
சுக்கிர பகவான் அவதரித்த தினத்தை தான் சுக்கிர ஜெயந்தி என்று கூறுகிறோம். இந்த சுக்கிரஜெயந்தி செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் மட்டுமாவது நாம் சுக்கிர பகவானை வழிபாடு செய்தோம் என்றால் ஒரு வருடம் முழுவதும் நமக்கு பணத்தடைகள் ஏற்படாது, பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது சிறப்பு மிகுந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் சுக்கிர பகவானை வழிபாடு செய்வதும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதும் பணவரவை அதிகரிக்கும் வழிபாட்டு முறைகளாக கருதப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது சுக்கிர பகவான் அவதரித்த தினத்தன்று நாம் சுக்கிர பகவானை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இன்னும் அதிக பலன் கிடைக்கும் என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாள் அன்று சுக்கிர பகவானுக்குரிய மந்திரத்தை சுக்கிர ஹோரையில் சொல்லி வழிபாடு செய்வது நல்ல பலனை தரும்.
இந்த வழிபாட்டை சுக்கிர ஹோரையில் செய்வது என்பது சிறப்பு. அதிலும் குறிப்பாக காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்வது நல்ல பலனை தரும். பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு வாசனை மிகுந்த மல்லிகை பூ, பன்னீர் ரோஜா போன்ற மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக செம்பு அல்லது பித்தளையால் செய்யப்பட்ட ஒரு சொம்பை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சொம்பை சுத்தம் செய்து அதன் வெளிப்புறம் முழுவதும் மஞ்சளை தடவி ஐந்து இடங்களில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அந்த சொம்பில் எச்சில் படாத தண்ணீரை அதன் கழுத்து வரை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் சிறிதளவு மஞ்சள், சிறிதளவு சந்தனம், சிறிதளவு குங்குமம், சிறிதளவு அட்சதை, சிறிதளவு பச்சை கற்பூரம், மூன்று துளசி இலைகள் போன்றவற்றை போட வேண்டும்.
அடுத்ததாக ஒரு தாம்பாள தட்டை எடுத்து அதையும் சுத்தம் செய்து ஐந்து என்ற எண்ணிக்கையில் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சொம்பில் இருக்கும் தண்ணீரில் போடுவதற்காக அட்சதை தயார் செய்தோம் அல்லவா? அந்த அட்சதையில் மீதம் இருக்கும் அட்சதையை அந்த தாம்பாளத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த சொம்பை வைக்க வேண்டும். சொம்பின் கழுத்து பகுதியில் மல்லிகை பூவை சுற்றிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை எண்ணிக்கையில் நாணயங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த நாணயமாக இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு நாணயமாக அந்த சொம்பிற்குள் போடும் பொழுது உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயரை சொல்லிக் கொண்டே போட வேண்டும். அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு என்று தனியாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டு பொங்கலை நெய்வேத்தியமாக செய்து வைக்க வேண்டும். இவை அனைத்தையும் தயார் செய்து வைத்த பிறகு மகாலட்சுமி மற்றும் சுக்கிர பகவானின் மந்திரங்களை கூற வேண்டும்.
ஓம் ஸ்ரீம் மஹாலட்சுமியை நமஹ
ஓம் ட்ராம் ட்ரீம் ட்ரோம் சஹ சுக்ராய நமஹ
மகாலட்சுமியின் மந்திரத்தை 108 முறையோ அல்லது 27 முறையோ கூறலாம். சுக்கிர பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு சாம்பிராணி தூபம் தீப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் இந்த சொம்பு அப்படியே மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக இருக்கட்டும். மறுநாள் காலையில் விளக்கேற்றி சாமி கும்பிடும் பொழுது இந்த சொம்பை எடுத்து அதில் இருக்கக்கூடிய நாணயத்தை மட்டும் தனியாக வைத்துவிட்டு தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த நாணயத்தை மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:சுக்ரனின் அருளை பெற உதவும் பொருட்கள்
இந்த முறையில் வருடத்திற்கு ஒருமுறை சுக்கிர பகவானையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்பவர்களுக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி தாராளமான பண வரவு ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.