காய்கறி என்றாலே அதனை சாதத்தில் இருந்து தள்ளி வைத்து பார்க்கும் பலர் இருக்கின்றனர். சாதம், குழம்பு செய்து அதனுடன் அப்பளம் அல்லது வற்றல் பொறித்துக் கொடுத்தாலும் மகிழ்ச்சியாக சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் காய்கறி பொரியல் செய்து கொடுத்தால் போதும் அவர்களுக்கு சாப்பாடு தொண்டையில் எளிதில் இறங்காது. இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காய்கறிகளை ஒதுக்குபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இது சாப்பிடுவதற்கு சுவை குறைவாக இருந்தாலும் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்திகளும், ஊட்டச்சத்துக்களும் இந்த காய்கறிகளில் தான் அதிகமாக இருக்கிறது. எந்த அளவிற்கு இவற்றை உணவுடன் சேர்த்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அவ்வாறு ஹீமோகுளோபின் பிரச்சனையை சரிசெய்யக்கூடிய பீட்ரூட் வைத்து செய்யக்கூடிய ஒரு அருமையான குழம்பை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 2, வெங்காயம் – 1, தக்காளி – 1 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, பீட்ரூட் இவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 5 லிருந்து 7 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இவற்றுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து அனைத்தையும் ஒன்று சேர வதக்கி கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் தனியா தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து அனைத்தையும் வதக்கி விட வேண்டும்.
இவற்றுடன் மீதமுள்ள உப்பு மற்றும் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். பீட்ரூட் நன்றாக வேகும் வரை குழம்பை கொதிக்க விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். பின்னர் இந்த குழம்பை சுடசுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவைக்கு இன்னும் ஒரு பிடி சாதம் அதிகமாக சாப்பிடுவீர்கள்.