னும் சங்ககால புலவர் மிக விரிவாகப் பாடியுள்ளார். இதே போன்று இந்த கடை ஏழு வள்ளல்கள் குறித்து பாடல்கள் புறநானூறு என்னும் சங்க இலக்கியத்திலும் இடம் பெற்றுள்ளன. இங்கு நாம் அந்த 7 வள்ளல்கள் யார் என்பதை விவரமாக தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடையெழு வள்ளல்கள் பெயர்கள் – Kadai elu vallalgal names in Tamil

  1. பேகன்
  2. பாரி
  3. காரி
  4. ஆய்
  5. அதியமான்
  6. நள்ளி
  7. ஓரி

கடையெழு வள்ளல்கள் சிறப்புகள் 

பேகன் – கொடை சிறப்பு

கடையேழு வள்ளல்களில் முதலாம் மாணவரான பேகன் எனும் வள்ளல் “பொதினி” என்னும் மலைப் பகுதியை ஆண்டு வந்த ஒரு சிற்றரசர் ஆவார். இந்த பொதினி மலைப்பகுதி தற்போது தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற பழனி மலை ஆகும். மலையும், மலை மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத் தலைவனான பேகன் ஒரு முறை தான் ஆட்சி புரிந்த குறிஞ்சி நில வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, அங்கு ஒரு மயில் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை கண்டார். உடனே தான் உடுத்தியிருந்த போர்வையை எடுத்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த அந்த மயில் மீது போத்தினார்.

மயிலுக்கு போர்வையை போர்த்தினால் மயிலின் குளிர் தீருமா என அவர் அப்போது சிந்திக்கவில்லை. ஒரு உயிருக்கு ஏற்படுகின்ற துன்பத்தைக் கண்டு உடனே தன்னிடம் இருந்த ஒன்றை கொடுக்க வேண்டும் என்கிற சிறந்த கொடை குணமே பேகனை அவ்வாறு செய்ய தூண்டியது.

- Advertisement -

சங்க கால இலக்கியமான புறநானூறு என்னும் நூலில் இருக்கின்ற 142வது பாடலில் சங்ககால புலவரான பரணர் என்பவர்

கழற்கால் பேகன், வரையாது வழங்குவதில் மழை போலக் கொடைமடம்
படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்.

- Advertisement -

அதாவது வேகன் எதற்கும் பயன்படாத இடங்களிலும் பொழியும் மழை போல, தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்களுக்கு உண்மையிலேயே தேவை உள்ளதா? இல்லையா என்பதை கூட ஆராயாமல் கொடுக்கின்ற கொடை குணம் உள்ளவன் என்றும் அதேநேரம் போரில் எதிரிகளை எதிர்த்து போரிடும் பொழுது பேகன் மடையனை போல் செயல்படாத சிறந்த வீரன் எனவும் இந்தப் புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.

பாரி – கொடை சிறப்பு

பாரி என்பவர் சங்ககால தமிழகத்தில் பறம்பு மலை என்னும் மலைப் பகுதியை ஆண்டு வந்த ஒரு சிற்றரசர் ஆவார். இவரின் புகழ்பெற்ற மற்றொரு பெயர் தான் “வேள்பாரி”. ஒரு சமயம் பாரி தனது தேரில் சென்று கொண்டிருந்த சமயத்தில் வழியில் ஒரு அழகான முல்லைக்கொடி தாவரத்தை கண்டார்.

அப்போது அந்த முல்லைக்கொடி படர்ந்து வளர ஒரு பக்கவாட்டு மரம் இல்லாமல் அந்த செடி இருப்பதை கண்டு வருந்திய பாரி முத்துக்களும், நவரத்தினங்களும் பதிக்கப்பட்ட தான் பயணித்த தேர் வாகனத்தை அந்த முல்லை செடி படர்ந்து வளர்வதற்கு உதவியாக அங்கேயே விட்டு நடந்து சென்றார். பாரியின் கொடைத் தன்மையை பறைசாற்றும் ஒரு எடுத்துக்காட்டு நிகழ்வாக இது கருதப்படுகிறது.

பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற்
புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே

என பாரியின் வள்ளல் தன்மையை பற்றி அறிந்த சங்ககால புலவரான கபிலர் பாரியின் புகழைக் போற்றிப் பாடியுள்ளார்.

கடையெழு வள்ளல்கள்: காரி – கொடை சிறப்பு

காரி எனும் வள்ளல் திருக்கோயிலூர் நகரைத் தலைநகரமாகக் கொண்டு “மலாடு” எனும் பகுதியை ஆண்ட ஒரு சிற்றரசர் ஆவார். இவர் மலையமான் என்றும் மலையமான் திருமுடிக்காரி மற்றும் கோவற் கோமான் எனும் பெயர்களிலும் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சி புரிந்த மலடு எனும் பகுதி திருக்கோயிலுக்கு மேற்கே தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பகுதியே ஆகும்.

காரிய குறித்து சங்ககால புலவர்களான கபிலர் பெருஞ்சாத்தனார் மற்றும் நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூறு நூலில் இடம் பெற்றுள்ளன.

காரி தன்னை நாடி வரும் மனிதர்களிடம் மிகவும் அன்பான சொற்களைப் பேசும் இனிய குணம் கொண்டவராக இருந்தார் என்றும், ஒலிக்கின்ற மணியைக் கழுத்திலும், “தலையாட்டம்” என்கிற அணிகலனை தலையிலும் அணிந்த உயர் ரகமான குதிரை உட்பட ஏனைய விலை மதிப்பற்ற செல்வங்களை தன்னை நாடி வந்தோருக்கு உலகமே வியக்கும் வண்ணம் காரி கொடை வழங்கியதாக புறநானூறு பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆய் – கொடை சிறப்பு

“ஆய்” எனும் வள்ளல் தற்போதைய தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கின்ற பொதிகை மலை சாரலில் “ஆய்க்குடி” எனும் பகுதியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த ஒரு அரசர் என வரலாறு கூறுகின்றது. வேல் ஆய் என்றும், ஆய் அண்டிரன் போன்ற பெயர்களிலும் ஆய் அழைக்கப்பட்டார்.

ஆய் என அழைக்கப்படும் இந்த வள்ளல் குணம் பொருந்திய அரசருக்கு ஒரு சமயம் நீல நிறத்தில் இருக்கின்ற அதிசயமான தெய்வீக நச்சு பாம்பு ஒன்று இவருக்கு ஒரு அரிய வகை ஆடையை வழங்கியதாகவும், அந்த ஆடையை தான் உடுத்திக்கொள்ளாமல், காட்டில் ஆலமரத்திற்கு கீழே தவமியற்றி கொண்டிருந்த உலகநாயகன் ஆகிய சிவபெருமானுக்கு ஆய் கொடை வழங்கினார் எனவும் சங்ககால பாடல்களில் ஆயின் இந்த கொடைத் தன்மை பற்றி போற்றப்படுகிறது.

ஆய் வள்ளல் தன்மை குறித்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், துறையூர் ஓடைகிழார் போன்ற சங்கப்புலவர்கள் பாடியுள்ளனர்.

