
இட்லி தோசைக்கு எப்பவும் சட்னி சாம்பார் செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமான இந்த தக்காளி கடையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க சுவை பிரமாதமா இருக்கும். அது மட்டும் இல்லாம இது செய்யறது ரொம்பவே சுலபம். வாங்க இப்போ இந்த தக்காளி கடையலை எப்படி செய்யறதுன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
இந்த தக்காளி கடையல் செய்வதற்கு முதலில் 20 சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் 10 பல் பூண்டு தோல் உரித்து அதையும் நன்றாக நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 பச்சை மிளகாய் கீறி வைத்துக் கொள்ளுங்கள். இதைப் போல் 4 தக்காளியை மீடியம் சைஸ் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் தயார் செய்து வைத்த பிறகு அடுத்து குக்கர் வைத்து சூடானவுடன், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிறகு 1/2 ஸ்பூன் கடுகு, 1/4 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்த பிறகு வெங்காயம், பூண்டு இவை எல்லாம் சேர்த்து ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அரிந்து வைத்த தக்காளியை சேர்த்து ஒரு முறை நன்றாக வதக்கிய பிறகு 1 டீஸ்பூன் சாம்பார் பொடி,1 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு இவையெல்லாம் சேர்த்து வெங்காயம், தக்காளி எல்லாம் நன்றாக வதக்கிய பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை லோ ஃபிளேமில் வைத்து இரண்டு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு முடியை திறந்து வெங்காயம், தக்காளி இவை எல்லாம் ஒரு சட்டிக்கு மாற்றி நன்றாக கடைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் அதே குக்கரை வைத்து கடைந்த இந்த தக்காளி கடையலை சேர்த்த பிறகு, ஒரு பவுலில் 1 டீஸ்பூன் அரிசி மாவு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கலந்து அதை கொதித்துக் கொண்டிருக்கும் தக்காளி கடையலில் சேர்த்து ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடுங்கள். இந்த சமயத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: இட்லி அல்வா செய்முறை: idli halwa recipe in Tamil
இவையெல்லாம் சேர்த்து கொதித்தவுடன் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லியை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுடச்சுட தக்காளி கடையல் சுவையாக தயாராகி விட்டது. சூடான இட்லியுடன் இந்த தக்காளி கடையலை ஊற்றி சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு பிரமாதமா இருக்கும்.