கத்திரிக்காய் கொத்சு ஒவ்வொரு ஊர்களில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். அதாவது சில பேர் மசாலா பொருட்களை சேர்த்து இந்த ரெசிபியை செய்வாங்க. சில பேர் எந்த மசாலா பொருட்களும் சேர்க்காமல், இந்த ரெசிபியை செய்வார்கள். இன்று சுலபமான முறையில் வெறும் மிளகாயை போட்டு கத்திரிக்காய் கொத்சு செய்வது எப்படி என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெசிபிக்கு மசாலா பொடி எதுவுமே தேவை இல்லைங்க. அப்படி இருந்தாலும் சுவை சூப்பரா இருக்கும்.
அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் மீடியம் சைஸில் இருக்கும் வெட்டிய பெரிய வெங்காயம் – 1, வரமிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, வெட்டிய தக்காளி பழம் – 2, வெட்டிய கத்தரிக்காய் – 3, வெட்டிய மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு – 2, இந்த எல்லா பொருட்களையும் போட்டு 1 கப் அளவு – தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, சிறிய எலுமிச்சம் பழம் அளவு புளி கரைசலை ஊற்றி, மூடி போட்டு இரண்டு விசில் வைக்க வேண்டும்.
இரண்டு விசில் வைத்தாலே உள்ளே இருக்கும் எல்லா பொருட்களும் நன்றாக வெந்து நமக்கு கிடைத்து விடும். அதன் பின்பு மூடியை திறந்து இந்த எல்லா பொருட்களையும் மசித்து விட வேண்டும். மத்து போட்டு மசிக்கலாம். அல்லது கரண்டியை வைத்து கூட மசித்து கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம். ஆனால் வெங்காயம் தக்காளி உருளைக்கிழங்கு கத்தரிக்காய் அனைத்தும் நன்றாக மசிந்த பின்பு இதற்கு ஒரு தாளிப்பு கொடுக்க வேண்டும். (இது ஒரு கிரேவி மாதிரி கொஞ்சம் திக்கா நமக்கு இருக்க வேண்டும்.)
சிறிய தாளிப்பு கரண்டியில் எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சேர்த்து தாளித்து கொத்சுவோடு சேர்த்து கலந்து, மேலே கொத்தமல்லி தழைகளை தூவினால் சூப்பரான சைட் டிஷ் தயார்.
சுட சுட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, அரிசி உப்புமா, பொங்கல், இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது அசத்தலான சைடிஷ். குறிப்பாக இட்லிக்கு இந்த சைட்டிஷ் அடிச்சுக்க வேற எதுவுமே இருக்க முடியாதுங்க. சுட சுட இட்லிக்கு பக்கத்துல இத ஊத்தி அப்படியே பிசைஞ்சு சாப்பிடுங்க. இதோட டேஸ்ட் தெரியும்.
பின்குறிப்பு: இந்த கொத்சு ரொம்பவும் தனியாகவும் இருக்கக்கூடாது. ரொம்பவும் திக்காகவும் இருக்கக்கூடாது. குக்கரில் சேர்த்த எல்லா பொருட்களும் வெந்து கிடைக்கும் போது உங்களுக்கு ரொம்பவும் திக்காக இருந்தால், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கலாம்.
சில சமயம் குக்கரில் கொத்சுவை வேகவைக்கும் போது தண்ணீரை நிறைய ஊற்றி விடுவோம். அப்போது மீண்டும் இந்த கொத்சுவை அடுப்பில் வைத்து தண்ணீரை சுண்ட வைத்தும் பரிமாறிக் கொள்ளலாம். டக்குனு இரண்டே நிமிடத்தில் ஆரோக்கியமான சுவையான ரெசிபி தேவை என்றால் இதை ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.