- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

தேசிங்கு ராஜாவின் குலதெய்வ கோவில் ஒரு விசிட்

செஞ்சிக்கு அருகே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கவரம் திருத்தலத்தில் அருள்புரிகிறார் ஶ்ரீரங்கநாதர். சிம்மாசலம், சிம்மபுரம், விஷ்ணு செஞ்சி என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்பெறும் தலத்தில், மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது சிங்கவரம் பெருமாள் ஆலயம்.

மலையடிவாரத்தில் நெடிது உயர்ந்த ஊஞ்சல் மண்டபமும், அருகிலேயே ஆலய அலுவலகமும் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்லத் தொடங்கும் இடத்தில் ரங்கநாதரின் திருப்பாதம், அனுமாரின் திருவுருவம் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நெட்டுக்குத்தலான 160 படிகளை தாண்டி சிங்கவரம் பெருமாள் ஆலய நுழைவு வாயிலில் நுழைகிறோம். ஐந்து நிலை கொண்ட ராஜ கோபுர வாசலில் இருந்து அந்த ஊரின் சூழலைப் பார்க்கிறோம். அத்தனை அமைதியாகவும், மனதைக் குளிர்விக்கும் இயற்கை எழிலுடனும் காணப்படுகிறது. ஆலயத்தில் நுழைந்ததுமே நாம் தரிசிப்பது வரதராஜரின் சந்நிதி. அவரை தரிசித்துவிட்டு, வலப்புறமாகச் சென்றால், லட்சுமி தீர்த்தம் என்ற பெயரில் ஒரு தீர்த்தக்குளம் காட்சி தருகிறது. அதையும் கடந்து உள்ளே சென்றால், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், நவபாஷாணத்தினால் ஆன கருடர், ஶ்ரீராமநுஜர், ஶ்ரீதேசிகர் ஆகியோரின் சந்நிதிகளை தரிசிக்கலாம்.

9 படிகளைக் கடந்து துவாரபாலகர்களின் அனுமதி பெற்று ஶ்ரீரங்கநாதரை தரிசிக்கச் செல்கிறோம். குடைவரைக் கோயிலாக அமைந்த கருவறையில் 14 அடி நீளத்தில் ஶ்ரீரங்கநாதர் பிரம்மாண்டமாக சயன நிலையில் காட்சி தருகிறார். அழகே வடிவமாகத் திகழும் அரங்கனின் நாபிக் கமலத்தில் பிரம்மதேவர், இடப் புறம் கந்தர்வர், வலப் புறம் கருடன், மதுகைடபர்கள், திருவடி அருகில் பூமிதேவி, மற்றும் நாரதர், பிரகலாதன் ஆகியோரும் காட்சி தருகின்றனர்.

- Advertisement -

பொதுவாக நரசிம்மர் ஆலயங்களில்தான் பிரகலாதனை தரிசிக்க முடியும். ஆனால், இங்கே அரங்கனின் ஆலயத்தில் பிரகலாதன் இருப்பது குறித்துக் கேட்டபோது, பிரகலாதனின் விருப்பத்தின்படி பெருமாள் இங்கே சயனக்கோலத்தில் ரங்கநாதராகக் காட்சி தந்ததாகச் சொல்கிறார்கள்.  தரிசித்த கண்கள் பெருமாளை விட்டுத் திரும்பாத அளவுக்கு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தரும் பெருமாளின் திருவடிகளை தரிசிப்பவர்களுக்கு செல்வ வளம் நிறைவாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவின் குலதெய்வம் இந்த ரங்கநாதர். பெருமாளே நேரடியாகப் பேசும் அளவுக்கு ராஜா தேசிங்கு பெருமாளின் தீவிர பக்தர். ஒருமுறை ராஜா தேசிங்கு போருக்குச் செல்லவேண்டாம் என்று பெருமாள் சொல்லியும் போருக்குச் சென்றதால் பெருமாள் கோபம் கொண்டு தெற்கு நோக்கி முகத்தைத் திருப்பிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். மேலும் தென்திசை தெய்வமான யமனை எச்சரிக்கும் விதமாகவும் பெருமாள் இப்படி திரும்பியுள்ளார் என்கிறார்கள்.

