நம்முடைய தமிழர்களின் பாரம்பரிய உணவு பட்டியலில் இட்லியும் தோசையும் கண்டிப்பான முறையில் இடம்பெறும். காலையிலும் இரவிலும் இட்லி அல்லது தோசையை ஊற்றி அன்றைய நாளை சமாளிக்கும் பல குடும்பத் தலைவிகளும் இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் மாவரைக்க வேண்டிய சிரமம் கூட இல்லாமல் கடையிலேயே எளிமையான முறையில் மாவை வாங்கி எளிதில் தங்களின் சமையல் வேலையை முடிக்கிறார்கள். இப்படி செய்வதற்கு பதிலாக இதே தோசையை ஆரோக்கியமான தோசையாக மாற்றுவது எப்படி என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
அதிகளவு புரதச்சத்து மிகுந்ததாக திகழக்கூடியது தான் கருப்பு கொண்டை கடலை. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாக திகழ்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. கருப்பு கொண்டை கடலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ஹீமோகுளோபின் உற்பத்தியை துரிதப்படுத்துகிறது. மேலும் நம்முடைய தலைமுடிக்கு கருப்பு கொண்டை கடலை மிகவும் ஒரு ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. அப்படிப்பட்ட கருப்பு கொண்டை கடலையை வைத்து தோசை செய்யும் முறையை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு கொண்டைகடலை – ஒரு கப்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- பச்சரிசி – ஒரு கப்
- இஞ்சி – ஒரு துண்டு
- பச்சை மிளகாய் – 2
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- பூண்டு – 2 பல்
- கொத்தமல்லி – சிறிதளவு
- பெருங்காயத்தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையும் வெந்தயத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்த பிறகு மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதே போல் பச்சரிசியையும் சுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
எட்டு மணி நேரம் கழித்து ஊற வைத்த கொண்டைக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி. பூண்டு. பச்சை மிளகாய். கொத்தமல்லி. உப்பு. பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்த இந்த கொண்டைக்கடலை மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றி விட்டு பச்சரிசியை தனியாக போட்டு கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பச்சரிசியை நைசாக அரைத்து விட்டால் தோசை ஊற்ற வராது என்பதால் ரவை பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரிசி மாவை நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கொண்டக்கடலை மாவுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கால் மணி நேரம் இதை அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.
கால் மணி நேரம் கழித்து எப்போதும் போல் அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் காய்ந்ததும் கொண்டைக்கடலை மாவு எடுத்து தோசை ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்து பரிமாறி விடலாம். ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை தோசை தயாராகி விட்டது.
இதையும் படிக்கலாமே: வெள்ளை பூசணிக்காய் அல்வா செய்முறை
நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பொருட்களை நாம் தான் சிறிது சிறிதாக நம்முடைய உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை நம்மால் பாதுகாக்க முடியும்.