பெண்கள் என்றாலே மங்களகரமாக இருப்பார்கள் என்ற ஒரு நிலை இருந்தது. காரணம் அவர்கள் மஞ்சள் பூசி பொட்டு வைத்து குங்குமம் வைத்து பூக்களை தலையில் சூடி இருப்பார்கள். எந்தவித அலங்காரமும் செய்யாமல் வெறும் மஞ்சளை மட்டுமே பூசி தங்களின் அழகை வெளிப்படுத்தினார்கள். அந்த அழகிற்கு இணையாக இன்றைய காலத்தில் என்ன தான் பியூட்டி பார்லர் சென்றாலும் வருவது கிடையாது. அப்படிப்பட்ட அழகை பெறுவதற்கு பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கிழங்கை எப்படி உபயோகப்படுத்துவது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
மஞ்சளில் நம்முடைய சருமத்திற்கு நன்மை தரக்கூடிய பொருட்கள் இருக்கின்றது. மஞ்சளை நாம் தொடர்ச்சியாக உபயோகப்படுத்தும் பொழுது முகத்தில் பருக்கள் ஏற்படுவது குறையும். மேலும் பூனை முடிகள் என்று கூறக்கூடிய முடிகள் உதிர்ந்து விடும். அது மட்டுமல்லாமல் முகத்திற்கு ஒருவித பிரகாசத்தை தரக்கூடிய பொருளாகவும் இந்த மஞ்சள் திகழ்கிறது. அதனால் தான் அன்றைய காலத்தில் இருந்த பெண்கள் அனைவரும் தினமும் குளிக்கும் பொழுது மஞ்சள் தேய்த்து குளிப்பார்கள். காலப்போக்கில் இது நடைமுறையில் இல்லாமல் போய்விட்டது. இதை சரி செய்வதற்கும் மஞ்சளுக்குரிய அனைத்து விதமான நன்மைகளை பெறுவதற்கும் ஒரு எளிய வழிமுறையை பார்க்கப் போகிறோம்.
பொங்கல் அன்றைக்கு நாம் பொங்கல் பானையில் கட்டுவதற்காக மஞ்சள் வாங்குவோம். பொங்கல் முடிந்த பிறகு அதை அப்படியே தூக்கிப் போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி தூக்கிப் போடாமல் அந்த கிழங்கை மட்டும் தனியாக எடுத்து மண்ணில்லாமல் சுத்தம் செய்து அதன் மேல் தோலை நீக்கிவிட்டு கேரட் உரசுவது போல் உரசி கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு நாம் மஞ்சளை உரசி எடுத்து இருக்கிறோமோ அதே அளவிற்கு சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக இரண்டு ஸ்பூன் துருவிய மஞ்சள் இருந்தால் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முதலில் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு துருவிய மஞ்சளை அதில் சேர்க்க வேண்டும். மஞ்சள் எண்ணெயில் நன்றாக வெந்து சுருங்கும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து விட வேண்டும். அவ்வாறு சுருங்கும் பொழுது அந்த எண்ணையின் நிறம் மஞ்சளாக மாறிவிடும். நன்றாக சுருங்கிய பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அதை ஆறவைத்து வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயில் மஞ்சளின் அனைத்து விதமான மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கும் என்பதால் சாதாரணமாக அடிபட்ட இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இந்த எண்ணெயை தடவும் பொழுது நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டு விரைவிலேயே அந்த காயம் ஆறிவிடும். இதை நாம் குளிப்பதற்கு முன்பாக உடல் முழுவதும் தேய்த்து கால் மணி நேரம் வைத்திருந்து பிறகு பச்சைப் பயிறு மாவு அல்லது கடலை மாவு அல்லது சிகைக்காய் தூள் இவை மூன்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தேய்த்து குளித்து வர உடல் முழுவதும் தங்கம் போல் மின்ன ஆரம்பிக்கும்.
உடலில் இருக்கக்கூடிய கருமை நிறங்கள் அனைத்தும் மாறும். மேலும் சருமத்தில் ஏற்படக்கூடிய சரும பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். முகப்பருக்கள் குறைய ஆரம்பிக்கும். புதிதாக முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இருந்த தழும்புகளோ வடுக்கலோ இந்த எண்ணெயை நாம் தினமும் பயன்படுத்தும் பொழுது படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: தலைமுடி ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் கற்றாழை எண்ணெய்
என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கி குப்பையில் போடும் இந்த மஞ்சள் கிழங்கின் அற்புதமான சக்திகளை உணர்ந்து அதை நாம் பயன்படுத்தி நம் உடலை தங்கம் போல் ஜொலிக்க வைக்கலாம்.