- Advertisement -

ஒருவரை ஏமாற்றினால் ஏற்படக்கூடிய தோஷம் என்ன? பணத்தை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை உண்டா?

ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் உங்களை ஏமாற்றி இருந்தால் அவர்கள் மீது உங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயல்பானது. கொடுத்த பணத்தை திரும்ப வாங்க முடியாமல் ஏமாந்தவர்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்வது உண்டு. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை அடுத்தவர்கள் ஏமாற்றும் போது ஏற்படும் வலியானது சொல்லில் அடங்காதது. கடன் ஒருவருடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடுகிறது? ஏமாந்தவர்கள் அல்லது ஏமாற்றியவர்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ன? ஏன் நீங்களே ஏமாற்றப்பட்டீர்கள்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அலச இருக்கிறோம்.

ஒருவருக்கு நாம் பட்ட கடன் வேறு ஒரு வழியில் வசூலாகும் என்பது தான் ஆணித்தரமாக அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஒருவரை நீங்கள் ஏமாற்றினால், வேறு ஒரு வழியில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப் படுவீர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பது, கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு வேறு வகையில் தண்டனை நிச்சயம் உண்டாகும். ஆனால் கடன் கொடுத்து ஏமாந்தவர்கள் அல்லது வேறு வகையில் ஏமாந்து போனவர்கள் அதையே நினைத்துக் கொண்டிருக்காமல், அவர்களை சபித்துக் கொண்டிருக்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி சம்பாதிக்க வேண்டும்? என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும்.

- Advertisement -

இவ்வுலகில் மூன்று வகையான கடன்களை ஒரு மனிதன் படுகின்றான். பணத்தால் ஏற்பட்ட கடன், மன ரீதியாக ஏற்பட்ட கடன், சரீரத்தால் ஆதவாது உடலால் ஏற்பட்ட கடன் என்று மூன்று வகையான கடன் படுப்பவர்கள் உண்டு. உங்களுடைய உழைப்பை கொடுத்து விட்டு பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல், இருக்கக் கூடிய சூழ்நிலையில் சரீரத்தால் அவர்களுக்கு நீங்கள் கடன் படுகிறீர்கள். புதிதாக வேலைக்கு செல்பவர்கள் ஒரு மாதம் கூட முழுமையாக உழைக்காமல் அதற்குரிய ஊதியம் வாங்காமல் நின்று விடுவது உண்டு. இதில் சரீரத்தால் நீங்கள் அவர்களுக்கு கடன் பட்டதாக அர்த்தம் ஆகிறது.

உங்களுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நபர்களுக்கு பிரதிபலன் எதுவும் எதிர்பார்க்காமல் உங்களுடைய உடல் உழைப்பைக் கொடுத்து வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் நீங்கள் அவர்களுக்கு சரீரத்தால் கடன் படுகிறீர்கள். மனதை பறிகொடுத்து ஏமாறுபவர்கள் இவ்வுலகில் அதிகம் உண்டு. அன்புக்காகவும், பாசத்துக்காக ஏங்கி ஒருவரை நம்பி உங்களுடைய மனதை பறிகொடுத்து அதனால் உண்டாகக்கூடிய வலியை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால் நீங்கள் மனதால் அவர்களுக்கு கடன் படுகிறீர்கள். பணத்தைக் கூட எப்படியாவது சம்பாதித்து விடலாம், ஆனால் மனதில் ஏற்பட்ட இந்த கடனை ஒருகாலும் அடைக்காமல் மனம் அமைதி கொள்வதில்லை.

- Advertisement -

சம்பந்தமே இல்லாமல் ஜாமின் கையெழுத்து போட போய் அவர்களுடைய பணத்தை நீங்கள் கொடுக்கும் படியான சூழ்நிலைக்கு தள்ளப்படுவது அல்லது ஒருவரிடம் கடனைப் பெற்றுக் கொண்டு செலுத்த முடியாமல் அவர்களுடைய கண்களில் இருந்து ஓடி ஒளிவது போன்ற விஷயங்களை செய்பவர்கள் பணத்தால் கடன் படுகிறார்கள். உங்களுடைய உழைப்பில் எந்த வராத பணத்தையும் நீங்கள் அனுபவித்தால் அதற்குரிய நன்றியை எவ்வகையிலாவது செலுத்தி விட வேண்டும். அப்படி செலுத்த முடியாத எவ்வளவவோ கடன் பட்டிருக்கும் போது நீங்கள் கொடுத்த பணம் ஆனது திரும்ப வரவில்லை என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

உண்மையிலேயே உங்களுக்கு பணம் கொடுக்க முடியாதவர்கள் இருந்தால் நீங்கள் பட்ட கடன்களுக்கு இதை அனுபவிக்கிறீர்கள் என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்களை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவர்கள் உங்களை ஏமாற்றினால் அதற்குரிய தண்டனையை வேறு ஒருவர் மூலம் அவர்கள் அனுபவிப்பார்கள் என்று திடமாக நம்புங்கள். கூடுமானவரை அடுத்தவர்களை நம்பி ஏமாறாமல் சாதுரியமாக இருப்பது ஒன்றே பல புலம்பல்களில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

- Advertisement -