
ஒருவருடைய வாழ்க்கையில் எந்தவிதமான நன்மைகள் நடந்தாலும் அந்த நன்மைகள் நடைபெறுவதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் இருக்க வேண்டும். குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் என்பது ஏற்படும். அவர்களுக்கு நடக்கக்கூடிய சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும். ஒருவேளை குலதெய்வத்தின் அருள் கிடைக்காத பட்சத்தில் எதற்கெடுத்தாலும் தடைகளும் பிரச்சனைகளும் வந்து கொண்டே இருக்கும். இப்படி கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் மார்கழி மாத பௌர்ணமி தினத்தன்று குலதெய்வத்தின் அருளை எப்படி பெற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை தினத்திலும் பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி தினத்திலும் வணங்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள். ஆனால் மார்கழி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று எந்த தெய்வமாக இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை நாம் மேற்கொண்டோம் என்றால் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அந்த வழிபாட்டை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
இந்த வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். சந்திரன் முழுமையாக வானத்தில் தெரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது நாம் எப்பொழுதும் வீட்டில் தீபம் ஏற்றுவது போல் தீபம் ஏற்றி கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய இரண்டு கைகளினாலும் பச்சரிசியை எடுத்து அந்த தாம்பாள தட்டில் போட வேண்டும். மூன்று முறை இப்படி செய்ய வேண்டும். கை நிறைய எடுக்க வேண்டும் என்று இல்லை, ஆனால் இரண்டு கைகளையும் சேர்த்து எடுத்து தாம்பாளத்தில் மூன்று முறை வைக்க வேண்டும்.
பிறகு அதற்கு மேல் தங்களிடம் இருக்கக்கூடிய சில்லறை காசுகளை போட வேண்டும். எண்ணிக்கை இதற்கு முக்கியம் கிடையாது. பிறகு அதற்கு மேல் வேப்ப இலைகளை பரப்ப வேண்டும். அந்த வேப்ப இலைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சிறிது கல்லுப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் மற்றொரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு மலர்களால் அலங்காரமும் செய்து கொள்ள வேண்டும்.
இந்த முறையில் நாம் மார்கழி மாத பௌர்ணமி தினத்தன்று குலதெய்வத்தை நினைத்து தீபமேற்றி வழிபாடு செய்தோம் என்றால் குலதெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அருகில் குலதெய்வ ஆலயம் இருக்கும் பட்சத்தில் நேரில் சென்று வழிபாடு செய்யலாம். ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து இந்த வழிபாட்டை செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் தொடர்ச்சியாக ஒன்பது பௌர்ணமிகள் இந்த தீபத்தை ஏற்றி வேண்டுதலை முன்வைக்க அந்த வேண்டுதல் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே: சிவ கடாட்சம் கிடைக்க மார்கழி பௌர்ணமி வழிபாடு
இந்த ஒரு தீபத்தை முழுமனதோடு குலதெய்வத்தை நினைத்து ஏற்றுபவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு செல்வ செழிப்புடனும் சிறப்பான வாழ்க்கையும் பெறுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.