ஒருவருடைய பிறந்தநாள் அன்று அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்விப்போம். இது அனைவரின் இல்லங்களிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அப்படி நாளைய தினம் சுக்கிரனுடைய பிறந்தநாளான சுக்கிர ஜெயந்தி வருகிறது. அன்றைய தினத்தில் சுக்கிர பகவானுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்வதன் மூலம் சுக்கிரன் மனம் மகிழ்ந்து நமக்கு அவருடைய பரிபூரண அருளை தருவார். அந்த பொருட்கள் என்ன என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்ரனின் அருளை பெற உதவும் பொருட்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனின் அருள் பரிபூரணமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு பணவரவில் எந்தவித தடைகளும் இருக்காது. சுகமான வாழ்க்கையை வாழ முடியும். வசதியான வாழ்க்கையை வாழ முடியும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சிகரமான வாழ்க்கை நிலவும். இவை அனைத்தும் யார் ஒருவருக்கு பிரச்சினையாக இருக்கிறதோ அவருக்கு சுக்கிரனால் பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். இதை தவிர்ப்பதற்கும் சுக்கிரனின் அருளை பெறுவதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன.
சுக்கிர ஜெயந்தி அன்று அதாவது செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையிலோ அல்லது பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ சுக்கிர பகவானுக்குரிய இந்த பொருட்களை வாங்கி வைத்து நாம் வழிபாடு செய்வதன் மூலம் சுக்கிரனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். சுக்கிரனால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அந்த பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை பெற்ற பொருட்களில் ஒன்றாக திகழ்வதுதான் பாதாம் பருப்பு. ஆறு எண்ணிக்கையில் பாதாம் பருப்பை வாங்கி வைக்க வேண்டும். வீட்டில் ஏற்கனவே பாதாம் பருப்பு இருக்கிறது என்னும் பட்சத்தில் அதைக்கூட எடுத்து வைத்து வழிபாடு செய்யலாம். அடுத்ததாக சுக்கிர பகவானுக்கு உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி வைக்க வேண்டும். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற மரமாக திகழ்வதுதான் அத்திமரம் என்பதால் அத்தி பஜத்தை வாங்கி வைத்து வழிபாடு செய்வது என்பது மிகுந்த பலனை தரும்.
மூன்றாவதாக சுக்கிர பகவானுக்குரிய தானியமாக திகழக்கூடியது மொச்சை. இந்த மொச்சையையும் வாங்கி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். நான்காவதாக சுக்கிரனுக்கு பிடித்தமான மலராக வெண்தாமரை திகழ்கிறது. இன்றைய காலத்தில் வெண்தாமரை கிடைப்பது மிகவும் அரிது என்பதால் வாசனை மிகுந்த மல்லிகை அல்லது முல்லை பூவை வாங்கி சிறிதளவு தாம்பாளத்தில் வைத்து விட்டு மீதம் இருக்கும் மலர்களை மகாலட்சுமி தாயாருக்கு போட்டு வழிபாடு செய்யலாம்.
ஐந்தாவதாக வெள்ளை நிறத்தில் ஆன உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக பால் பாயாசம், கற்கண்டு பொங்கல் போன்றவற்றை செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இயலாதவர்கள் டைமண்ட் கற்கண்டு, சர்க்கரை போன்றவற்றை கூட வைத்து வழிபாடு செய்யலாம். கடைசியாக சுக்கிரனுக்கு மிகவும் உகந்த பொருளாக திகழ்வது பால். சுத்தமான பசும்பாலை காய்ச்சி அதில் ஏதாவது ஒரு இனிப்பை கலந்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு தாம்பாளத்தில் வைத்து சுக்கிர ஜெயந்தி அன்று சுக்கிர பகவானை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:சுக்கிர ஜெயந்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்
இந்த முறையில் நாளைய தினம் சுக்கிரனுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சுக்கிரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.