
பூஜை பாத்திரங்களை பூஜை செய்யும் நாள் அன்று சுத்தம் செய்யக்கூடாது. முந்தைய நாளே சுத்தம் செய்ய வேண்டும். இது போல பூஜை பாத்திரங்களை கழுவும் வேளையில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உண்டு. அவற்றை செய்வதால் பூஜை செய்த பலனும் கிடைக்காமல் போய்விடுகிறது. அப்படியான சில விஷயங்கள் என்னென்ன? என்னும் தொகுப்பினை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பூஜை பொருட்களை முடிந்தவரை அன்றைய நாள் சுத்தம் செய்வதை தவிர்ப்பது நல்லது. விளக்கு ஏற்றும் பொழுது விளக்கானது, ஈரப்பதத்துடன் இருக்கக்கூடாது. அதனால் முந்தைய நாளே சுத்தம் செய்து ஈரப்பதம் நீங்கியவுடன் மறுநாள் நீங்கள் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்வது நல்ல பலன் தரும். பூஜை பாத்திரங்களை எல்லாம் அந்த காலத்தில் பின்பக்க வாசலில் நிழல் பட மனையிலோ அல்லது ஏதேனும் ஒரு பெரிய பாத்திரத்திலோ வைத்து தான் சுத்தம் செய்வார்கள். ஆனால் இன்று இருக்கும் பெண்கள் சமையல் பாத்திரங்கள் கழுவும் சிங்கில் நேரடியாக போட்டு பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது உண்டு.
இவ்வாறான தவறுகளை மறந்தும் கூட நாம் செய்யக்கூடாது. கோவிலில் பூஜை பாத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், வீட்டிலும் கொடுக்க வேண்டும். வீடு தானே என்று அலட்சியமாக இருந்தால், பூஜை செய்வதற்கான பலன்கள் கிடைக்காமல் போய்விடும். எச்சில் பாத்திரங்களை போட்டு கழுவும் சிங்கில் ஒருபோதும் பூஜை பாத்திரங்களை போட்டு கழுவ கூடாது, இது மகாபாவம் ஆகும்.
வீட்டில் வேறு இடம் இல்லை என்பவர்கள், அடுப்பங்கரை மேடையின் மீது வைத்து கழுவலாம். ஒரு பெரிய டப்பில் பூஜை பாத்திரங்களை போட்டு வைத்து, ஒவ்வொன்றாக எடுத்து முறையாக கழுவுவது நல்லது. அதே போல பூஜை பாத்திரங்களை கழுவுவதற்கு என்று தனியாக நார் பயன்படுத்துங்கள். எச்சில் பாத்திரங்களை கழுவும் நாரிலேயே பூஜை பாத்திரங்களையும் கழுவாதீர்கள்.
பொதுவாக பித்தளை பூஜை பாத்திரங்கள் ஆக இருந்தாலும் சரி, வெள்ளி பூஜை பொருட்களாக இருந்தாலும் சரி, வெறும் கையால் சுத்தம் செய்வது நல்லது. பூஜை பொருட்களை எளிதாக சுத்தம் செய்ய பீதாம்பரியுடன் சிறிதளவு பயன்படுத்திய மீதமுள்ள புளி கரைசல், ஆப்ப சோடா, எலுமிச்சை சாறு கலந்து எலுமிச்சை தோலால் லேசாக தேய்த்தாலே போதும், பூஜை பொருட்கள் அத்தனையும் பளிச்சிடும். ஒரு வாரம் ஆனாலும் அப்படியே மின்னும், கறுத்தும் போகாது. கழுவிய பூஜை பொருட்களை சிறிதளவு பன்னீர் கலந்த தண்ணீரில் போட்டு வைத்து எடுத்து பின்பு நன்கு ஈரம் இல்லாமல் துடைத்து வைத்து விட்டால், நீண்ட நாட்களுக்கு பூஜை பொருட்கள் பளிச்சென சுத்தமாகவே இருக்கும்.
இதையும் படிக்கலாமே:
சென்னையில் பழமையான திருப்பதி சென்ற பலன் அருளும் திருக்கோவில்.
பூஜை செய்யும் இடத்தை துணியால் மறைத்து வையுங்கள். இது அடிக்கடி தூசு படிவதை தடுக்கும். திறந்த நிலையில் வைப்பதால், அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது இருக்கும். திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் பொதுவாக பூஜை பாத்திரங்களை கழுவுவது மகத்துவமானது. பூஜை விளக்கில் திரியை கருக விடுவது, தீப எண்ணெயில் பச்சை நிறத்தை தேங்க விடுவது போன்ற செயல்களையும் செய்யக் கூடாது. பக்தி பலன் கிடைக்க பக்தியுடன் தெய்வீகமான முறையில் விளக்கேற்றினாலே போதும், பெரிதாக நாம் எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.