பணம் என்பது நம்முடைய வாழ்க்கையில் எந்த அளவுக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது என்பதை நாம் அனைவருமே உணர்ந்திருப்போம். பணம் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையே நிலவுகிறது. எதற்கெடுத்தாலும் பணம் என்ற ஒன்றுதான் முதலில் வந்து நிற்கிறது. வீட்டில் சண்டைகள் ஏற்பட்டாலும் அதற்கு காரணம் பண பற்றாக்குறையாக தான் இருக்கும்.
இப்படி சண்டைகள் ஏற்படுவதனாலேயே பண பற்றாக்குறையை தவிர்ப்பதற்காக கடன் வாங்கி அந்த கடனால் மேற்கொண்டு வீட்டில் பிரச்சனைகள் ஏற்படுவதை பலரும் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருப்பார்கள். அப்படிப்பட்ட பணத்தை அதிகளவு பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு செவ்வாய்க்கிழமை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரை நினைத்து கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாவாக திகழக்கூடிய செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்க்கிழமையில் நாம் வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளால் கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கி பணவரவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது பரிகாரத்தை பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் செவ்வாய் ஹோரையில் தான் செய்ய வேண்டும். இதற்கு சதுரமாக இருக்கக்கூடிய சிவப்பு நிற துணி வேண்டும். சிவப்பு என்பது செவ்வாய் பகவானை குறிக்கக் கூடியதாக திகழ்கிறது. இதில் ஒன்பது கொட்டை பாக்கை வைக்க வேண்டும். கொட்டைப்பாக்கு என்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும். மேலும் 9 என்று எண்ணிக்கை செவ்வாய் பகவானுக்குரிய எண்ணாக திகழ்கிறது. பிறகு இதனுடன் ஒரு ரூபாய் நாணயமோ அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தையோ வைக்கலாம்.
தங்களால் இயலும் பட்சத்தில் தங்க நகை ஏதாவது ஒன்றையோ அல்லது வெள்ளி நகை ஏதாவது ஒன்றையோ வைக்கலாம். அப்படி எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. ஏதாவது ஒரு நாணயத்தை மட்டும் வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த மூட்டையை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய குலதெய்வம், மகாலஷ்மி தாயார், செவ்வாய் பகவான், செவ்வாய் பகவானின் அதிபதியான முருகப்பெருமான் இவர்கள் அனைவரையும் மனதாற நினைத்துக் கொண்டு “கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும். அந்த கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு போதுமான அளவு பணவரவு ஏற்பட வேண்டும். மேலும் புதிதாக எந்தவித கடனும் வாங்காமல் இருக்க வேண்டும்” என்ற வேண்டுதலை மனதார வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த மூட்டையை அப்படியே எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டில் நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு டப்பாவிற்குள் அடியில் வைத்து விட வேண்டும். வெளியில் இருந்து பார்க்கும் பொழுது உள்ளே இந்த மூட்டை இருப்பது தெரியக்கூடாது. இந்த மூட்டையை மாற்ற வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்களுடைய விருப்பம் தான் எப்பொழுதெல்லாம் நீங்கள் உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தை சுத்தம் செய்து புதிதாக கொட்டுகிறது அப்பொழுதெல்லாம் மாற்றலாம்.
இதையும் படிக்கலாமே: ஆனி மாத கடைசி நாள் வழிபாட்டு முறை
செவ்வாய் பகவான் மற்றும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பொருட்கள் அனைத்தையும் வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு இவர்கள் அனைவரின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். கடன் தீரும்.