அதியமான் (அ) அதிகன் – கொடை சிறப்பு

சங்ககாலத் தமிழகத்தில் “தகடூர்” எனும் ஊரை ஆட்சி புரிந்த மன்னர் தான் அதிகன் எனப்படும் அதியமான் அதிகனுக்கு அஞ்சி, அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகைமான் போன்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். இவர் ஆட்சி புரிந்த தகடூர் என்பது தற்போதைய தர்மபுரி மாவட்டம் சார்ந்த பகுதிகளாக இருக்கலாம் என என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதியமான் தான் ஆட்சி புரிந்த நாட்டின் வனப்பகுதியில் கிடைத்தற்கரிய அபூர்வ நெல்லிக்கனி ஒன்று கிடைக்கப் பெற்றார். அந்த நெல்லிக்கனியை யார் உண்கிறார்களோ, அவருக்கு “நரை, திரை, மூப்பு, பிணி” போன்ற எதுவும் ஏற்படாமல், நீண்ட காலம் வாழ வைக்கும் எனவும் என அதியமான் அறிந்தார். அச்சமயம் புகழ்பெற்ற பெண் புலவரான “ஔவையார்” அதியமான் அரசவைக்கு வருகை தந்தார். அப்போது அதியமான் தன்னை காட்டிலும் தமிழ் சமூகத்திற்கு அதிகம் தொண்டு புரியும் ஆற்றல் பெற்ற புலவரான ஒளவையார் நீண்ட காலமநரை, திரை, முப்பு, பிணி இல்லாமல் வாழ வேண்டும் என்கிற உயரிய நோக்கில் தனக்கு கிடைத்த நெல்லிக்கனியை ஒளவைக்கு கொடையாக கொடுத்தார்.

இத்தகைய சிறந்த கொடைத்தன்மை குணம் கொண்ட அதியமான் குறித்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூறு நூலில் இடம் பெற்றுள்ளன.

கடையெழு வள்ளல்கள்: நள்ளி – கொடை சிறப்பு

அக்கால தமிழகத்தில் கண்டீரம் என்கிற மலைவளம் நிறைந்த நாட்டை நள்ளி எனும் வள்ளல் குணம் கொண்ட அரசர் ஆண்டு வந்தார். நள்ளி, நளிமலை நாடன், கண்டீரக் கோப்பெரு நள்ளி, பெருநள்ளி என்கிற பெயர்களிலும் அழைக்கப்பட்டார்.

நள்ளியை குறித்து சங்க காலப் புலவர்களில் ஒருவரான வரபரணர் பாடிய பாடல்கள் புறநானூறு நூலில் இடம் பெற்றுள்ளன. நல்லி தன்னை நாடி வந்தவர்களுக்கு அளித்த கொடை எவ்வாறு இருந்தது என்றால், நள்ளியிடம் கொடை பெற்ற மக்கள், தங்கள் வாழ்வில் நலிவடைந்த நிலையை அடையாமலும், பிறரிடம் எக்காரணம் கொண்டும் இரந்து வாழ்கின்ற நிலையை அடையாமலும் இருக்கத் தக்க வகையில் நள்ளி கொடை அளித்ததாக சங்ககாலப் புலவர்கள் நள்ளியின் வள்ளல் தன்மை குறித்து பாடியுள்ளனர்.

ஓரி – Kadai elu vallal

ஓரி எனும் வள்ளல் தன்மை நிறைந்த சிற்றரசர். தற்கால தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற “கொல்லிமலை” பகுதியை ஆண்டு வந்ததாக கூறப்படுகின்றது. இவர் வில்லேந்தி போர் புரிவதில் வல்லவர் என்பதால் இவருக்கு “வல்வில் ஓரி” என்கிற பெயர் உண்டானது.

ஒரு சமயம் ஓரி கூத்தாடும் கலைஞர்களுக்கு சிறிய மலைகளும், அதில் சுரபுன்னை மரங்கள் அதிகம் வளர்ந்த மற்றும் நறுமணமிக்க மலர்கள் பூக்கின்ற ஒரு சிறிய அளவிலான காட்டையே கொடையளித்தாக புறநானூற்று பாடல் ஓரியின் வள்ளல் தன்மையை குறித்து புகழ்கின்றது

இதையும் படிக்கலாமே: தீதும் நன்றும் பிறர் தர வாரா பொருள்

மேலும் பாணர் எனும் புலவரின் சுற்றத்தார் ஓரியிடம் பெற்ற மிகப் பெரும் அளவிலான கொடை காரணமாக அவர்களின் குலத்தொழிலான ஆடல், பாடல் கலையை அறவே விட்டொழித்து, சோம்பல் கொண்டு திரிந்து, தங்களின் குலத்தொழிலை அறவே மறந்து போனதாக அந்த பாடல் ஓரி எனும் வள்ளலின் சிறப்பு குறித்து கூறுகின்றது.

- Advertisement -