இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த சுவையான பூண்டு மிளகாய் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். மூன்று மாதம் ஆனாலும் இதன் சுவையும், மணமும் மாறாமல் அப்படியே இருக்கும்

poondu
- Advertisement -

பலரது வீட்டிலும் இட்லியுடன் சேர்த்து சாப்பிட மிளகாய்பொடி இருக்கும். இப்பொழுதெல்லாம் பலரும் வேலை மிச்சமாகும் என்கின்ற வகையில் மிளகாய் பொடியை கடைகளில் வாங்கிக் ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கின்றனர். ஆனால் கடையில் விற்கும் மிளகாய்பொடி உடம்பிற்குத் தேவையில்லாத சில வேதியல் பொருட்கள் சேர்த்து தான் செய்யப்படுகிறது. இது எப்படியும் வீட்டில் செய்யும் அளவிற்கு சுவையாகவும், பக்குவமாகவும் இருப்பதில்லை. எனவே இந்த பூண்டு மிளகாய் பொடியை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து வைத்துக்கொண்டால், சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அல்லது பொடி தோசை செய்து சாப்பிடலாம். மற்றும் இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். வாருங்கள் இந்த அருமையான பூண்டு மிளகாய் பொடியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பூண்டு – 200 கிராம், உளுத்தம்பருப்பு – ஒரு கப், கடலைப்பருப்பு – அரை கப், எள் – கால் கப், வரமிளகாய் – 15, தனியா – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி, உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 200 கிராம் பூண்டை தோலுரித்து, சுத்தம் செய்து கொண்டு, அதனை தட்டையாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு கப் உளுத்தம் பருப்பை சேர்த்து, பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிறகு அரை கப் கடலைப்பருப்பு சேர்த்து அதனையும் பொன்னிறமாக வறுத்து, அதே தட்டில் சேர்க்க வேண்டும். பின்னர் கால் கப் எள் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து, லேசாக சூடு ஏறி வாசனை வந்ததும் அதனை தட்டிற்க்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் தனியா மற்றும் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் 2 கைபிடி கருவேப்பிலையை சேர்த்து, அதனையும் மொறு மொறுவென வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை அனைத்து விட்டு, கடையின் சூட்டிலேயே அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் மற்றும் ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து லேசாக கிளறி விட்டு, மற்ற பொருட்களுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் மீண்டும் அடுப்பை பற்ற வைத்து, கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து, பூண்டில் ஈரப்பதம் குறைந்து மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான பூண்டு பொடி தயாராகிவிட்டது. இதனை சுட சுட சாதத்துடன் சேர்த்து ,நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். வேண்டும் என்ற நேரத்திலெல்லாம் இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -