
வடைகளில் எத்தனையோ வகை இருந்தாலும் இந்த மெதுவடை மட்டும் செய்வதற்கு அத்தனை பக்குவம் வேண்டும். கொஞ்சம் சரியாக மாவு அரைக்கவில்லை என்றால் கூட கல் போல வந்து விடும். சாப்பிடவும் நன்றாக இருக்காது. சரியான பக்குவத்தில் மாவு அரைத்து சுட்டால் இந்த வடை பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் அளவிற்கு அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த சமையல் குறிப்பு பதிவிலும் அப்படி ஒரு உளுந்த வடையை தான் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.
உளுந்த வடை செய்வதற்கு ஒரு கப் உளுந்தை நான்கு முறை தண்ணீர் ஊற்றி அலசி, இரண்டு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து நன்றாக ஊறினால் தான் வடையும் நன்றாக இருக்கும்.
ஊறிய உளுந்தை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அத்துடன் 3 வர மிளகாய்,1/2 டீஸ்பூன் உப்பு, 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள், இவை எல்லாம் சேர்த்த பிறகு தண்ணீருக்கு பதிலாக ஐஸ் க்யூப் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஐஸ் கியூப் சேர்த்து அரைக்கும் போது மாவு அதிக சூடு ஆகாமல் இருக்கும். அது மட்டும் இன்றி மாவும் நன்றாக பொங்கி வரும். அரைத்து எடுத்த மாவை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு அதில் 1 துண்டு இஞ்சி,1 பச்சை மிளகாய் இரண்டையும் சீவி சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சி பச்சை மிளகாயை நறுக்கி சேர்ப்பதை விட, இதைப் போல சீவி சேர்க்கும் போது சுவை இன்னும் கூடுதலாகவே இருக்கும். இத்துடன் 2 ஸ்பூன் அரிசி மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவு சேர்க்கும் போது வடை நல்ல மொறு மொறு என்று வரும். அதே சமயம் அரிசி மாவு அதிகமாக சேர்த்து விடவும் கூடாது வடை கல்லு போல வந்து விடும்.
இவை எல்லாம் சேர்த்த பிறகு 1/4 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம் இரண்டையும் இடி உரலில் போட்டு லேசாக தட்டி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக நறுக்கி நறுக்கி சேர்த்த பிறகு மாவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். மாவை அடிக்கும் பக்குவத்தில் தான் வடை உப்பலாக வரும். எனவே இந்த முறை இதில் மிகவும் அவசியம்.
நீங்கள் தயார் செய்த மாவு சரியான பதத்தில் வந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ள, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மாவை போட்டால் மாவு பிரிந்து வராமல் மேலே பால் போல மிதந்து வர வேண்டும் இது தான் சரியான பக்குவம்.
இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அடுப்பை மீடியம் ஃபிலிம்மில் வைத்து விடுங்கள். இப்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் தண்ணீரில் கைகளை நனைத்து கொண்டு அதன் பிறகு மாவை எடுத்து நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் போட்டு விடுங்கள். இப்படி செய்யும் போது மாவு கையில் ஒட்டாமல் வரும்.
இதையும் படிக்கலாமே: பரோட்டா, பூரி, சப்பாத்தி, ரைஸ் போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிட சப்பு கொட்டும் சுவையில் 10 நிமிடத்தில் கறி சுவையை மிஞ்சும் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு, மறுபடியும் திருப்பி போட்டு இன்னொரு புறமும் சிவந்து வந்த பிறகு வடை எடுத்து விடுங்கள். நல்ல சுவையான மொறு மொறு கிரிஸ்பியான வடை தயார்.