- Advertisement -

மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட குடைவரைக் கோயில் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ரங்கநாதர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவர் என்கிறார்கள். மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீசிம்மவிஷ்ணுவின் காலத்தில் அவரது செஞ்சி  அரண்மனைத் தோட்டத்தில் பூத்த மலர்களை ஒரு வராகம் தின்று கொண்டிருந்ததாம். இதனால் ஆத்திரமான அரசர் அதை விரட்டிச் செல்ல, அது இந்த மலையின் மீது ஏறி மறைந்ததாம். அப்போது இங்கே பள்ளி கொண்டிருந்த ரங்கநாதரை தரிசித்து பேறுபெற்றாராம் சிம்மவிஷ்ணு. இதனாலேயே இந்த ஊருக்கு சிம்மாசலம் என்று அவரது மகன் மகேந்திரவர்மன் பெயரிட்டாராம்.

இங்கு உற்சவராக கோதண்டராமர், லட்சுமி நாராயணர், லட்சுமி வராகர், ஆழ்வார்கள் சிலைகள் உள்ளன. பெருமைகள் பல கொண்ட இந்த ரங்கநாதரை தரிசித்து விட்டு வெளியே வந்து தாயார் ரங்கநாயகியை தரிசிக்கிறோம். அமர்ந்த கோலம், நான்கு திருக்கரங்கள். வளையல் மாலை சூடி அபய, வர  ஹஸ்தங்களை காட்டி தாயார் ஆசீர்வதிக்கிறாள். இந்த கருவறையில் ரங்கநாயகி மட்டுமா இருக்கிறாள். எங்குமே காணமுடியாத வகையில் தாயாரின் பின்புறம் வலது மூலையில் உக்கிரமான துர்கையும் வீற்றிருக்கிறாள். ஆனால் இவளை சந்நிதியின் ஜன்னலில் இருந்து தான் தரிசிக்க முடியும். விக்கிரமாதித்தன் தரிசித்த துர்கை என்று சொல்லப்படுகிறாள்.

பல நூறு ஆண்டுகளை கடந்த இந்த துர்கை துஷ்டசக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவள். ஆலயத்தின் வெளிப்பிராகாரத்தில் பரமபத வாசலும், அதன் அருகே கருங்கல்லால் கட்டப்பட்ட பழைமையான லட்சுமி வராகர் சந்நிதியும் உள்ளது. இந்த வராகரே பல்லவனுக்கு காட்சி தந்தவர். கல்லால் ஆன கொடிமரமும் பலிபீடமும் உள்ளது. இந்த ஆலயத்தை தாண்டி மேலே செல்ல இரண்டு திருக்குளமும் மலை மீது ஒரு அழகிய கோபுரமும் காணப்படுகிறது. குரங்குகள் அதிகம் காணப்படும் அடர்ந்த வனப்பகுதி இது.

இதையும் படிக்கலாமே:
உலகின் மிகப் பெரிய முருகன் சிலை உங்கள் கண்முன் இதோ

குலோத்துங்க சோழனாலும், விஜயநகர பேரரசர்களாலும் திருப்பணி செய்யப்பட சிங்கவரம் பெருமாள் ஆலயம் கடந்த 2010-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.  அறுபதாம் கல்யாணம் இங்கு விசேஷ நிகழ்வாக நடைபெறுகிறது. வைகாசி விசாகம், கருட சேவை, மாசி மகம், ஆடி மாத இரண்டாவது வெள்ளி தொடங்கும் பவித்திர உற்சவம் போன்றவை இங்கு சிறப்பான விழாக்கள். மாசிமக நாளில் இங்கு தீர்த்தவாரியில் மகிழும் பெருமாள், மறுநாள் பாண்டிச்சேரியில் நடக்கும் தீர்த்தவாரியிலும் கலந்து கொள்வார் என்கிறார்கள். அந்நியர் படையெடுப்பின் போது திருவரங்கப்பெருமானின் உற்சவர் சிலை சில காலம் பாண்டிச்சேரியில்  வைத்து பாதுகாக்கப்பட்டதால் அங்கேயும் தீர்த்தவாரி நடைபெறுகிறது.  அழகும் அமைதியும் நிறைந்த சூழலில் எழிலார்ந்த கோலத்தில் திருக்காட்சி அருளும் அரங்கப் பெருமானை நீங்களும் தரிசிக்கலாமே!

- Advertisement -