காலை உணவு என்றதும் நம் நினைவிற்கு வருவது இட்லி, தோசை, பொங்கல் தான் இதற்கு மாற்றாக எப்பொழுதாவது இடியாப்பம், புட்டு, உப்புமா என்று செய்வோம். இதுவே நம்முடைய அன்றாட உணவு வழக்கத்தில் வரக்கூடிய டிபன் ஐட்டமாக இருக்கிறது. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு என்று தனியாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டிய சூழ்நிலையில் உண்டாகும்.
இதற்கு பதிலாக அல்லது மாற்றாக அவலை பயன்படுத்தி அவல் மசாலா உருண்டையை ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். சுவையும் அற்புதமாக இருக்கும் ஆரோக்கியமான உணவாகவும் திகழும். இந்த அவல் மசாலா உருண்டையை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
அவல் – 1 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 1/2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 1/2 ஸ்பூன்
உளுந்து – 2 ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கருவேப்பிலை – 2 கொத்து
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 2,
சீரகம் – 1 ஸ்பூன்,
தக்காளி – 1
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அவலை சேர்த்து சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவி கொள்ளுங்கள். பிறகு அவல் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 20 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். இப்பொழுது மிக்ஸி ஜாரை எடுத்து நாம் ஊற வைத்திருக்கும் . அவலில் பாதி அளவை மட்டும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த இந்த அவலை முழு அவலுடன் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக பிணைந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒன்றரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 1/2 ஸ்பூன் கடுகு, 1 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து இவற்றை சேர்க்க வேண்டும்.
கடலைப்பருப்பு, உளுந்தும் சிவந்த பிறகு இதில் பெருங்காயம், காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம் இவை அனைத்தையும் சேர்த்து வெங்காயம் நன்றாக வேகும் அளவிற்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வெந்த பிறகு இவை அனைத்தையும் நாம் பிணைந்து வைத்திருக்கும் அவலில் சேர்த்து நன்றாக கலந்து உருண்டையாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் நாம் உருட்டி வைத்திருக்கும் அவல் உருண்டைகளை எடுத்து வைத்து ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இந்த அவல் உருண்டைகளை தனியாக எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
மறுபடியும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரை ஸ்பூன் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு கொத்து கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு ஒரு தக்காளியை நைசாக அரைத்து அதனுடன் சேர்க்க வேண்டும்.
பிறகு ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து இதற்கு தேவையான அளவு உப்பையும் சேர்த்து மிளகாய் தூள் பச்சை வாடை போகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். பச்சை வாடை போன பிறகு நாம் வேகவைத்து எடுத்திருக்கும் அவல் உருண்டைகளை இதனுடன் சேர்த்து அந்த உருண்டைகளில் மசாலா அனைத்தும் சேர்வது போல் பிரட்டி விட்டு கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நெல்லிக்காய் தொக்கு செய்முறை
இந்த அவல் மசாலா உருண்டையை காலை உணவாகவும், மாலை சிற்றுண்டியாகவும் தரலாம். அருமையான சுவை கொண்ட இந்த அவல் மசாலா உருண்டையை ஒரு முறை செய்து பார்த்து ருசியுங்கள்.