சீதையால் செந்தூரத்தில் மூழ்கிய அனுமன் – ராமாயண குட்டி கதை

Hanuman-11

வனவாசக்காலம் காலம் முடிந்து அயோத்தியின் அரசனாக ஸ்ரீராமர் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம். ஒரு நாள் இரவு அரண்மனையில் சீதாப் பிராட்டியார் தனது கணவரான ஸ்ரீராமர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். அவருடனேயே ஸ்ரீராமரின் அனுக்கத் தொண்டருமான அனுமனும் நுழைய முற்பட்டார். அவரை ராமர் தடுத்தார்.

hanuman

சீதா தேவியைப் போலவே தங்களின் மீது அன்பு வைத்திருக்கும் தன்னை மட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? என அனுமன் கேட்டார். குழந்தையைப் போல் மனம் கொண்ட பிரம்மச்சாரியான அனுமனுக்கு தம்பதிகளின் இல்வாழ்க்கை முறைகளை விளக்க முடியாமல் தவித்த ராமர் “சீதா தன் நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொண்டிருப்பதால் உள்ளே அனுமதித்ததாக” விளையாட்டாகக் கூறினார்.

இதைக் கேட்டு வெளியில் வந்த அனுமன், மறுநாள் சீதா தேவி தன் நெற்றியில் செந்தூரம் இடுவதைக் கண்டு அதற்கான காரணத்தைக் கூறுமாறு சீதையிடம் கேட்டார். அனுமனின் களங்கமில்லா மனதை அறிந்த சீதை “தன் நெற்றியில் செந்தூரம் இட்டுக்கொள்வதால் தன் கணவரும், அனைவருக்கும் பிரபுவான ஸ்ரீராமரின் ஆயுள் நீளும்” எனக் கூறினார். இதைக் கேட்ட அனுமனும் உடனே அயோத்தியின் கடைவீதிக்குச் சென்று ஒரு கடைக்காரரிடம் செந்தூரம் தருமாறு கேட்டார். அந்தக் கடைக்காரரும் ஒரு டப்பாச் செந்தூரத்தைக் கொடுத்தார். இது பத்தாது என்றெண்ணிய அனுமன் அந்தக் கடைக்குள் புகுந்து செந்தூர மூட்டைக்குள் கையை விட்டு, தன் முகம் மற்றும் இதரப் பகுதிகளில் பூசிக்கொண்டார்.மேலும் அச்செந்தூர மூட்டையைத் தரையில் கொட்டி, அதில் புரண்டு தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக்கொண்டார். அக்கோலத்துடனேயே அனுமன் அயோத்தியின் அரண்மனைக்குச் சென்றார்.
hanuman

செந்தூரத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அரண்மனைக்கு வந்த அனுமனைக் கண்ட ஸ்ரீராமர் சிரித்துக்கொண்டே அதற்கான காரணத்தைக் கேட்டார். “நெற்றியில் செந்தூரத்தை இட்டுக்கொள்வதால் தங்களின் ஆயுள் நீடிக்கும்” என்று சீதா தேவிக் கூறியதாகவும், சிறிய அளவில் இடும் செந்தூரத்திற்கே தங்கள் ஆயுள் நீண்டால், உங்கள் மீது அளவற்ற பக்தி கொண்டிருக்கு நான் என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக்கொள்வதால் மேலும் உங்களுக்கு பலகாலம் ஆயுள் நீடிக்கும் அல்லவா என்றார் அனுமன். அனுமனின் இந்த பிரதிப் பயன் கருதாப் பக்தியை அங்கிருந்தோர் அனைவரும் போற்றினர்.

இதையும் படிக்கலாமே:
தன் பக்தர்களுக்காக மழையை நிறுத்திய சாய் பாபா – உண்மை சம்பவம்

அனுமனைப்போல் எவ்வித எதிர்பார்ப்பின்றி இறைவன் மீது செலுத்தப்படும் பக்தியே உண்மையான பக்தி என்பது இக்கதையின் சாராம்சமாகும்.

இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளுக்கு தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.