முடி உதிர்தல் பிரச்சினை என்பது அனைத்து வயதினரையும் பாடாய்படுத்தும் ஒரு பிரச்சினையாகும். முடி உதிர்தல் என்பது ஆரம்பித்துவிட்டாலே அதனால் மன அழுத்தம் என்பது ஏற்படும். மன அழுத்தத்தினால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்பதை உணராமல் முடி உதிர்வால் மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி அதிக முடி உதிர்வை சந்திக்கும் சூழ்நிலை தான் இன்றைய நிலைமை. இந்த நிலைமையை மாற்றுவதற்கு அதிக சத்து நிறைந்த புரோட்டின் ஹேர் மாஸ்கை தான் நாம் பயன்படுத்த வேண்டும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது எந்த வேலையை செய்தால் நம்முடைய தலைமுடி மிகவும் அடர்த்தியாகவும், வலுவாகவும் இருக்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.
முடி உதிர்வை தடுப்பதற்கு பல ஹேர் மாஸ்க் இருக்கிறது. அவை ஒவ்வொன்றிற்கும் நாம் தனியாக அதற்கென்று நேரம் ஒதுக்கி சில பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்து பயன்படுத்த வேண்டியதாக இருக்கும். அதனாலேயே பல பேர் சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு எந்த ஹேர் மாஸ்கையும் வீட்டில் செய்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமான பதிவாக இருக்கும்.
முடி உதிர்வதை தடுப்பதற்கு புரோட்டின் சத்து மிகவும் அவசியமான ஒன்றாக திகழ்கிறது. இந்த புரோட்டின் சத்தை முடித்து தருவதற்கு நாம் முட்டையை பயன்படுத்துவோம். முட்டையின் வெள்ளை கருவை மட்டும் பயன்படுத்தினால் போதும் என்று பல மாஸ்க் இருக்கின்றன. ஆனால் அதை உபயோகப்படுத்தும் பொழுது ஒருவித வாடை வரும். அதை சில பேரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
அப்படி முட்டைக்கு மாற்றாக நாம் பயன்படுத்த போகும் புரோட்டின் ஹேர் மாஸ்க் தான் உளுந்து ஹேர் மாஸ்க். முட்டையில் எந்த அளவுக்கு ப்ரோட்டீன் இருக்கிறதோ அதற்கு இணையாக உளுந்திலும் இருக்கிறது. இதற்கு ஒரு கப் அளவிற்கு உளுந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 2 டீஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டு நன்றாக கழுவி 6 – 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
உளுந்தில் இருக்கக்கூடிய ப்ரோட்டின் சத்தால் முடியின் வேர்க்கால்கள் வலுவடைகிறது. பிளவு பட்ட முடிகள் சரியாகின்றன. மேலும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. வெந்தயத்தை பற்றி நமக்கு ஏற்கனவே தெரியும். வெந்தயம் குளிர்ச்சித் தன்மை மிக்கது. அதிக சூட்டினால் முடி உதிர்தலை ஏற்பட்டால் அதை தடுக்க உதவுகிறது. பொடுகு போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்கிறது. மேலும் முடி உதிர்வதை குறைக்கிறது.
ஊறிய உளுந்து வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஊறவைத்த தண்ணீரையே உபயோகப்படுத்தி அரைக்க வேண்டும். பிறகு அதை தலையின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 20 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் தலையை அலச வேண்டும். ஷாம்பூ உபயோகப்படுத்தக் கூடாது.
இதையும் படிக்கலாமே: இந்த ஒரு மாவை வைத்து ஃபேஸ் பேக் போட்டால் ப்ளீச்சிங்காக பியூட்டி பார்லர் பக்கமே செல்ல மாட்டீர்கள்
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது உளுந்த மாவில் ஒரு கையளவு மட்டும் எடுத்துக் கொண்டு அதை நம் தலையில் தடவி 20 நிமிடம் கழித்து அலசினாலே போதுமல்லவா? தனியாக ஹேர் பேக் தயார் செய்ய முடியாதவர்கள் இப்படி செய்து உங்கள் தலைமுடியை வலுவாக்குங்கள்.