உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நபர்கள் கண்டிப்பாக தங்களுடைய உணவு பழக்க வழக்கத்தில் சிறுதானியங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வார்கள். அப்படியே அதிக அளவில் சேர்க்கக்கூடிய சிறுதானியங்களை ஒரே மாதிரி சேர்க்காமல் அவ்வப்பொழுது வேறு வேறு வடிவங்களில் செய்து தருவதன் மூலம் எந்தவித சலிப்பும் இல்லாமல் வித்தியாசமான சுவையிலும் சாப்பிடலாம். அந்த வகையில் கம்பை பயன்படுத்தி கம்பு உப்புமா எப்படி தயார் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
உடல் குளிர்ச்சியை தரக்கூடிய இந்த கம்பை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதில் கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. கம்பில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கிறது. சிறிதளவு மட்டும் கம்பை உண்டாலே வயிறு நிரம்பும் அளவிற்கு உணர்வு ஏற்படும் என்பதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கம்பை தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- கம்பு ரவை – 1 டம்ளர்
- தண்ணீர் – 3 டம்ளர்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 4 ஸ்பூன்
- உளுந்து – 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 4
- பச்சை மிளகாய் – 6,
- இஞ்சி – சிறிய துண்டு
- கருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
முதலில் கம்பை சுத்தம் செய்து விட்டு தண்ணீர் ஊற்றி கழுவி ஒரு துணியை விரித்து நிழலில் உலர்த்தி விடுங்கள். தண்ணீர் சுத்தமாக காய்ந்ததும் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் கம்பு ரவை. இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து இந்த ரவையில் இருந்து ஒரு கிளாஸ் அளவிற்கு கம்பை போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கம்பு வைத்திருக்கும் பாத்திரத்தை குக்கருக்குள் வைத்து விசில் போட்டு மூடி விட வேண்டும். பத்து விசில் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்து, கடலைப்பருப்பு, கடுகு இவற்றை சேர்க்க வேண்டும். உளுந்தும், கடலை பருப்பும் நன்றாக சிவந்த பிறகு அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை இவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் நாம் வேக வைத்திருக்கும் கம்பு ரவையை அதில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். உப்புமா பதத்திற்கு வரும்வரை குறைந்த தீயில் வைத்து அடிக்கடி கிண்டி விட வேண்டும். உப்புமா பதத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். கம்பு உப்புமா தாயார் ஆகிவிட்டது. இதற்கு தேங்காய் சட்னி மிகவும் அருமையாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே: அவல் மசாலா உருண்டை செய்முறை
மிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த கம்பு உப்புமாவை நாமும் செய்து சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் இருப்போம்.