பெண்கள் ஆசைப்பட்டு வாங்கும் பொருட்களில் மிகவும் முக்கியமான அதேசமயம் முதலிடத்தை பிடிக்கக்கூடிய பொருள்தான் புடவை. புடவைகளில் பல வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகையான புடவைகளையும் பெண்கள் விரும்பி விரும்பி பார்த்துப் பார்த்து வாங்குவார்கள். அதிலும் குறிப்பாக பட்டுப் புடவை மிகவும் முக்கியமானது. இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் பட்டுப் புடவையை எப்படி பராமரித்தால் அதன் வாழ்நாள் அதிகரிக்கும் என்று பார்ப்போம்.
பொதுவாக திருமண விழா என்று வந்தால் பட்டு புடவைக்கு தான் முதலிடம் கொடுப்போம். சிலர் நெருங்கிய உறவுகளின் திருமணத்திற்காக பட்டுப் புடவையை புதிதாக எடுத்து பயன்படுத்த ஆசைப்படுவார்கள். இன்னும் சிலரோ கோவில்களில் கும்பாபிஷேகம் அல்லது முக்கியமான விழாக்கள் நடக்கும்பொழுது புதிதாக பட்டுப் புடவை வாங்கி அணிய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இவ்வாறு ஆசைப்பட்டு பட்டுப் புடவைகளை தேர்ந்தெடுத்து அதை ஒரே ஒருமுறை மட்டும் உபயோகப்படுத்தி விட்டு அதை அப்படியே போட்டு விடுவார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த பட்டுப்புடவையின் மதிப்பும், வாழ்நாளும் குறைந்து விடுகிறது. மிகவும் எளிமையான முறையில் நாமே நம்முடைய பட்டுப் புடவைகளை பராமரிக்க முடியும் என்கிற சூழ்நிலையில் எதற்காக அவ்வளவு பணம் கொடுத்து வாங்கிய புடவையை வீணாக்க வேண்டும்.
பொதுவாக பட்டுப் புடவைகளை நாம் புதிதாக வாங்கும் பொழுது ஒரு காட்டன் பாக்ஸில் வைத்து கொடுப்பார்கள். சிலர் அந்த காட்டன் பாக்ஸில் இருந்து புடவையை வெளியில் எடுக்காமல் அதற்குள்ளேயே பல மாதங்களானாலும் வைத்திருப்பார்கள். அப்படி செய்யாமல் வாங்கி வந்த உடனேயே ஒரு காட்டன் பைக்குள் வைக்க வேண்டும். சிலர் பீரோவிற்குள் ஆங்கரில் பட்டுப்புடவைகளை மாட்டி தொங்கவிடுவார்கள். அவ்வாறு செய்ய கூடாது. ஏனெனில் பட்டுப் புடவைகளில் இருக்கும் ஜரிகைகளின் எடையால் ஆங்கர் மடிப்பில் இத்து போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
பட்டு புடவையை வீட்டில் துவைப்பதற்கு பதிலாக ட்ரை கிளீனிங்கு கொடுப்பதே சிறப்பானது. ஏனெனில் அவர்கள் பட்டுப்புடவையின் தரத்திற்கு ஏற்றவாறு பக்குவமாக துவைப்பார்கள். அந்தப் பக்குவம் நமக்கு தெரியாது. அடுத்ததாக பட்டுப் புடவைகளை கட்டி எங்காவது விசேஷத்திற்கு சென்று வந்த பிறகு அதை கழட்டி அப்படியே பீரோவில் வைக்காமல் காற்றோட்டமான இடத்தில் வீட்டிற்குள்ளேயே போட்டு வேர்வை வாடை போகும் அளவிற்கு உலர்ந்த பிறகு அதை எடுத்து வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதேபோல் பட்டுப் புடவைகள் வைக்கும் இடத்தில் ஒரு சிறிய கவரில் சிறுசிறு ஓட்டைகளாக போட்டு அதற்குள் பதினைந்து கிராமை போட்டு வைத்தால் பட்டுப்புடவையில் எந்தவித பூச்சிகளும் வராது. அதே சமயம் எந்தவித கெட்டவாடைகளும் ஏற்படாது. ஒரு புடவையையும் மற்றொரு புடவையையும் ஒன்றாக சேர்த்து வைக்கக்கூடாது. இரண்டிற்கும் இடையில் ஏதாவது ஒரு காட்டன் துணியையோ அல்லது காட்டன் பையையோ போட்டு தான் வைக்க வேண்டும். ஏனென்றால் சில புடவைகளில் இருக்கக்கூடிய சாயம் மற்ற புடவைகளில் ஒட்டுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதையும் படிக்கலாமே: சாயம் போன உங்க பேவரிட் டிரெஸ்ஸை டக்குனு புதுசு போல மாத்த சூப்பர் ஐடியா
இந்த எளிய குறிப்புகளை முறையாக பின்பற்றி ஆசைப்பட்டு வாங்கிய பட்டுப்புடவைகளை நன்றாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.