- Advertisement -
தமிழ் கதைகள் | Tamil stories for reading

தவறு செய்யும் பிள்ளையை எப்படி திருத்த வேண்டும் – ஜென் கதை

பான்கெய் என்ற ஒரு புகழ் பெற்ற ஜென் துறவி ஜப்பான் தேசத்தில் வாழ்ந்து வந்தார். அவரின் தவசக்தியாலும், மக்களுக்கான அவரின் ஞான அறியுரைகளாலும் அவர் நாடு முழுக்க புகழ் பெற்றிருந்தார். இக்காரணத்தினால் அந்நாட்டின் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரின் பிள்ளைகளும் சில காலம் அவரிடம் ஆன்மிக கல்விக் கற்க ஆர்வம் கொண்டிருந்தனர்.

அப்படி பலதரப்பட்ட மாணவர்கள் தன் ஆசிரமத்தில் தங்கி கல்வி பயிலும் போது, ஒரு நாள், ஒரு மாணவன் ஒரு பொருளை திருடும் செயலில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டான். அப்படி சிக்கிய அம்மாணவனை மற்ற மாணவர்கள் அனைவரும் குரு பான்கெய் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அம்மாணவனின் குற்றத்தை எடுத்துரைத்து, ஆசிரமத்திலிருந்து அவனை வெளியேற்றுமாறு அனைவரும் கூறினர். பான்கெய் எதுவும் பேசாமலிருந்தார். சிறிது நேரத்தில் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

- Advertisement -

சிறிது காலம் கழித்து அதே மாணவன், மீண்டும் அதே வகையான செயலை செய்து பிடிபட்டான். மீண்டும் அனைத்து மாணவர்களும் அவனை பான்கெய் முன்கொண்டு நிறுத்த, அவரும் வழக்கம் போல அமைதியாக இருந்தார். இத்தகைய செயல் பலமுறை தொடர்ந்தது. இறுதியாக பொறுமை இழந்த மற்ற மாணவர்கள், பான்கெய் முன் சென்று தொடர்ந்து திருட்டுச் செயலில் ஈடுபடும் அம்மாணவனை இம்மடத்திலிருந்து வெளியேற்றாவிட்டால், தாங்கள் அனைவரும் வெளியேறுவதாக கூறினார்கள்.

மாணவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட பான்கெய் “உங்கள் விருப்பப்படியே நீங்கள் அனைவரும் இம்மடத்திலிருந்து வெளியேறலாம்” என்று கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவர்களிடம் பான்கெய் மேலும் தொடர்ந்து “மாணவர்களே, நீங்கள் அனைவரும் அறிவாளிகள், உங்கள் அனைவருக்கும் சரியானது எது தவறானது எது என்ற வேறுபாடு தெரிகிறது. ஆனால் தவறிழைத்த அம்மாணவனுக்கோ இவற்றைப் பற்றி எதுவும் தெரியவில்லை”. “நானும் அவனை இங்கிருந்து அனுப்பிவிட்டால் வேறு யார் அவனுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுப்பார்கள்”?

- Advertisement -

“ஆகையால் நீங்கள் அனைவரும் இங்கிருந்து சென்றாலும் பரவாயில்லை, அம்மாணவன் மட்டும் இங்கிருக்கட்டும்” என்று பான்கெய் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அத்தவறிழைத்த மாணவன், கண்ணீர் விட்டழுது பான்கெய்யிடம் மன்னிப்பு கேட்டான்.

இதையும் படிக்கலாமே:
சீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன் – ராமாயண குட்டி கதை

அறியாமையால் தொடர்ந்து தவறிழைப்பவர்களுக்கு நாம் தரும் சிறந்த தண்டனை மன்னிப்பாகும்.

ஜென் கதைகள், சிறு கதைகள் என தமிழ் கதைகள் பலவற்றை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

- Advertisement -